Published : 08 Oct 2014 10:37 AM
Last Updated : 08 Oct 2014 10:37 AM

குருதி ஆட்டம் 4 - இரை

ஊரார் எல்லாம் கலைந்து போய்விட, அரண்மனைத் தோட்டத்து வாசலில் ஒத்தையில் நின்றான் ‘லோட்டா’.

கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் தலைவாசலில் நின்றவாறு, ‘லோட்டா'ப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு’ என உத்தரவிட்டதும், ‘லோட்டா’ கிறுகிறுத்துப் போனான்.

‘அப்புடி என்ன தப்பாப் பேசினோம்? நம்ம ‘அரண்மனை’ பேரு உடையப்பன்தானே? பேரைச் சொன்னது தப்பா?’

‘தோட்டத்து வாசல்லே நின்னுக் கிட்டுச் சொன்னது, அரண்மனைக் குள்ளே எப்புடிக் கேட்டுச்சு?’

‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கியாடா ‘லோட்டா!’ தன்னுடைய வாயில் தானே குத்திக் கொண்டான்.

தோட்டத்துக் கதவை வேலையாள் ஒருவன் திறந்தான்.

“ ‘லோட்டா’ உள்ளே போ. இன்னைக்கு நீ… தென்னைக்கு உரம்தான்டீ…’’ வாய்க்குள் சிரித்தான் வேலையாள்.

செத்தும் உயிர் இழையும் ஓவியமாய் சிரிக்கும் பொம்மிக்கு முன் அமர்ந்து, விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா. வீட்டின் நடுக்கூடத்தில் சந்தன மாலையிட்ட புகைப்படமாகத் தொங்கி கொண்டிருந்தாள் பொம்மி.

உதடு சிரித்தாலும் விதித்த தாம்பத்யத்தில் தோற்றுத் துவண்ட சோகம் கண்களில் கசிந்தது. கயவனின் தாலி கழுத்தில் ஏறிய நாள் முதல், தன்னைத் தானே வீழ்த்திக்கொள்ள யத்தனித்த சோகம். கழுத்தை நீட்டிய கடனுக்காக ஓர் இரவு இமை மூடி இணங்கியதால், சூல் கொண்ட கருவைப் பெற்றுப் போட்டதும் மரித்துப் போன சோகம். பால்யம் தொட்டு கனவில் சுமந்தவனைக் கைப் பிடிக்க முடியாத சோகம். அந்த மாவீரன் துரோகக் கொலையுண்ட நிமிஷமே தன்னுயிரைத் துறந்த சோகம்.

பொம்மியைப் பொசுக்கிய வாதையை வெள்ளையம்மா அறிவாள். மகளைப் பலி கொடுத்த பாவத்தில் இவளும் பங்கு கொண்டவள். மகளுக்கு முன் மண்டியிட்டு, நித்தம் அழுது கருகினாலும், தீராத பழி. முந்தானைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள்.

“பாட்டி…!’’

கஜேந்திரன் நுழைந்ததுமே, அறை முழுவதும் மெல்லிய நறுமணம் பரவியது. கஜேந்திரனின் ஒவ்வோர் அசைவிலும் சென்னைப்பட்டணம் ஒட்டியிருந்தது. பிறப்பெடுத்த பெருங்குடி கிராமத்துக்கும் பேரனுக்கும் பொட்டுச் சம்பந்தம் இல்லாமல் வளர்த்திருந்தாள்.

அருகே வந்த கஜேந்திரன், வெள்ளையம்மாவின் கலங்கிய கண்களை உற்றுப் பார்த்தான்.

“அழுதீங்களா பாட்டி..?’’

“இல்லையே. எனக்கென்ன குறை? நான் ஏன் அழுவுறேன்?’’

“பாட்டி… இந்தப் பொய்யை இருபது வருஷமா சொல்றீங்க. எங்கிட்டே எதையோ மறைக்கிறீங்க. நான் வீட்டிலே இல்லாத நேரமெல்லாம் அம்மா படத்துக்கு முன்னாடி உக்காந்து, நீங்க அழுவுறது எனக்குத் தெரியும். பாட்டி… பழசை அசைப்போட்டுக்கிட்டே, ரிவர்ஸிலே போகக் கூடாது. நாளை என்ன? நாளைக்கு மறுநாள் என்னன்னு போய்க்கிட்டே இருக்கணும்.’’

பேரனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

வந்ததும் சொல்ல மறந்தவனாய் “ம்… பாட்டி. அடுத்த மாதம் நான் லண்டன் போறேன். கிங்ஸ்டன் யுனிவர்சிட்டியிலே பேசுறேன். பல நாட்டு மாணவர்கள் வர்றாங்க. இந்தியாவிலே இருந்து ரெண்டு பேர்தான். ஒன்னு நான். இன்னொருவர், வங்காளத்திலே இருந்து வர்றார். பத்து நாள் புரொகிராம்’’ என்றான்.

கஜேந்திரன் சொல்வது புரியாமல் விழித்தாள்.

“யாருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு. உங்க பேரனுக்குக் கிடைச்சிருக்கு. நான் ஊருக்குப் புறப்படுற நேரம் அழுவக்கூடாது. ஓ. கே.?’’ கிழவியின் கன்னத்தில் செல்லத் தட்டு தட்டிவிட்டு வெளியேறினான்.

திறந்த கதவை மூடாமலே நடந்து போய்க் கொண்டிருந்த பேரனை, இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா.

தோட்டம் தாண்டி அரண்மனை முகப்பில் கால் வைத்த ‘லோட்டா’வின் நெஞ்சு பிசைந்தது. தலைவாசலில் நின்ற கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகம், “உள்ளே வாடா…’’ என கண்ணசைத்துவிட்டு உள்ளே போனார்.

தரை தேய்த்து உள்ளே போனான்.

நாயகமாக அமர்ந்திருந்த உடையப்பனுக்கு நாலு அடி தள்ளி, பவ்யமாக நின்றிருந்தார் கணக்குப்பிள்ளை.

உடையப்பனின் இமைகள் சுருங்கின.

“உன் பேரு என்னடா?’’

கைக்கட்டி குறுகி நின்றவன் “ ‘லோட்டா’ சாமி” என்றான்.

“ ‘லோட்டா’ உன் பட்டப் பேரு. நெசப் பேரு என்ன?’’

“இருளாண்டி… சாமி…’’

“உன்னை இருளாண்டின்னு எவனாவது கூப்பிடுறானா?’’

“இல்லை சாமி” நின்ற இடத்திலேயே கைகூப்பி குப்புற விழுந்தான்.

“ஒரு ஏழைப் பயலுக்கே ‘பட்டப் பேரு’ இருக்குன்னா… ஆப்ப நாட்டு அரண்மனைக்குப் பட்டப் பேரு இருக்கக் கூடாதா?” வலது கைவாக்கில் இருந்த தண்ணீர்ச் செம்பைத் தூக்கினான்.

“சாமி… அய்யாவுகளே! வாக்குச் சனி உள்ள இந்த ஏழைப் பயலை, அரண்மனைதான் மன்னிக்கணும்”. தரையோடு முகம் உரச மாறி மாறிக் கும்பிட்டான்.

“ச்… ச்சீ… ச்சீய்ய் நாயி. எந்திரி” வலது கைச் செம்பை ‘லோட்டா’வின் விலா தெறிக்க வீசினான்.

‘லோட்டா’ எழுந்து தலை தொங்க நின்றான்.

“தமுக்கு அடிக்கத் தெரியுமா உனக்கு?”

“தெரியாது அரண்மனை.”

“தெரியலேன்னா… கத்துக்கிறணும். கத்துக்கிட்டு ஊருக்குள்ளே போயி தமுக்கு அடி.”

‘லோட்டா’ முழித்தான்.

உடையப்பன் என்ன சொல்ல வர்றான்னு கணக்குப்பிள்ளைக்கே புரியலே.

“ ‘ரெம்பக் காலமா… கொண்டாடாமல் நின்னு போன இருளப்பசாமி கோயில் கொடையை இந்த வருஷம் நடத்தணும். அது சம்பந்தமாப் பேச, நாள ராத்திரி அரண்மனை வாசல்லே ஊரு கூடணும். இது அரண்மனை உத்தரவு’ன்னு ஊருக்குள்ளே நீதான் தமுக்கு அடிக்கிறே… என்ன?”

“உத்தரவு அரண்மனை.”

மலேசியக்

காட்டுப் பாறையில் அமர்ந் திருந்த அரியநாச்சி, “துரைசிங்கம்… வா!” என்றழைத்ததும் வந்துவிட வில்லை. சிறுத்தையின் வாயைக் கிழித் துப் புரட்டிப் போட்டும் அடங்காதவனாய் தலையோடு உடம்பை மறுபடியும் உலுப்பி, காடதிரக் கத்தினான்.

‘வ்… வ்வ்… வாஹ்ஹ்…’

அரியநாச்சி சிரித்துக்கொண்டாள்.

‘உன் பசிக்கான இரை நம்ம ஊரிலேதான் இருக்கு. கிளம்பிற வேண்டியதுதான்.’

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள...irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x