Published : 17 Dec 2014 11:38 AM
Last Updated : 17 Dec 2014 11:38 AM
கடல் பிணம்!
பொந்துக்குள் இருந்து வெளியே தலை நீட்டி, கண் உருட்டும் நாகப்பாம்பு போல், கழுத்தளவு உடல் மறைய இரும்பு ஏணிப் படியில் நின்று, கப்பல் மேல் தளத்தை நோட்டமிட்டாள் அரியநாச்சி. தன் கண்ணையே நம்ப முடியவில்லை.
முதல் வகுப்பு அறைக் கதவைத் திறந்து வெளியேறி வருபவன் டி.எஸ்.பி.
ஸ்காட்தானா? ஸ்காட் எப்படி இந்தக் கப்பலில்? இது நிஜமா… நிழலா? மலேசியக் காடுகளில் 20 வருஷ விரதம் காத்து, சபதம் நிறைவேற்றக் கப்பலேறிப் புறப்பட்டதும்… கண் முன்னாலேயே இரையா! இப்படியும் நடக்குமா?!
ஸ்காட் நடந்தான். கடைசியாக தனுஷ்கோடி தீவில் ஸ்காட் நடந்த அதே நடை. சந்தேகமே இல்லை, இவன் ஸ்காட் தான்!
அண்ணன் ரணசிங்கத்தையும் குடும்பத்தையும் சின்னா பின்னமாக்கி சிதறடித்தவன். சின்ன அண்ணன் தங்கச்சாமியைச் சிதையில் ஏற்றியவன். கல்யாண மாப்பிள்ளை ஆப்பனூர் திருக்கண்ணனை, எருமைக்குளம் கருவக் காட்டுக்குள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக்கி, மணவறையிலேயே தன் தாலி அறுத்தவன். நாலு வயது சிறுவன் துரைசிங்கத்தை ஊமை ஆக்கியவன். ரணசிங்கத்தின் கருஞ்சேனையை நிர்மூலமாக்கியவன். இவ்வளவுக்குப் பின்னும் அடங்காது, தன்னையும் பச்சிளம் பாலகன் துரைசிங்கத்தையும் தனுஷ்கோடி தீவில் கப்பலேற்றி, மலேசியக் காடுக்கு நாடு கடத்தியவன்.
வெள்ளைத் திமிர் ஏறி விளையாடிய அந்த ஸ்காட், இதோ… கப்பலில் கண் முன்னே கடற்காற்று வாங்குகிறான்! இவனைக் கண்டுதான் கொந்தளித்திருக்கிறான் துரைசிங்கம். கண்டதும் கொல்லாமல் எப்படிவிட்டான்?
கீழிறங்கும் ஏணிப் படிகளைப் பார்த்தாள். படிகளை விட்டிறங்கி, தளர நடந்து, அறை நோக்கி போனான் துரைசிங்கம். கூப்பிட வாய்த் திறந்தவளுக்குள் ஒரு பொறி தட்டியது.
‘சர்வதேசக் கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும் கப்பல், இந்தியக் கரையைத் தொட, இன்னும் மூன்று நாட்கள் ஆகும். ஸ்காட்டைக் கரை இறங்க விடக் கூடாது. தடயமே இல்லாமல் கடலுக்குள்ளேயே ‘காணா’ப் பிணமாக்க வேண்டும். துரைசிங்கத்தின் கண்ணுக்கு இப்போதே ஸ்காட்டைக் காட்டினால், இதம் பதம் தெரியாமல், எல்லோர் முன்னிலையிலும் கொன்று தீர்த்து மாட்டிக் கொள்வான். கூடாது. அவனை ஏவக் கூடாது.’
திரும்பினாள். ஸ்காட்டைக் காணோம். இரண்டு படி ஏறித் தேடினாள்.
உடன் வந்தவர்கள் எல்லாம் மரம், செடிகளுக்குள் பதுங்கி விட, ஒத்தையில் நின்றார் நல்லாண்டி. கையில் வேல் கம்போடு, கண்ணு மண்ணுத் தெரியாமல் ஓடி வரும் தவசியாண்டியைக் கண்டு, நெஞ்சுக்குள் கொஞ்சம் அச்சம் கொடுத்தது.
‘தான் ‘இன்னார்’ என்பதை மறந்திருப்பானா? ஏற்கெனவே இரண்டு முறை காட்டுக்குள் வந்து தவசியாண்டியைப் பார்த்திருக்கிறோமே. ஒருவேளை, தான் மட்டும் தனித்து வந்திருந்தால்… உபசரித்திருப்பானோ! அவனுக்குப் பிடிக்காத பெருங்குடி ஆட்களோடு வந்தது தப்புதான். சரி… அதுக்கு மேலே ஆனது ஆகட்டும்.’ தவசியாண்டியை எதிர் கொண்டு, நிமிர்ந்த வாக்கில் நின்றார் நல்லாண்டி.
நல்லாண்டியின் முகம் தெரிய நெருங்கிவிட்ட தவசியாண்டி, வேல் கம்பை வீசும் தூரத்தில் நின்றான். நல்லாண்டியைத் தவிர பிறர் எவரும் தவசியாண்டியின் கண்ணில் படாமல் பதுங்கிக் கிடந்தார்கள்.
“தவசியாண்டி! நான்தான்… நல்லாண்டி வந்திருக்கேன்.”
“நீங்க… சரி! உங்கக் கூட வந்து பதுங்கி இருக்கிறானுங்களே… அவனுங்கள்லாம் யாரு?” என்றவன், பதிலுக்குக் காத்திராமல், செடிப் புதர்களுக்குள் வேல் கம்பை நுழைத்து துழாவினான். ஓங்கி ஓங்கி குத்தினான். குத்துப்பட்ட புதருக்குள் முனியாண்டியும் ‘லோட்டா’வும் பதுங்கி இருந்தார்கள். வேல் கம்பு குத்து, ‘லோட்டா’வின் முகத்துக்கு நேராக வந்தது. ‘லோட்டா’ பதுங்கியவாறு முன்னும் பின்னும் கெலித்தான். அலற, வாய் திறந்தான். முனியாண்டி, ‘லோட்டா’வின் வாயை தன் இடது கையால் இறுக்கி பொத்தி, தலையைத் தரையோடு அமுக்கினார்.
வேல் கம்பு, கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் பதுங்கி இருந்த மரத்துப் பக்கம் திரும்பி துழாவியது. பிள்ளையின் வேட்டி கிழிபட்டது. கத்தி கொஞ்சம் நீண்டிருந்தால் ‘பிட்டம்’ கிழிந்திருக்கும்.
‘இதுக்கு மேலே பதுங்க முடியாதுடா சாமி! தவசியாண்டி நம்மள கொன்றாலும் பரவாயில்லை’ என்கிற முடிவுக்கு வந்தவராய்… தலைக்கு மேல் கை கூப்பியவாறு, “தவசியாண்டி.. நான் அரண்மனை கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் வந்திருக்கேன். என்னை ஒண்ணும் பண்ணிறாதேப்பா…” மரத்தூரை விட்டு, கண் கலங்கத் தள்ளாடி வெளியேறினார்.
‘அரண்மனை’ என்ற சொல், தவசியாண்டியின் செவிகளில் தீக்குழம்பாய் இறங்கியது. ரத்னாபிஷேகம் பிள்ளையைக் கண் இடுக்கிப் பார்த்தான். பதுங்கி கிடந்தவர்கள் ஒவ்வொருவராக தலை நீட்டி, கைக்கூப்பி வெளியேறினார்கள். எல்லா முகங்களிலும் தவசியாண்டியின் குத்துக் கண் பதிந்தது. ரெண்டு எட்டு நெருங்கினான்.
நல்லாண்டி, ஒரு எட்டு முன்னே வந்தார்.
“தவசியாண்டி… ஊரு மேல உனக்கு என்ன கோபமோ? யாருக்கும் தெரியாது. வந்திருக்கிற நாங்க யாரும் உன் பாவத்திலே விழுந்த ஆளுக இல்லே. இப்போ… நாங்க வந்த விவரம் என்னன்னா… ” நல்லாண்டி தொடர்ந்து பேசினார்.
கப்பலின் முகப்போரம் தன்னந்தனியே ஒரு கருப்பின இளம்பெண் நின்றாள். ஸ்காட், கையில் மதுக்குவளையுடன் அவளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.
அரியநாச்சி, கப்பலின் மேல்தளத்தில் முழுதாய் ஏறி நின்று ஸ்காட்டை அவதானித்தாள்.
கருப்பினப் பெண்ணின் பின்னால் போய் மிக நெருங்கி நின்ற ஸ்காட், கைப்பிடிமானம் இல்லாமல் தடுமாறினான். மூக்கு முட்ட குடித்திருந்தான். வேற்று ஆள் ஒருவன் தன் பின்னால் வந்து நிற்பதை அறியாத அந்தப் பெண், எதிர்க் காற்று முகத்தில் அடிக்க, கடல் பார்த்து நின்றாள்.
போதைக் கண்களால் பின்னழகை ரசித்தவன், அக்கம் பக்கம் அரை பாதி பார்த்துவிட்டு, பெண்ணின் பிட்டத்தில் ஒரு தட்டு தட்டினான். பதறி திரும்பியவள், ஒற்றை விரல் உயர்த்தி, “நறுக்கி விடுவேன்!” என எச்சரித்துவிட்டு, விறுவிறுவென நடந்தாள். உறைந்து நிற்கும் அரியநாச்சியின் பக்கமாக வந்தவள், “வெறி பிடித்த அந்த வெள்ளை நாயைத் தூக்கி கடலில் எறிய வேண்டும்” என்றவாறு கடந்து போனாள்.
அரியநாச்சி சுற்றுமுற்றும் பார்த்தாள். நெருக்கத்தில் ஆட்களைக் காணோம். கப்பல் முகப்போரம் தன்னந்தனியே ஸ்காட் நின்றான். நடந்தாள். நெருங்கி வருபவளைக் கண்டதும் பல்லிளித்தான். ஒட்டிக் கடந்தவள், உதட்டோரம் சிரிப்பை இழையவிட்டாள். நம்ப முடியாத சந்தோஷத்தில் ஸ்காட், மதுவை ஒரே மடக்கில் விழுங்கி, காலிக் குவளையைக் கடலில் விட்டெறிந்தான்.
கப்பலோரக் கைபிடியில் சாய்ந்து நின்றவளை நெருங்கினான்.
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT