Published : 10 Dec 2014 10:06 AM
Last Updated : 10 Dec 2014 10:06 AM
கோவில்பட்டியில் தாணுலிங்க நாடார் பணியாரக் கடை போட்டிருந்தார். அப்புறம் சின்னதாக இட்லிக் கடை போட்டார். எதுவுமே சரிப்பட்டு வரவில்லை. காய்ச்சல்காரர்கள் மட்டும் ரெண்டு இட்லி வாங்கிப் போய் சீனி தொட்டுச் சாப்பிட்டார்கள். இதனாலெல்லாம் அவருக்குக் கட்டுப்படியாகவில்லை. தனது மகளின் திருமணத்துக்காகப் பத்திரிகை வைப்பதற்காக சிவகாசி போனபோது, தற்செயலாக மைதா மாவில் செய்யப்படும் பண்டம் ஒன்றை அங்குள்ள கடையில் சாப்பிட்டுப் பார்த்தார். கேட்டதற்கு அதன் பெயர் புரோட்டா என்றார்கள். பிசைந்த மாவை விசிறி விசிறி அடித்து, லாவகமாகச் சுற்றும் அழகை அவர் நின்று பார்த்ததில், பேருந்தைக்கூடத் தவறவிட்டார்.
ஊரில் வந்து பாடுபட்டு அதை அறிமுகம் செய்தார். பட்டையையும் லவங்கத்தையும் அரைத்து மணக்க மணக்கச் செய்யும் கலவைக்கு எப்படி சால்னா எனப் பெயர் வந்தது என அவருக்குக் கடைசிவரை புரியவில்லை. மெதுவாக ஆரம்பித்த வியாபாரம், கல்லா கட்ட ஆரம்பித்தது. சில ஆண்டுகள் கழிந்த பிறகு, அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான புரோட்டா கடைகள் முளைத்துவிட்டன.
அதே ஊரில் இருந்த முனியாண்டிக்கு நான்கு மகன்கள். நல்ல விவசாயக் குடும்பம். வீட்டில் ‘கவுச்சிக்கு’ குறையே இருக்காது. நான்கு மகன்கள், ஆறு மகள்கள், அவர்களின் பிள்ளைகள் என வீடே திருவிழாக் கூட்டம்போல இருக்கும். முனியாண்டி மட்டுமல்ல, அவரது மகன்கள், மாமன் மச்சான்கள் என அத்தனை பேரும் குடிப் பழக்கத்துக்கு அடிமைகளாகியிருந்தனர். தினமும் சண்டைச் சச்சரவுகள் எனப் போர்க்களம் போலிருந்தது வீடு.
குடியை மறக்க அவர் மகன்களுக்குப் பல லேகியம் கொடுத்துப் பார்த்தார். மந்திரிக்க பல தர்காக்களுக்கும் அழைத்துப் போய்ப் பார்த்தார். கடைசியில் ஒருநாள் அவர் எடுத்த ஒரு முடிவு அவரது குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவந்தது. தீவிர அம்மன் பக்தரும் சாமியாடியுமான முனியாண்டி தனது மகன்கள், மனைவி, பேரன்களோடு சேர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுவதெனத் தீர்மானித்தார். நீதிக் கட்சித் தலைவராக இருந்த பி.டி. ராஜன் சபரிமலையில் எரிந்துபோன ஐயப்பன் விக்கிரகத்துக்குப் பதிலாக மற்றொன்றை ஊர்வலமாக எடுத்துச் சென்றதை, ஒருமுறை மதுரைக்கு பருத்தி விதை வாங்கச் சென்றிருந்தபோது முனியாண்டி பார்த்திருக்கிறார்.
சபரிமலை, அடர்ந்த வனங்களுக்கு மேலே அமைந்திருக்கிற இடம். உள்ளூர் அம்மனைப் போல அல்லாமல், நிஜமாகவே துடியான சாமி அது. ஒரு மண்டல விரதத்தில் ஒரு நாள் தவறினாலும் ஒன்று, போகிற வழியில் காட்டுக்குள் யானை அடித்துச் சாக வேண்டும் அல்லது புலி அடித்துச் சாக வேண்டும் என்று ஒரு நம்பிக்கை. அதனாலேயே குடும்பத்தோடு மாலை போடுவதெனத் தீர்மானித்தார் முனியாண்டி. அதற்கப்புறமும் அவர் வீட்டில் குடி இல்லாமலில்லை. ஆனால், கலகம் இல்லை என்பதிலும், ஒவ்வொரு வருடமும் 48 நாட்கள் அவரது குடும்பம் குடியில்லாமல் இருந்தது என்பதிலும் அவருக்குச் சந்தோஷமே. சில வருடங்களில் அவரே குருசாமியாகவும் மதிப்புமிக்க மனிதராகவும் மாறி, தரகு வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது தனிக் கதை.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கொஞ்சம் கட்டுக்கோப்பான, கொஞ்சம் கதைகள் கலந்த, கொஞ்சம் கவர்ச்சியும் கலந்த எந்த ஒரு விஷயமானாலும் ஜெயிக்கும். அது பக்தியாக இருந்தாலும் சரி, தாணுலிங்க நாடார் கடை புரோட்டாவாக இருந்தாலும் சரி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT