Published : 29 Jul 2017 10:22 AM
Last Updated : 29 Jul 2017 10:22 AM
தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் (1936). கிராமத்து திண்ணைப் பள்ளியில் பயின்றார். பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பு கசந்தது. பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.
மகனின் செயலால் தந்தை ஏமாற்ற மடைந்தார். குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஒரு ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார் தந்தை. அதன் பின்னர் மேற்படிப்புக்காக தமிழகம் திரும்பினார். கி.ஆ.பெ.விசுவநாதன், தொ.பொ.மீ., மா.பொ.சி. உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது.
இதனால் தந்தை விரும்பியபடி மருத்துவப்படிப்பில் சேராமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ஹானர்ஸ் சேர்ந்து, பட்டம் பெற்றார். இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தொல்காப்பியம், நன்னூல், யாப்பிலக்கணம் என அத்தனையும் கற்றார்.
1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து நிறைய எழுதினார்.
1963-ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டார்.
மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் பாவேந்தர் விருது, கபிலர் விருது, தேவசிகாமணி விருது, சொல்கட்டுக் கவிஞர் விருது என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’, ‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட கவிதை நூல்கள், ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம், ‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட சிறுவர் நூல்கள், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’, ‘நேற்று பெய்த மழை’ உள்ளிட்ட உரைநடை நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘சச்சிதானந்தன் கவிதைகள்’, ‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், ‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.
பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு, அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார். இலக்கியத்தின் பல களங்களில் தடம் பதித்திருந்தாலும் ஒரு சிறந்த கவிஞராகவே இவர் பெரிதும் அறியப்படுகிறார்.
இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 81 வயதை நிறைவு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT