Published : 27 Aug 2017 11:49 AM
Last Updated : 27 Aug 2017 11:49 AM

நார்மன் ஃபோஸ்டர் ராம்சே 10

அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் அறிஞரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான நார்மன் ஃபோஸ்டர் ராம்சே (Norman Foster Ramsey Jr) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வாஷிங்டனில் பிறந்தார் (1915). தந்தை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். பணி காரணமாக, குடும்பம் அடிக்கடி இடம் மாறியதால், ஆங்காங்கே பயின்றார். கான்சாசில் லீவன்வொர்த் பள்ளியில் முதலாவதாகத் தேறினார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் முதலாவதாகத் தேறி கணிதத்தில் பட்டம் பெற்றார்.

* இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். அங்கே எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளின் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பு பெற்றார். இவை இவருக்கு சோதனை இயற்பியலில் ஆர்வம் ஏற்பட வழிகோலின.

* 1940-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். வாஷிங்டனில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூட்டில் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார். அங்கே நியூட்ரான் - ப்ரோட்டான் மற்றும் ப்ரோட்டான்-ஹீலியம் சிதறல் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* இரண்டாம் உலகப்போர் சமயத்தில், லாஸ் அலமோசில் அணுகுண்டு ஆய்வுக்கூடத்தில் நியமிக்கப்பட்டார். மின்காந்த கதிர்வீச்சு மற்றும் ரேடார் தொடர்பான இவரது ஆராய்ச்சிகளும் முனைப்புகளும் எதிரி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய உதவின. 1945-ல் கொலம்பியா திரும்பி, இயற்பியல் பேராசிரியராகத் தன் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

* கல்விப்பணியுடன் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். மூலக்கூறு மற்றும் நியூட்ரான் கற்றை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். துல்லியமாக அணு ஹைட்ரஜன் ஹைபர்ஃபைன் தனித்துப் பிரித்தலுக்கான அடிப்படை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* 1947-ல் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்தார். பின்னாளில் ‘ராம்சே முறை’ என்று குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட ஆஸில்லேட்டரி துறைகள் முறையைக் (separated oscillatory fields method) கண்டறிந்தார்.

* இந்தக் கண்டுபிடிப்பு, அணுக்கரு காந்த அதிர்வு ஆராய்ச்சிகள், தற்போது மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையாக இருந்தன. அனைத்துக்கும் மேலாக, இவரது இந்த முறை மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் (accurate atomic clocks) மேம்படுத்தப்பட உதவியது.

* பல்வேறு மூலக்கூறுகள், மூலக்கூறுகளின் எண்ணிக்கை மற்றும் அணு சுற்றுகள், அணுகாந்த இருமுனை மற்றும் மின்சார குவாடர்போல் மொமன்ட்டுகள், மூலக்கூறுகள் சுழற்சி காந்த தருணம் உள்ளிட்ட அணுக்கருக்களின் பண்புகளை அளவிட இந்த முறைப் பயன்படுத்தப்பட்டது. 1960-ல் டேனியல் க்ளெப்னருடன் இணைந்து, மாறுபட்ட வகையிலான, ஹைட்ரஜன் மேஸர் என அறியப்படும் அணுக்கரு கடிகாரத்தைக் கண்டறிந்தார்.

* இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக 1989-ம் ஆண்டு, இயற்பியலாளர் ஹான்ஸ் ஜி. டெஹ்மால்ட்டுடன் இணைந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ‘எக்ஸ்பெரிமென்டல் நியூக்கிளியல் ஃபிசிக்ஸ்’, ‘நியூக்ளியர் மொமன்ட்ஸ்’, ‘மாலிக்யுலர் பீம்ஸ்’, ‘க்விக் கால்குலஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

* இ.ஓ. லாரன்ஸ் விருது, டாவிசன் - ஜெர்மர் பரிசு, அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவர், மெடல் ஆஃப் ஹானர், ராபி பரிசு, ராம்ஃபோர்ட் பிரீமியம், காம்ப்டன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு கவுரவங்கள், பரிசுகள், விருதுகளையும் பெற்றுள்ளார். இயற்பியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய நார்மன் ஃபோஸ்டர் ராம்சே 2011-ம் ஆண்டு மறைந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x