Published : 13 Dec 2014 11:08 AM
Last Updated : 13 Dec 2014 11:08 AM
அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
இங்கிலாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். வாசிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால், கிடைக்கும் பணத்தில் புத்தகம் வாங்க தாராளமாக செலவழித்தனர் பெற்றோர்.
இவர், அப்பாவின் பிரியமான தோழர். ‘என் அப்பா அசாதாரண மன வலிமை படைத்தவர். அவரை அறிந்தவர்கள் அனைவரிடத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, ஆக்ஸ்போர்டு, வட்ஹம் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. வரலாறு பயின்றார்.
1938-ல் பட்டப்படிப்பு முடித்த பிறகு, இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த நேரத்தில், ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டதால் இது நிராசையானது.
அப்போது ‘ஹிஸ்ட்ரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலிடம் துணை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 20-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிபிசி நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். போர் முடிந்த பிறகு வரலாற்று ஆராய்ச்சிக் கல்விக்காக ஆக்ஸ்போர்டு திரும்பினார். லண்டன் செயின்ட் கேத்தரீன் கல்லூரி நிறுவனர்களில் இவரும் ஒருவர். தனி ஆளாக பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்த கல்லூரி வளர்ச்சிக்காக 2 மில்லியன் டாலர் நிதி திரட்டினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல் முழுநேர துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கம்பீரமாக தோற்றமளித்ததால் சக பேராசிரியர்களும் மாணவர்களும் இவரை ஒரு ஹீரோபோல பார்த்தனர். விதிகளுக்குக் கட்டுப்படாமல் இருந்த பல மாணவர்களை தன் ஆளுமையால் கட்டுப்படுத்தினார்.
ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை ‘ஹிட்லர்: எ ஸ்டடி இன் டைரனி’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி 1952-ல் வெளியிட்டார். ‘ஹிட்லர் ஒரு சந்தர்ப்பவாத சாகச விரும்பி, அவநம்பிக்கைவாதி, கொள்கை அற்றவர். வாழ்நாள் முழுவதும் இவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிகார வேட்கையால் தூண்டப்பட்டே அமைந்திருந்தது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சுமார் 40 ஆண்டுகள் கழித்து ‘ஹிட்லர் அண்ட் ஸ்டாலின்: பேரலல் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார். ஏராளமான பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நாஸிசம், சோவியத் கம்யூனிஸம் பற்றி உண்மையான, துல்லியமான தகவல்களுடன் பல நூல்கள் எழுதியுள்ளார்.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். செவாலியர் விருது, சர் பட்டம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் 89-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT