Published : 25 Dec 2014 09:54 AM
Last Updated : 25 Dec 2014 09:54 AM
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்காற் றிய வீரரும், கல்வியாளருமான மாளவியாவின் பிறந்த தினம் இன்று (25 டிசம்பர்). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் பிறந்தவர். தந்தை சமஸ்கிருத வித் வான். ஐந்து வயது முதலே மாள வியாவும் சமஸ்கிருதம் கற்றார். பள்ளிப் பருவத்தில் இவர் எழுதிய கவிதைகள் பள்ளி இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாயின.
கல்வி உதவித் தொகையில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். சில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
சிறு வயது முதலே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுவந்தார். ஹிந்து மஹாசபை இயக்கத்தை நிறுவினார். பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க இதன் அங்கத்தினர் போராடினர்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பேற்றுள்ளவர். லக்னோ உடன்பாட்டின்படி முஸ்லிம்களுக்குத் தொகுதி ஒதுக்கீட்டையும், கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பதையும் எதிர்த்தார்.
1920களில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.1928-ல் சைமன் குழுவுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார். 1932-ல் சுதேசி இயக்கத்திற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
ஆசியாவிலேயே பெரிய பல்கலைக்கழகமாக விளங்கும் பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர் இவர். இதற்காக நிதி திரட்டுவதற்காக ஹைதராபாத் நிஜாமிடம் சென்றார். அவருக்கோ ஒரு ஹிந்து கல்வி நிறுவனத்தை நிறுவ இவர் தன்னிடம் நிதி கேட்டது பிடிக்கவில்லை. கோபத்துடன் தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி இவர் மீது வீசினார். சற்றும் அமைதி இழக்காத இவர், அவருக்கு நன்றி கூறிவிட்டு அதை வெளியே எடுத்து வந்து ஏலம் விடத் தொடங்கினார். ஏலம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மிகவும் சொற்ப விலைக்கு வாங்கப்பட்டுவிடலாம் என்பதை ஒரு சிப்பாய் மூலம் தெரிந்துகொண்ட நிஜாம், தன் மானம் பறிபோகாமல் இருக்க அவனிடம் நிறைய பணம் கொடுத்து அதிகபட்ச விலைக்கு அதை வாங்கி வரச்சொன்னார். அந்தத் தொகையை நிஜாமின் நன்கொடையாகச் சேர்த்துக்கொண்ட மாளவியா, நிஜாமைச் சந்தித்து இதற்காக நன்றியும் கூறினாராம்!
இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1919 முதல் 1938 வரை பணியாற்றினார். 1922-ல் சவுரி சவரா நிகழ்வில் கைது செய்யப்பட்ட ஏராளமான போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக வாதாடி அவர்களில் பெரும் பான்மையானவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பதவி வகித்தார். இவரது முயற்சியால் இதன் இந்திப் பதிப்பு 1936முதல் வெளியானது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்ற மரபை உடைத்தெறியப் பாடுபட்டார்.
விடுதலைப் போராட்ட வீரர், சமூக நீதிப் போராளி, வழக்கறிஞர், கல்வியாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் மதன் மோகன் மாளவியா, 85-ஆம் வயதில் காலமானார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT