Published : 26 Nov 2014 10:16 AM
Last Updated : 26 Nov 2014 10:16 AM
இந்திய வெண்மைப் புரட்சி நாயகர் என போற்றப்படும் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
கேரளத்தில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். டென்னிஸ், பேட்மின்டன், பாக்ஸிங், கிரிக்கெட்டில் திறமைசாலி.
தாய் வற்புறுத்தியதால் ராணுவ ஆசையைக் கைவிட்டு, டாடா இரும்பு எஃகு நிறுவனத்தில் (டிஸ்கோ) சேர்ந்தார். டாடா குழும இயக்குநரான தனது மாமா ஜான் மத்தாய் சிபாரிசு செய்தது தெரியவந்ததும் வேலையை ராஜினாமா செய்தார்.
பிரிட்டிஷ் அரசின் உதவித் தொகையுடன், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பால் பண்ணை பொறியியல் பட்டமும், உலோகவியல், அணுசக்தி இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ஸ்காலர்ஷிப் நிபந்தனைப்படி, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள அரசு பால் பண்ணையில் வேலை பார்த்தார். அங்கு தண்டச் சம்பளம் வாங்குவது பிடிக்காததால், தொடர்ந்து அரசை நச்சரித்து வேலையில் இருந்து விலகினார்.
அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் தலைமையில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. அவரது அழைப்பை ஏற்று, அந்த பால் பண்ணையை நவீனமயமாக்கம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
கூட்டுறவு பால் உற்பத்தி தொழிற்கூடத்தை முழுமையாக மேம்படுத்தினார். ஏழை விவசாயிகளை முன்னேற்ற அவருக்குள் ஊற்றெடுத்த ஆர்வம் நிரந்தரமாக அவர்களுடன் இணைத்துவிட்டது. ஆனந்த் நகரம் இவரது கர்மபூமியானது.
கைரா மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கம் படிப்படியாக வளர்ந்து நாடு முழுவதும் வியாபித்து வெண்மைப் புரட்சியை மலர வைத்தது. ‘அமுல்’ (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) பால் பண்ணை, உலகப்புகழ் பெற்றது. பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி கேட்டதற்கு இணங்க, அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாக வெற்றிபெற வைத்தார்.
‘லட்சக்கணக்கான ஏழை மக்களின் ஆரோக்கியம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களை இந்த சமுதாயத்தின் ஆக்கத்திறன் படைத்த அங்கத்தினர்களாக மாற்றத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வர்கீஸ் குரியன்’ என்று ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
24 மாநிலங்களில் 200 பால் பண்ணைத் தொழிற்கூடங்கள், 12 ஆயிரம் கிராமக் கூட்டுறவு சங்கங்கள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தினமும் 2 லட்சம் கோடி லிட்டர்பால் சேகரிப்பு என கிளை விரித்துள்ள அமுலின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல்.
எண்ணற்ற தடைகளைத் தகர்த்து பால் உற்பத்தியில் உலகின் முதன்மையான தேசமாக பாரதத்தை உயர்த்திய வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் 90-வது வயதில் 2012-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT