Published : 20 Aug 2017 09:31 AM
Last Updated : 20 Aug 2017 09:31 AM

ஸ்ரீ நாராயண குரு 10

கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவரும் சிறந்த கல்வியாளருமான ஸ்ரீ நாராயண குரு (Sri Narayana Guru) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் தீண்டத்தகாதவர்கள் என புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார் (1856). பிறந்த ஊரிலேயே கல்வி கற்றார். அப்போதே அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் பிறந்தது.

* 23-வது வயதில் ஊரைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டுக்கு வந்து துறவு பூண்டார். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மந்திரங்கள், பவுத்த, சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள், இந்திய, வெளிநாட்டு தத்துவங்கள் ஆகியவற்றை கற்று நிபுணத்துவம் பெற்றார்.

* 1888-ல் அருவிக்கரை என்ற சிற்றூரில் குருகுலம் நிறுவினார். ஏழை, அநாதைக் குழந்தைகளுக்குப் பல இடங்களில் பள்ளிகளை நிறுவினார். அவர்களுக்கு சமஸ்கிருதம், யோகா கற்றுத் தந்தார். திருச்சூர், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, மங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் இவரது மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பட்டன.

* நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான சீடர்கள் இவரை நாடி வந்தனர். தன் சீடர்களை ஒன்று சேர்த்து ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1913-ல் அத்வைத ஆசிரமம் தொடங்கினார். இது ‘ஓம் சோதர்யம் சர்வத்ர’ (உலகளாவிய சகோதரத்துவம்) கோட்பாட்டைப் பின்பற்றியது.

* ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் மிளிர்ந்தார். 1897-ல் மலையாளத்தில் இவர் இயற்றிய ‘ஆத்மோபதேச சதகம்’ சிறந்த இலக்கியமாகவும், இவரது தலைசிறந்த தத்துவ நூலாகவும் போற்றப்பட்டது. ‘சுப்ரமணிய சதகம்’, ‘ஜாதி நிர்ணயம்’, ‘தோத்திரப்பாடல்கள்’, ‘தரிசன மாலா’, ‘வேதாந்த சூத்திரம்’, ‘தர்மம்’, ‘தேவாரப் பதிகங்கள்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்தார்.

* இவரது சீர்திருத்த கொள்கைகளின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபை. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார். பாரதியார் இவருடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும், சமஸ்கிருத படைப்பு களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

* அனைவரும் அறிவை அடைய வேண்டும் என்றும் அதற்கு எந்தக் குறுக்கு வழிகளும் கிடையாது என்றும் இவர் கூறுவார். அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பின்னர் தனக்கென ஒரு நோக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

* இவரது தத்துவங்கள், கோட்பாடுகள் குறித்து இவர் படைத்த பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இவரது தத்துவங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் குறித்து கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும், வேறு சில பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

* பல மாணவர்கள் முனைவர் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டமும் பெற்றுள்ளனர். ‘அனைத்தும் ஒன்றே’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ‘இரண்டாம் புத்தர்’, ‘இந்திய சமூகச் சீர்திருத்தவாதி’, ‘ஆன்மிகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவர்’ என எல்லோராலும் போற்றப்பட்டார்.

* சிறந்த இலக்கியப் படைப்பாளி, தத்துவஞானி என்றெல்லாம் போற்றப்பட்டவருமான ஸ்ரீ நாராயண குரு 1928-ம் ஆண்டு தனது 72-வது வயதில் மகா சமாதி அடைந்தார். இவரது நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. இவரது பிறந்த நாள், மகா சமாதி அடைந்த நாள் இரண்டுமே கேரளாவில் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x