Published : 30 Aug 2017 09:41 AM
Last Updated : 30 Aug 2017 09:41 AM
க
டவுளின் தூதுவர் எனத் தன்னை கூறிக்கொள்ளும் குர்மீத் ராம் ரஹீம் என்ற சாமியார், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு ஹரியாணா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த கலவரங்களும், உயிரிழப்புகளும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கின்றன.
குர்மீத் ராம் ரஹீமுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகள் பெருமளவில் இவரது ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் சீக்கிய மதம் அவர்களை சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டி புறக்கணிப்பதும் ராம் ரஹீமின் அமைப்பான ‘தேரா சச்சா சவுதா’ அவர்களுக்கு ஒரு சமூக மதிப்பைத் தருவதும்தான் என ஆய்வாளர் கார்த்திக் வெங்கடேஷ் கூறுகிறார்.
2007-ல் குரு கோவிந்த் சிங் போல உடையணிந்து காட்சி தந்தார் என்பதற்காக குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ராம் ரஹீமின் ஆதரவாளர்களான தலித்துகளின் பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கப்பட்டன. அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானார்கள். இதன் பின்னணியில் இருந்த அரசியல் காரணம் அவர் 2007 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்ததுதான். அவரது ஆதரவால் அதுவரையில் அகாலிகளின் பிடியிலிருந்த மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது பாஜக - அகாலி கூட்டணிக்கு ஆத்திரத்தை தந்தது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அவர்மீதும் அவரது ஆதரவாளர்கள்மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டன என்கிறார் கார்த்திக் வெங்கடேஷ்.
பஞ்சாப்பில் ராம் ரஹீமை எதிர்த்த பாஜக ஹரியாணாவில் 2014 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது அவரது ஆதரவை நாடியது. அந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ராம் ரஹீம் சாமியாரின் ஆதரவே காரணம். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து ராம் ரஹீம் சாமியாருக்கு ஹரியாணா அரசு பலவிதமான சலுகைகளை வழங்கியது. இப்போது ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுப்பதற்கு அந்த மாநில பாஜக அரசு முன்கூட்டி கெடுபிடியான எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கும்கூட அந்த ஆதரவு நிலையே காரணம் என கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பது மட்டும் போதாது. சில அடிப்படை அம்சங்களையும் பார்க்க வேண்டும். சீர்திருத்தங்களை முன்வைத்து உருவான சீக்கிய மதம் சாதிய அமைப்பை உள்வாங்கித் தோல்வி அடைந்திருப்பது, சமூக நல அரசு என்ற நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி (அதுதான் இத்தகைய சாமியார்களை நோக்கி மக்களைத் தள்ளுகிறது), வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற சாமியார்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வது (அது சாமியார்களுக்கு ஒரு அங்கீகாரத்தைத் தருகிறது) போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பிரச்சினையை அணுகினால் நமக்குப் பல உண்மைகள் புலப்படும்!
- ரவிக்குமார்,
எழுத்தாளர், விசிக பொதுச்செயலாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT