Published : 04 Aug 2017 09:58 AM
Last Updated : 04 Aug 2017 09:58 AM
தே
சிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய நான்கிலும் இடம்பெற்ற ஒரே தமிழர்.
முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கியபோது, அதன் முக்கியத் தலைவராக காயிதே மில்லத் இருந்தார். தேசப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவரானார். பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்அந்நாட்டின் பிரதமர் லியாகத் அலி கான்.
சுதந்திரத்துக்குப் பிறகான முதல் பொதுத் தேர்தலின்போது காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுமாறு காயிதே மில்லத்துக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் நேரு. காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினார். மறுத்துவிட்டார் காயிதே மில்லத்.
முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைகள் விஷயத்தில் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்தல் அரசியல் நோக்கங்களைப் புறக்கணித்தும் இயங்கியவர் காயிதே மில்லத்.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது, இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத். “பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பேசினார் காயிதே மில்லத்.
அதேபோல தேவிகுளம் பீர்மேடு விவகாரத்திலும் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார் காயிதே மில்லத். அந்தப் பகுதிகளில் தமிழர்களே அதிகம். தமிழ் பேசுபவர்களே அதிகம். ஆகவே, அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டியது என்றார். இத்தனைக்கும் காயிதே மில்லத்துக்கு கேரளாவில் செல்வாக்கு மிக அதிகம். தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகப் பேசினால் அவருடைய செல்வாக்கு பன்மடங்கு உயரும். ஆனாலும், உண்மையின் பக்கம் நின்றார் காயிதே மில்லத்.
1971-ல் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். “நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள்” என்றார் காயிதே மில்லத்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT