Last Updated : 30 Aug, 2017 10:00 AM

 

Published : 30 Aug 2017 10:00 AM
Last Updated : 30 Aug 2017 10:00 AM

நாடக உலா: வைத்யசாலா

‘டம்மீஸ் டிராமா’ குழுவின் நாடகங்களைப் பார்ப்பது ஸ்டார் ஓட்டலில் இட்லி - வடகறி சாப்பிடுவது மாதிரி. வித்தியாசமான மேடை அமைப்புடன் டை கட்டிக்கொண்டு நிறையப் பேர் ஆங்கில வசனம் பேசுவார்கள். பல காட்சிகளில் விளக்கு வெளிச்சம் கம்மியாக இருக்கும். பின்னணி இசை ஒலித்த வண்ணம் இருக்கும். ஆனால், இவர்களின் நாடகங்களுக்கு டிக்கெட், ஜி.எஸ்.டி. எல்லாம் கிடையாது. மற்ற மேடை நாடகங்களில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவர் குழுவின் தலைவர் ஸ்ரீவஸ்தன். அரைத்த மாவை அரைக்க மாட்டார். புதுசாக தீம் பிடிப்பார்.

தலைப்புச் செய்தியில், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளெல்லாம் பெற்ற பிரபல மருத்துவ விஞ்ஞானி ராமநாத் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கும் இடத்தில் கதை ஆரம்பம். நிறையப் பேர் வரிசையில் வந்து அவர் படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். சோகமே உருவாக அவர் சகோதரி... கோபக் கனலாக அவர் மகள்.

ஃபிளாஷ்பேக் பயணம்.

மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத காலகட்டத்தில் காசநோயால் மரணிக்கிறாள் ராமுவின் அம்மா. சிறார்களை வளர்ப்பவர் ஒரு டாக்டர். ‘வைத்ய சாலா’ என்ற பெயர்ப் பலகையுடன் ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்.

ராமுவும், கல்பனாவும் வளர்கிறார்கள். கூடவே கதையும். கல்பனா டாக்டருக்குப் படிக்க, டிபி-க்கு மருந்து கண்டுபிடித்து, அது எளியவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆராய்ச்சியில் ராமு.

இளம் ஆராய்ச்சி மாணவனாக ராம்நாத். அவனுக்குத் தோள் கொடுக்கும் தோழன். அங்கே இங்கே இவர்கள் அலைய, மகேஷ் என்பவர் முதலீடு செய்ய முன் வருகிறார். ஒரு கட்டத்தில், கொடுத்த பணத்தை இவர் திருப்பிக் கேட்க…

“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா..?” என்று மகேஷின் மகளிடம் திடுதிப்பென்று கேட்கிறான் ராமு.

“நான் எதுக்கு உன்னை கல்யாணம் செஞ்சுக்கணும்..?”

“உன் கல்யாணச் செலவுக்குப் பணம் தேவைன்னு சொல்லி, கொடுத்தப் பணத்தை உன் அப்பா திருப்பிக் கேட்கிறாரே..?”

இருவரும் ஆடியோ இல்லாமல் தொடர்ந்து எதையோ விவாதித்துக் கொண்டிருக்கும்போதே, பின்னணியில் ‘கவுரி கல்யாணமே…’ பாடல் ஒலிக்க, இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக டைரக்டர் ஸ்ரீவஸ்தன் புரியவைப்பது நாடகத்தில் ஹைலைட் காட்சி!

ராமநாத் வெளிநாடு களுக்குச் சென்று, தன் கண்டுபிடிப்பை விளக்கி, தாய்நாடு திரும்பி ஆராய்ச்சிகளைத் துரிதப்படுத்த… இளம் ராமநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சி… கண் மூடித் திறப்பதற்குள் வளர்ந்துவிட்ட சயின்டிஸ்ட்டாக ஸ்ரீவஸ்தன்! அரங்கில் கரவொலிகள். மேடையில் பெரிய சோதனைக் கூடமாக வைத்யசாலா. டேபிளில் கண்ணாடிக் குடுவைகள்.

வெள்ளை கோட் அணிந்தும், வாயில் பச்சைத் துணி முகமூடி கட்டியும் நிறையப் பேர் குறுக்கும் நெடுக்குமாக! அடுத்த கட்டமாக, நோயை ஒரேயடியாக ஒழித்துவிடும் நோக்குடன் தடுப்பு மருந்து (Vaccine) கண்டுபிடிக்கும் முயற்சியில் ராமநாத் மறுபடியும் வெளிநாடு பயணம். வாயில் நுழையாத மருத்துவ குறியீட்டுச் சொற்கள். சோதனைக் கூடத்தில் போட்டி பொறாமைகள் ஆங்கிலத்தில் வசனங்கள்.... (‘நண்பனை சுட்டுக் கொன்னுட்டாங்க...’ என்பதைக்கூட ‘He has been assassinated’ என்று இங்கிலீஷ்லதான் சொல்லணுமா?’)

அங்கங்கே வரும் மருத்துவ சொல்லாட்சிகள் முழுவதும் புரியாவிட்டாலும், தடுப்பு மருந்து மூலம் நோயை ஒரே யடியாக நீக்கிவிட்டால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடக்கூடும் என்கிற பீதியில், மாஃபியா மாதிரி மருந்து தயாரிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு ராமநாத்தை தீர்த்துக் கட்டி விடுகிறார்கள் என்பது புரிகிறது.

இந்தியாவில் மருந்து தயாரிக்க முடியும் என்பதும், அது கடைக்கோடி மக்களும் வாங்கிவிடும் அளவில் மலிவு விலையில் கிடைக்கும் என்பதும் புரிகிறது. அந்த வகையில் ஸ்ரீவஸ்தனின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதே.

நடிப்பைப் பொறுத்தமட்டில் அனைவரின் நடிப்பும் நிறைவு. மருத்துவ மூளை உள்ளவர்களுக்கு நாடகம் பிடிக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x