Last Updated : 01 Aug, 2017 05:06 PM

 

Published : 01 Aug 2017 05:06 PM
Last Updated : 01 Aug 2017 05:06 PM

ஆட்டிசம் குழந்தைகளுக்கு இதம் அளிக்கும் இசை

கிராமப்புறங்களிலும், தன்னார்வ அமைப்புகளின் பராமரிப்பிலும் இருக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் கர்னாடக இசையைக் கொண்டுசெல்லும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் பிரபல கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. இதற்காக, 3 ஆண்டுகளுக்கு முன்பு ‘இதம்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் சார்பில், ‘சன்மதி’ என்ற கருத்தரங்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அரங்கில் நடந்தது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளில் பயிற்சி அளிக்கும் நிபுணர்கள் இதில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

நீலாம்பரியை திருத்திய குழந்தை

பாம்பே ஜெயஸ்ரீ தனது வரவேற்புரையில் கூறியதாவது: பொதுவாக ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தைக் குவிப்பதில் சிரமம் இருக்கும் என்பார்கள். ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்டிசம் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி அளிக்கும் ஒரு மையத்தில் நீலாம்பரி ராகத்தில் ஒரு பாடல் பாடினேன். பாடி முடித்ததும் அப்பள்ளியில் இருந்த ஒரு சிறுமி, ‘‘ நீங்கள் பாடிய நீலாம்பரி ராகத்தின் ஸ்வரஸ்தானத்தில் தவறு இருக்கிறது’’ என்றாள்.

பாடியதைத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். அவள் சொன்னது சரிதான். ஸ்வரஸ்தானம் லேசாக மாறியதைக்கூட துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டாளே என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஆட்டிசம் குழந்தைகள் இசையை உணர்வுபூர்வமாக அணுகுகின்றனர் என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்வு அது. இவ்வாறு அவர் கூறினார்.

கலை வழியாகவும், தொழில்நுட்பம் மூலமாகவும் ஆட்டிசத்தை இன்னமும் நெருக்கமாக புரிந்துகொள்வது எப்படி? ஆட்டிசம் குழந்தைகளின் தனி உலகத்தில் அவர்களோடு எப்படி நாமும் பயணிப்பது? அந்தக் குழந்தைகளிடம் மகிழ்ச்சியை எப்படிக் கொண்டுவருவது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.

கலை வழியாக ஆட்டிசத்தை எதிர்கொள்வதில் இருக்கும் நன்மைகள் பற்றி குழு விவாதம் நடந்தது. நடிகர், செயற்பாட்டாளர் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி) நெறிப்படுத்தினார்.

பாடி அசத்திய குழந்தைகள்

பாம்பே ஜெயஸ்ரீயும், அவரது மாணவிகளும் இணைந்து 25 ஆட்டிசம் குழந்தைகளிளுக்கு கர்னாடக இசைப் பயிற்சியை தொடர்ந்து வழங்கியுள்ளனர். இதன் பலனாக குழந்தைகள் பாடுவதைக் காட்டும் சிறிய குறும்படமும் விழாவில் திரையிடப்பட்டது.

ஆட்டிசம் குழந்தைகள் மெதுவாகவும், அதேநேரத்தில் உறுதியான வார்த்தை உச்சரிப்போடும் பாடினார்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீரோடு, அதை ரசித்தனர். ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாடகங்கள் மூலமாகப் பயிற்சியளிக்கும் ‘வேள்வி’ என்னும் அமைப்பை மதுரையில் நடத்தும் டாக்டர் பரசுராம் ராமமூர்த்தி, மும்பையில் சிறப்புக் குழந்தைகள் பயிற்சி மையமான லைட்ஹவுஸின் நிறுவனர் ஸில் பொடத்கர், டெல்லியில் இசை, நாடகம் மூலமாக ஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் பல்லவாஞ்சலி அமைப்பின் இயக்குநர் ஷாலு சர்மா, இதம் அறக்கட்டளையின் ஆலோசகரான கவிதா கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் டி.கே.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல கலைகள் கைகோர்ப்பதன் மூலம், ஆட்டிசம் குழந்தைகளின் உலகை நாம் புரிந்து கொள்ளவும், நம் உலகைப் பற்றிய புரிதலை அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தவும் முடியும் என்பதை உணர்த்தியது ‘சன்மதி’ கருத்தரங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x