Published : 27 Nov 2014 12:45 PM
Last Updated : 27 Nov 2014 12:45 PM
“இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது.
“எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால்.
“நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரிங்க.. இப்போ பக்கத்து வீட்டு ஆனந்தோட மோகனை எதுக்காக ஒப்பிடறீங்க?” நிதானமாய்க் கேட்டாள் ரேணுகா.
“நல்லா படிக்கிற பிள்ளைகளைச் சுட்டிக் காட்டினாத்தானே இவனுக்கும் நல்லா படிக்கணுங்கிற எண்ணம் வரும். ஏன் உனக்கு அதுவும் புரியலையா?” மகனின் மீதான கோபத்தை மனைவியிடம் காட்டினார்.
“ஆனந்தோட அப்பா மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறாரே… நீங்க நாற்பதாயிரம்தானே வாங்குறீங்கன்னு நம்ம மோகனும் உங்களைத் திருப்பிக் கேட்டா என்ன சொல்வீங்க?”
“ஓஹோ… என் வாயை எப்படி அடைக்கணும்னு நீயே மோகனுக்குச் சொல்லிக் கொடுப்பே போலிருக்கே. மோகனுக்கு வக்காலத்து வாங்கறியா?”
“அப்படியில்லைங்க… ஒருத்தரை இன்னொருத்தரோட ஒப்பிடறது தப்புங்க. நீங்க ஆரம்பத்துல ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கினதையும், இப்போ நாற்பதாயிரம் சம்பளம் வாங்குறதையும் மோகனுக்குச் சொல்லிக் காட்டுங்க. நம்ம மோகனும் தன்னையே தன்னோட கம்பேர் பண்ணி பார்த்துட்டு நல்லா படிக்க ஆரம்பிச்சுடுவான்.”
ரேணுகா சொன்னதிலும் ஏதோ அர்த்தம் இருப்பது புரிய, “சரி… அப்படியே செய்யறேன்!” சொன்ன கோபாலின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT