Published : 03 Dec 2014 10:59 AM
Last Updated : 03 Dec 2014 10:59 AM

பாபு ராஜேந்திர பிரசாத் 10

குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 பிஹாரில் பிறந்தவர். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வி, டி.கோஷ் அகாடமியில் 2 ஆண்டுகள் பயின்றார்.

 கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றதால் மாதந்தோறும் ரூ.30 உதவித் தொகை கிடைத்தது. கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார்.

 பணிபுரியும்போதே சட்ட மேற்படிப்பு பயின்று முதல் மாணவராக தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பணியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.

 விவசாய சாகுபடிகளுக்கு ஆங்கில அரசு விதித்த கட்டுப்பாட்டை எதிர்த்து சம்பாரன் என்ற இடத்தில் விவசாயிகள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாகப் போராடிய காந்திஜி, அங்குள்ள நிலையை அறிந்து வருமாறு இவரை அனுப்பிவைத்தார்.

 உண்மை அறியும் குழுவுக்குத் தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது காந்திஜியின் அஹிம்சை போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. ராஜேந்திர பிரசாத் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது.

 தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவரானார். காந்திஜியின் எளிமையால் கவரப்பட்டார். பணியாளர்களை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளை அவரே செய்தார்.

 1934-ல் பிஹாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வைஸ்ராயால் அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிதி திரட்ட முடிந்தது.

 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1946-ல் அரசியலமைப்பு அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3-வது முறையாகப் பதவியேற்றார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முதன் முதலாக அமைந்த அரசில் கேபினட் அமைச்சரானார்.

 இந்திய அரசியல் சாசனம் வகுக்கும் பணிக் குழுவுக்குத் தலைமை ஏற்றார். இந்தியக் குடியரசு அமைந்ததில் இவரது பங்கு மகத்தானது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். 1962 வரை அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவியை வகித்தவர் இவர் மட்டுமே.

 இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 78-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x