Published : 13 Jul 2017 10:19 AM
Last Updated : 13 Jul 2017 10:19 AM
பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியருமான வைரமுத்து (Vairamuthu) பிறந்தநாள் இன்று. (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
* தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் (1953). தந்தை, விவசாயி. 1957-ல் இவரது குடும்பம் பக்கத்து கிராமமான வடுகப்பட்டிக்கு இடம் பெயர்ந்தது. வடுகப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.
* 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சியடைந்தவர். பள்ளி இறுதித் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று, வெள்ளிக் கோப்பையை வென்றார். 1972-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்றபோது, இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வைகறை மேகங்கள்’ வெளிவந்தது.
* சென்னைப் பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. தமிழ் இலக்கியத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்து, தங்கப்பதக்கம் வென்றவர். 1978-ல் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதிய ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது...’ பாடல், இவரது முதல் திரைப்படப் பாடல்.
* இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, வெற்றிகரமான பாடலாசிரியராக இயங்கி வந்தாலும், தமிழ் மீது கொண்ட நேசத்தால் நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார்.
* இதுவரை 37 நூல்கள் எழுதியிருக்கிற இவரது சில படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கணி, வங்காளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
* சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறையும், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 6 முறையும் வென்றுள்ளார். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக 2003-ல் சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பத்ம, பத்மபூஷண் விருதுகள் மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘சாதனா சம்மான்’ விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.
* இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்றும், அப்துல்கலாம் ‘காப்பியக் கவிஞர்’ என்றும் அழைத்தனர்.
* முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி இவருக்கு ‘கவிப்பேரரசு’ என்ற பட்டம் வழங்கினார். லண்டன் முன்னாள் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், ‘உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள்’ என்று இவரைப் பாராட்டினார்.
* ‘அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ இவரது கவிதைகளை இவர் குரலில் ஒலிப்பதிவு செய்து அழியாத ஆவணமாய்ப் பாதுகாக்கிறது. புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ மலேசியா டான் சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 10,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கியது.
* அண்மையில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட்ட இவரது மலையாளச் சிறுகதைகள் நூல் இரண்டே வாரங்களில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. ‘இயற்கை மறைப்பதை மனிதன் கண்டடை கிறான்; மனிதன் மறைப்பதை இலக்கியம் கண்டறிகிறது’ என்ற படைப்புக் கொள்கையோடு எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் வைரமுத்து இன்று 64-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT