Published : 05 Nov 2014 12:59 PM
Last Updated : 05 Nov 2014 12:59 PM
"பாலு! இந்தக் காலத்துல சாதி மதம் எல்லாம் ஏது? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சிருக்குது." - திவ்யாவின் பெரியப்பா முருகேசன் தம்பி பாலுவிடம் சொன்னார்.
"அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத்கிட்டே இருக்குது. நாம ஒத்துக்கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?" திவ்யாவின் சித்தப்பா பிரபாகரும் தன் பங்குக்கு சொன்னார்.
‘பெரியப்பாவும் சித்தப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக்கிறார்?’ அறையிலிருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திவ்யாவின் மனம் கொதித்தது.
"எனக்கு இந்தக் கல்யாணத்துக்கு மனசு ஒப்பலை. நீங்க ரெண்டுபேரும் திவ்யாவுக்குப் பரிஞ்சு பேசறீங்க. நீங்க ரெண்டுபேருமே நின்னு கல்யாணத்தை நடத்துங்க." வேண்டா வெறுப்பாய் சொன்னார் திவ்யாவின் அப்பா பாலு.
"சரி, கல்யாணத்தை நாங்க பார்த்துக்கறோம் போதுமா…!" சொன்ன முருகேசனும் பிரபாகரும் சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றார்கள்.
"பெரியப்பாவும் சித்தப்பாவும் என்னைப் புரிஞ்சுக்கிட்ட அளவு அப்பா என்னைப் புரிஞ்சுக்கலயேம்மா …" அம்மா ஆனந்தியிடம் வருத்தத்தோடு கேட்டாள் திவ்யா.
"திவ்யா! மகளோட காதலுக்கு நாம சட்டுன்னு ஒத்துக்கிட்டா அண்ணன் தம்பி ரகளை பண்ணுவாங்க, கல்யாணத்துக்கு வரமாட்டாங்கன்னுதான் உங்க அப்பா இந்த நாடகம் போட்டார். இப்போ பெரியப்பா சித்தப்பாவே முன்னே நின்னு உன் கல்யாணத்தை நடத்தும்படி வெச்சுட்டார்ல. இருபத்தஞ்சு வருஷ வாழ்க்கைல இதுகூட எனக்குப் புரியாமலா போயிடும்?" கிண்டலாய் ஆனந்தி சொல்ல, ஹாலுக்கு ஓடிவந்த திவ்யா அங்கே குறும்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் நெகிழச் சொன்னாள்:
"ஸாரிப்பா… நான்தான் உங்களை சரியாப் புரிஞ்சுக்கலை!"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT