Published : 10 Dec 2014 10:15 AM
Last Updated : 10 Dec 2014 10:15 AM

இன்று அன்று | 1901 டிசம்பர் 10: நோபல் பரிசுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன

ஸ்டாக்ஹோம் நகரில் 1833-ல் பிறந்தவர் ஆல்ஃபிரெட் நோபல். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது குடும்பம் ரஷ்யாவுக்குக் குடி பெயர்ந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை அவரது தந்தை நடத்தினார். ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் படிப்பைத் தொடர்ந்த நோபல், வேதியியலில் சிறந்து விளங்கினார். பின்னர், ஸ்வீடனுக்குத் திரும்பிய நோபல், வெடிமருந்து ஆராய்ச்சிக்காக ஒரு சோதனைக்கூடத்தை நிறுவினார்.

தனது ஆராய்ச்சியின் விளைவாக, நைட்ரோகிளிசரின் என்ற வேதிப் பொருளின் வெடிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார். மேம்படுத்தப்பட்ட வடிவிலான வெடிக்கச் செய்யும் கருவியையும் (டெட்டனேட்டர்) அவர் கண்டறிந்தார்.

1864-ல் அவரது தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அவரது தம்பி உட்பட பலர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, இன்னும் பாதுகாப்பான வெடி பொருளைத் தயாரிக்கும் பணியில் நோபல் தீவிரமாக இறங்கினார். அதன் பின்னர், அவர் கண்டுபிடித்ததுதான் ‘டைனமைட்’. தனது கண்டுபிடிப்புக் கான காப்புரிமை மூலம் ஏராளமான பணத்தைச் சம்பாதித்தார். சரி, வெடிமருந்து வியாபாரி எப்படி அமைதி விருதுக்கு அஸ்திவாரமிட்டார்? அதற்கான பின்னணி இதுதான்.

அவரது அண்ணன் லுட்விக் நோபல் 1888-ல் பிரான்ஸில் மரணமடைந்தார். ஆனால், ஆல்ஃபிரெட் நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, ஒரு பிரெஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டது. ‘மரண வியாபாரி மரணம்’ என்று அந்த நாளிதழ் வைத்த தலைப்பு அவரைக் கலங்கடித்தது. இதையடுத்து, “மனித குலத்துக்கு மிகப் பெரும் அளவில் பயனளிக்குமாறு செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும்” என்று தனது உயிலில் ஆல்ஃபிரெட் நோபல் குறிப்பிட்டார்.

டிசம்பர் 10, 1896-ல் அவர் மரணமடைந்தார். அவர் இறந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் முதன்முதலில் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ல் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

- சரித்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x