Last Updated : 24 Nov, 2014 09:29 AM

 

Published : 24 Nov 2014 09:29 AM
Last Updated : 24 Nov 2014 09:29 AM

இன்று அன்று| 1877 நவம்பர் 24: கான் பகதூர் காவஸ்ஜி பெட்டிகரா பிறந்த தினம்

தெற்கு மும்பையின் மெட்ரோ திரையரங்கம் அருகே, 6 அடி உயர பீடத்தின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கிறது காவஸ்ஜி பெட்டிகராவின் சிலை. பிரிட்டிஷ் இந்தியாவின் காவல் துறை துணை ஆணையராகப் பதவியேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் காவஸ்ஜி பெட்டிகரா. 1877-ல் இதேநாளில் பார்சி இனத்தைச் சேர்ந்த ஜாம்ஷெட்ஜி நஸர்வாஞ்சி பெட்டி கரா, தன்பாய்ஜி பஸ்தாவல்லா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்.

1903-ல் காவல்துறை துணை ஆய்வாளராக, தனது பணியைத் தொடங்கினார் காவஸ்ஜி. குற்றங்களைக் களையும் பணியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கிய அவர் குறுகிய காலத்திலேயே காவல்துறை ஆய்வாளராகவும், 10 ஆண்டுகளில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். 1928 பிப்ரவரி 1-ல் பாம்பே காவல்துறையின் துணை ஆணையராகப் பதவியேற்றார். 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த அவர் 1937 ஏப்ரல் 11-ல் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

1912-ல் அவருக்கு கான் சாஹிப் பட்டம் வழங்கி கவுரவித்தது, பிரிட்டிஷ் அரசு. 1919-ல் கான் பகதூர் பட்டமும் பெற்றார் காவஸ்ஜி. 1934-ல் காவலருக்கான மன்னர் பதக்கமும் வென்றார். ஓய்வுக்குப் பின்னர், ஆகா கானின் மகனும் இளவரசருமான அலிகானின் எஸ்டேட்டின் நிர்வாகியாகப் பதவியேற்றார். அந்தப் பதவியில் அமர்ந்த முஸ்லிம் அல்லாத முதல் நபரும் காவஸ்ஜி பெட்டிகராதான். கடுமையான அதிகாரி என்று பெயரெடுத் தாலும் தனக்குக் கீழ் பணிபுரிந்த காவலர் களிடம் பரிவுடன் நடந்துகொண்டார்.

ஏழை மக்களுக்கும், குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கினார். 1941 மார்ச் 28-ல் தனது 63-வது வயதில் மரணமடைந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் உச்சம் அடைந்திருந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசின் பணியாளராகத் தன் கடமையை நிறைவேற்றினார். அதேசமயம், விடுதலைப் போராட்ட வீரர்களை பெரிதும் மதித்தார். 1931-ல் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்துகொள்ள பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்த காந்தி, தனது சான்றாளர்களில் (ரெஃபரென்ஸ்) ஒருவராக காவஸ்ஜியைக் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x