Published : 28 Aug 2017 08:56 AM
Last Updated : 28 Aug 2017 08:56 AM
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், விண்வெளித் துறை ஆலோசகராகப் பணியாற்றியவருமான எம்.ஜி.கே.மேனன் (M.G.K.Menon) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலம் மங்களூரில் 1928-ல் பிறந்தவர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார்.
* ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றவர், 1942-ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார்.
* நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார். டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார்.
* விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றார்.
* காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.
* ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது.
* நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன.
* ஹோமிபாபா 1966-ல் இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரை யைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார்.
* பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷன், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008-ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
* சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் 88-வது வயதில் (2016) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT