Published : 29 Dec 2014 11:01 AM
Last Updated : 29 Dec 2014 11:01 AM

சார்லஸ் குட்இயர் 10

வர்த்தக ரீதியாக ரப்பரைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவில் பிறந்தவர். உலோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள் தயாரிக்கும் அப்பாவின் தொழிற்சாலையில் அவருக்கு உதவியாக இருந்தார். தொழில் நஷ்டம் அடைந்தது.

 மரத்தில் இருந்து கிடைக்கும் பாலைக் கொண்டு ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டிருந்த நேரம் அது. இவருக்கும் அதில் ஆர்வம் பிறந்தது. புதுவகை பூட்ஸ், மழை கோட் என பல பொருட்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், தட்பவெப்பம் மாறினால் இறுகி விரிசல் விடும் அல்லது கெட்டுப் போய்விடும். இதனால் பலரும் அந்த தொழிலைக் கைவிட்டனர்.

 குட்இயருக்கு பின்வாங்க இஷ்டமில்லை. எல்லா காலநிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய ரப்பர் பொருட்களைத் தயாரிப்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார். டர்பன்டைன் உட்பட பல பொருட்களைப் பயன்படுத்தி ரப்பரை மென்மையாக்கும் நுட்பத்தை ஆராய்ந்தார்.

 புதுவிதமான ரப்பர் தயாரானதும் சுருட்டி வைத்துவிட்டு காத்திருப்பார். குளிர்காலம் வந்தவுடன் அதில் விரிசல் உண்டாகிறதா என்று சோதிப்பார். மீண்டும் தோல்வியே கிடைத்தது.

 தொடர் தோல்விகளால், சொத்துக்களை இழந்து ஏழையானார். ஆராய்ச்சியை மட்டும் நிறுத்தவில்லை. ஒருநாள் ரப்பரில் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். பருவநிலை மாறக் காத்திருந்தார். தற்காலிகமாக வெற்றி கிடைத்தது. அதற்கு காப்புரிமையும் கிடைத்தது. உலக அளவில் பாராட்டு குவிந்தது. அமெரிக்க அஞ்சல் துறைக்கு புதிய ரப்பர் பைகள் தயாரிக்க ஆர்டரும் கிடைத்தது.

 சில மாதங்களில், அந்தப் பைகள் ஒட்டிக்கொள்கின்றன என்ற புகாருடன் திரும்பி வந்தன. இதில் நொந்துபோனார் குட்இயர். கேலி, கிண்டலுக்கு ஆளானார். ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை.

 ஒருநாள் ரப்பரை ஆய்வு செய்யும்போது கொஞ்சம் கந்தகமும், வெள்ளைக் காரீயமும் அதில் தவறி விழுந்துவிட்டது. அப்போது அதை அவர் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது, தோல் போல மென்மையாக மாறியிருந்தது ரப்பர். நன்கு வளைந்து கொடுத்தது. ஒட்டவும் இல்லை. அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரது ஆராய்ச்சி சரியான திசையில் பயணிக்கத் தொடங்கியது. பரம ஏழையானபோதிலும், ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இறுதி வெற்றி கனிந்தது.

ரப்பர் பாலுடன் கந்தகம் கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் என்ற வகை ரப்பர் தயாரிக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாத ரப்பரைத் தயாரிக்க முடியும் என நிரூபித்தார்.

 அவரது இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்துக்கும் அடித்தளம். 1844-ல் அந்த முறைக்கு வல்கனைசேஷன் என்று பெயரிட்டு, காப்புரிமையைப் பதிவு செய்தார்.

 மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்ட பல பொருட்களைத் தயாரிக்க ரப்பர் தொழில்நுட்பம் உதவுகிறது. அதை கண்டறிந்த மகத்தான சாதனையாளர் சார்லஸ் குட்இயர் 59-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x