Published : 19 Nov 2014 03:31 PM
Last Updated : 19 Nov 2014 03:31 PM
கேள்வி: அன்புள்ள டான். ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி?
பதில்: ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். அப்போது நான் பிறந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டே என் அப்பா பக்கத்து வீட்டு மாமாவிடம் ரஜினி அரசியலுக்கு வருவாரா எனத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அதற்கு முன் என் அப்பாவைத் தொட்டிலில் ஆட்டியபோது என் தாத்தாவும் இதே பிரச்சினையைப் பேசிக்கொண்டிருந்ததாக தாத்தா பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் சளைத்தவன் அல்ல. எனக்கு விவரம் தெரிந்து ‘ப்ளட்ஸ்டோன்’ திரைப்படத்திலிருந்தே ரஜினியின் சமூக அக்கறையையும், தொலைநோக்குச் சிந்தனையையும் கவனித்துவருகிறேன்.
குறிப்பாக, ரஜினி கதை எழுதிய பாபா திரைப்படம் இந்திய சமூகப் படங்களில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. மனீஷா கொய்ராலாவைக் ‘கதம் கதம்’ என சொல்லிப் புறக்கணித்தது, பாபா கொடுத்த ஏழு வரங்களையும், பட்டம் பிடிப்பது, ரம்யா கிருஷ்ணனை மணி கேட்க வைப்பது போன்ற சிக்கனமான முறைகளில் பயன்படுத்தியது என அதில் சமூகப் பிரச்சினை களை நுணுக்கமாகக் காண்பித்திருப்பார். அதிலும், அந்த இறுதிக் காட்சியில் இமயமலையா, தமிழ்நாடா என அவர் முடிவு செய்யும் காட்சி, பல பிஞ்சு மனங்களில் புரட்சியைத் தூவிய ஒன்று. நான் சே குவேராவுக்குப் பிறகு, யாரையும் சே குவேரா என அழைத்ததில்லை.
பக்கத்து வீட்டு சரவணனுக்குப் பிறகு, நான் யாரையும் சரவணன் என அழைத்த தில்லை. ஆனால், முதல்முறையாக ரஜினிக்குப் பிறகு, ரஜினியை மட்டும்தான் ரஜினி என்றழைக்கிறேன். ரஜினி மட்டும்தான் ரஜினி என்றழைக்கப் பொருத்தமானவர். ஏனெனில், ரஜினியின் பெயர்தான் ரஜினி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கி.மு. 3-ம் ஆண்டிலிருந்தே ரஜினி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எதுவுமே செய்யவில்லையே என நீங்கள் கேட்கலாம். தமிழக மக்கள் இப்போது பெரும் பணக்காரர்களாக, எந்தப் பிரச்சினையுமே இல்லாதவர்களாக, ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு ஏதாவது கேடு நடக்கட்டும் எனக் காத்திருக்கிறார்.
கேடு ஏதாவது நடந்தால்தானே நல்லது செய்ய முடியும் என்ற தொலைநோக்குப் பார்வை உடையவர்தான் ரஜினி. அவரால் மட்டும்தான் இந்தச் சமூகத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியும். அதனால், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT