Published : 12 Nov 2014 11:41 AM
Last Updated : 12 Nov 2014 11:41 AM
ங்ங்ஙஅ…
பெருங்குடி தெருக்களில் உடையப்பனின் கால்பட்டு, எத்தனையோ வருடங்கள் ஆகி இருக்கும். உடையப்பனை ‘அரண்மனை’ என்று ஊரார் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து ‘நடை’மறந்துப் போச்சு. ஏறுனா… கூட்டு வண்டி. எறங்குனா… அரண்மனை. வர்றது, போறது எல்லாம் கூட்டு வண்டியிலேதான்.
அரண்மனைக்குள்ளே ரெண்டு கூட்டு வண்டி நிற்கும். ஒண்ணு… ‘அரண்மனை’ உடையப்பனுக்கு. இன்னொன்னு அன்றாடம் வந்து போகும் வைப்பாட்டிகளுக்கு.
அரண்மனைக் கூட்டு வண்டி அலங்காரம், ஊர்க் கண்ணைப் பறிக்கும். வண்ண வண்ணப் பட்டு வஸ்திரங்களால் போர்த்தப்பட்ட வண்டிக் கூண்டு. ஜிகினா வேலைப்பாடுகளுடன் முன்னும் பின்னும் தொங்கும் திரை மறைப்புகள். வண்டிச் சக்கர ஆரக்கால்களில் எல்லாம் வெண்கலக் குறுமணிகள். சக்கரம் உருள உருள, வேகத்துக்கேற்ப நாதம் குழையும். தலை நிமிர்த்தி இழுத்துப் போகும் காளைகள், ‘பூரணி’ இனக் காளைகள். பந்தயக் குதிரை உயரம். வெண்பட்டு நிறம். இரண்டடி உயர, மஞ்சள் பூத்தக் கொம்புகள். கழுத்து மணிகள், ‘சலங்… சலங்… சலங்…’ என ஒலி பிசைந்து அடுத்த ஊரை எழுப்பும்.
‘அரண்மனை போறாரு… அரண்மனை போறாரு!’ ஊர்ச் சனமெல்லாம் தெருவோரம் கண் கொட்டி நிற்கும். திரை மறைப்பு விலகாமல் வண்டி போகும். எவர் கண்ணும் அரண்மனையைப் பார்த்திருக்காது.
இன்னொரு வண்டி, நீலம் போர்த்திய கூட்டு வண்டி. திரை மறைப்புகளும் நீலம். பொழுது இருட்டினால் வண்டி தெரியாது. வண்டிச் சக்கரத்து இரும்பு பட்டைகளுக்குப் பதிலாக, கனத்து உருண்ட ரப்பர் சுற்று. குண்டு, குழியில் விழுந்து போனாலும் பொட்டுச் சத்தம் கேட்காது. அலுங்காமல் குலுங்காமல் இழுத்துச் செல்லும் குட்டைக் காளைகள், நாட்டு மாடுகள். வருவதும் போவதும் தெரியாமல் இருப்பது, வைப்பாட்டிகளுக்கு வசதி.
‘திடு திப்’பென தெருவில் இறங்கி நடந்து வரும் அரண்மனையைக் கண்டதும் ஊர் திகைச்சுப் போச்சு. ஊருலே முக்கால்வாசி சனம், இதுநாள் வரை அரண்மனையை பார்த்ததே இல்லே. அவரவர் வீட்டு வாசலில் ஆம்பளைகள் கைகூப்பி நின்றார்கள். எட்டிப் பார்த்த பொம்பளைகளை, ‘போடீ… உள்ளே…’ என, கண்ணால் மிரட்டினார்கள்.
“இவருதான்… அரண்மனையா? வயசே… தெரியலையே!” என, விழி அகலப் பார்த்த புதுப் பெஞ்சாதியை வீட்டுக்கு உள்ளே தள்ளி, கதவை தாழ்ப்பாள் இட்டதும் வெளுக்குறான் ஒருத்தன்.
தரை புரளும், கை அகல வெள்ளி ஜரிகைக் கரைப் பட்டு வேட்டி. ஒட்டகத் தோல் செருப்பு. இடுப்பில், பச்சை நிற கொழும்பு பெல்ட். மார்பு ரோமத்தையும் மைனர் செயினையும் துலங்கக் காட்டும் சந்தனப் பட்டு ஜிப்பா. தெரு நெடுகத் தலை வணங்கும் ஊர்ச் சனங்களை சட்டை செய்யாத தலைச் சிலுப்பல். வெட்டுப் பார்வை.
உடையப்பனை ஓரடி முன்னே விட்டு, இடதுபுறம், ஓட்டமும் நடையுமாக வந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். வலதுபுறம், ஈரடி முன்னே விட்டு, குலுங்கு நடையில் ‘லோட்டா’ வந்தான். கைகட்டி நிற்கும் தெருவோர இருபுறத்துக் கண்களும் தன்னைப் பார்க்க வேண்டும் என மெனக்கெட்டான். எல்லாச் சனத்துக்கும் அரண்மனை மேலே… அரைக் கண்ணு. ‘லோட்டா’ மேலே அரைக் கண்ணு.
‘லோட்டா’ எப்படிடா அரண்மனைகிட்டே ஒட்டுனான்?’ வாய்க்குள் முணுமுணுத்தார்கள். தோள் குலுக்கி நடந்தான் ‘லோட்டா’. இருபுறமும் கண் பாவாமல் நடந்த உடையப்பன், பெரியவர் நல்லாண்டியின் வீட்டு முன் வந்ததும் நின்றான்.
“கும்பிடுறேன் அரண்மனை...” தலைக்கு மேல் கை உயர்த்தினார் நல்லாண்டி.
பதிலுக்கு தலையைக் கூட ஆட்டாத உடையப்பன், கண்ணசைத்தான். அரைக் கூனலாய் ஓடி வந்த பெரியவர் நல்லாண்டியைப் பின்னால் விட்டு முன்னால் நடந்தார். ரத்னாபிஷேகம் பிள்ளை, ‘லோட்டா’, நல்லாண்டி மூவரும் தொடர்ந்தார்கள்.
திரும்பாமலே, “திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கு நல்லாண்டி?” என்றான்.
“அரண்மனை உத்தரவுக்கு அட்டி ஏது? எல்லாம் சீரும் சிறப்புமா இருக்குது!”
“ஊருச் சனம் என்ன பேசுது?”
“சனம் என்ன சொல்றது? திருவிழாச் சந்தோஷத்திலே… திக்கு முக்காடிப் போயி நிக்குது. அதுலேயும்… இப்போ உங்களை நேரிலே கண்ட சனம், அந்த இருளப்பசாமியே எறங்கி நடந்து வர்றதா… நெனைக்குது அரண்மனை!”
உடையப்பனின் தலைச் சிலுப்பல் கூடியது. கடைசி தெருவுக்குள் நுழைந்தவன், “ஆமா… பொம்பளைகளே இல்லாத ஊரா, இது? ஒருத்தியையும் காணோம்!” என்றான்.
ரத்னாபிஷேகம் பிள்ளை, நல்லாண்டி, ‘லோட்டா’ மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘அதுதானே… பார்த்தேன். கள்ளப் பருந்து, காரணம் இல்லாம வட்டமடிக்காதே’ன்னு’ என, லோட்டாவும், ‘அரண்மனையை ஆவி பிடிச்சு ஆட்டாம… என்ன செய்யும்?’ என, ரத்னாபிஷேகம் பிள்ளையும் முனகினார்கள்.
“அது ஒண்ணுமில்லே அரண்மனை. பொம்பளைக எல்லாம் வீட்டுக்குள்ளே, நேர்த்திக்கடன் மாவிளக்கு மாவு இடிப்பாளுக. அதுதான் ஒருத்தியையும் வெளியிலே காணோம்” எனச் சொல்லிச் சமாளித்தார் நல்லாண்டி.
இருளப்பசாமி கோயில் வாசல் வந்தது.
கப்பலின் மேல்தளத்தைத் தலை சுழற்றிப் பார்த்தாள் அரியநாச்சி. யாரையும் காணோம்.
‘ம்ஹ்ஹா… ம்ஹ்ஹா…’ ஏதோ சொல்லத் தவித்தான் ஊமையன் துரைசிங்கம். அரியநாச்சிக்கு ஒண்ணும் புரியலே.
“துரைசிங்கம்… என்ன? ஏன், என்னை இங்கே இழுத்துட்டு வந்தே?”
ஸ்காட்டும் சைமனும் நின்று கொண்டிருந்த கப்பலின் கைபிடி ஓரத்தைக் காட்டினான். உள்ளங்கைகளைத் தொப்பி போல் குவித்து, தன் தலையில் வைத்தான். வலது கையை நெஞ்சுக்கு நேராக நீட்டி, ஆட்காட்டி விரலால் துப்பாக்கி சுடுவது போல் சுட்டுக் காட்டினான்.
‘ப்ப்பா…ப்ப்பா…’ அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து, தன் தொண்டையை தானே நெறித்து, கண் செருக நாக்கை நீட்டி, செத்தது போல் நடித்துக் காட்டினான்.
‘ங்ங்ஙஅ…’ கப்பலின் ஓரத்துக்கு அரியநாச்சியை இழுத்துக் கொண்டு ஓடினான். ‘ங்ங்ஙஅ…’ ஸ்காட் நின்ற இடத்தை ஓங்கி மிதித்தான்.
ஏதும் புரியாமல் அரியநாச்சி முழித்தாள்.
நின்றவாக்கில், கிழக்கே கண் ஓட்டினான். கப்பலின் மையத்தில், முதல் வகுப்பு அறைகளுக்கான நுழைவு வாயிலின் திரைச் சீலை ஆடியது. வேகமாய் ஓடினான். திரைச்சீலையை விலக்கி பார்த்தான். கனத்த கண்ணாடிக் கதவு, உள்பக்கம் தாழிட்டிருந்தது. கதவோடு நெற்றியை பொருத்தி, கூர்ந்து நோக்கினான். ஸ்காட்டும் சைமனும் கைகுலுக்கிவிட்டு, அவரவர் அறைகளுக்குப் பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT