Published : 30 Jul 2017 08:50 AM
Last Updated : 30 Jul 2017 08:50 AM
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் எழுத்தாளருமான மா.நன்னன் (Ma. Nannan) பிறந்த தினம் இன்று (ஜூலை 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர் (1924). இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தனது சொந்த ஊரை அடுத்த திருமுட்டத்தில் 8-ம் வகுப்பு வரை பயின்றார்.
* சிதம்பரத்தில் புகுமுக வகுப்பு தேர்ச்சி பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார். கல்லூரியில் பயின்றபோது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றார்.
* தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றினார்.
* பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றி னார். 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியன குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந் தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
* எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.
* அதில் ‘உங்களுக்காக’ என்ற தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கியதோடு நடித்தும் உள்ளார். கட்டுரை கள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.
* ‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
* இவற்றில் ‘பெரியாரைக் கேளுங்கள்’ என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.
* தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
* ‘நன்னன் குடி’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் அறக்கட்டளை, கல்வியில் சாதனை புரியும் மாணவர்களுக்கும் பல்வேறு தமிழ்ப்பணிகள், சமூகப் பணிகளில் தடம் பதிப்போருக்கும் பரிசளித்து ஊக்குவித்து வருகிறது. முதுபெரும் தமிழறிஞர் மா.நன்னன் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT