Published : 29 Jul 2017 10:04 AM
Last Updated : 29 Jul 2017 10:04 AM
கா
ல் கிலோ அவரைக்காயை எடுத்துக்கொள்ளவும். நாரை உரித்துவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டுக் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் அவரை மாவை உள்ளங்கையில் வைத்து தட்டித் தட்டி அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சுவையான அவரை வடை தயார்.
மேற்படி சமையல் குறிப்பை உங்கள் வாழ்நாளில் எங்குமே நீங்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது. அவரை வடையா? கண்றாவி என்று முகம் சுளித்துவிட்டுப் போய்விடுவீர்கள். தவிர பருப்பு இல்லாமல் இது எப்படி வடையாகும்? இதெல்லாம் வாயில் வைக்க ’விளங்காது’ என்று தீர்ப்பெழுதிவிடுவீர்கள். ஆனால், வடையின் ஆதிகாலம் இங்கே இப்படித்தான் தொடங்கியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவரைக்காய் வடை, பீன்ஸ் வடை, கத்திரிக்காய் வடை, உருளைக்கிழங்கு வடை என்று காய்களை அரைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கிற வழக்கம் தென்னிந்தியாவில் ஆதிகாலத்தில் இருந்தி ருக்கிறது. வடை என்பது பருப்பின் குழந்தை என்று சரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலம் துல்லியமாகத் தெரியவில்லையே தவிர, 10-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை பெரும்பாலும் வடையென்றால் காய்கறி சம்பந்தமுள்ளதுதான். இன்றைக்குப் புழக்கத்தில் உள்ள வாழைப்பூ வடை, முட்டைக்கோஸ் வடையெல்லாம் அதன் மிச்சசொச்சமே.
அது நிற்க. இன்று இந்த வடை புராணத்தை நான் நினைவுகூர ஒரு காரணம் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் சென்ற வருடம் இதே நாள் என்று பழைய படம் காட்டுகிற வழக்கம் ஒன்று உண்டல்லவா?
இன்று தற்செயலாக எனக்கு அப்படி அகப்பட்ட படம், சென்ற வருடம் இதே நாளில் நான் வடை சாப்பிட்ட படம். பெரிய பிரமாதமெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் வடை சாப்பிட்டதையும் வரலாற்றில் பதிவு செய்கிற கெட்ட வழக்கம் இருந்தபடியால் அப்போது அதைப் போட்டு வைத்திருக்கிறேன்.
ஓவல் வடிவக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட சாம்பாரில் ஊறி, உப்பியிருந்த இரண்டு உளுந்து வடைகள். அதன்மீது கொஞ்சம் வெங்காயம், கேரட், கொத்துமல்லி தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. எந்த ஓட்டலில் போய்ச் சாப்பிட்டேன் என்று நினைவில்லை. அநேகமாக கோடம்பாக்கம் அட்சயாவாக இருக்கும். அவசரப் பசிக்கு அங்கேதான் அடிக்கடி போவேன். பெரும்பாலும் திராபையாகத்தான் இருக்கும் என்றாலும் தப்பித் தவறி சமயத்தில் சுவையாகவும் அமைந்துவிடும்.
விஷயம் அதுவல்ல. எப்போது வடை உண்ண நேர்ந்தாலும் நான் என் பெரியப்பாவை நினைத்துக்கொள்வது வழக்கம். அவருக்கு இப்போது 90 வயது. எனக்கு நினைவு தெரிந்த நாளாக, தான் சந்திக்கும் அத்தனைப் பெண்களிடமும் அவர் தவறாமல் ஒரு விஷயம் கேட்பார். ''உங்களால் நெய்யில் வடை செய்து தர முடியுமா?’’
இன்றுவரை அவரது ஆசை நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில், ஒரு வாரம் முன்னால் சந்தித்தபோதுகூட அவருக்கு அந்த ஆசை மிச்சம் இருப்பதை அறிந்தேன். விரைவில் அந்த அவாவை நானே நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
பிரச்சினை என்னவென்றால் நெய்யால் ரொம்ப நேரம் அடுப்பில் சூடுபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதன் வாசனை மாறிவிடும். வடையும் நாறிவிடும். சூடு தாங்குவதற்காகவே எண்ணெய் இனங்களுக்கு ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுவதையெல்லாம் பெரியவருக்கு விளக்கிக்கொண்டிருக்கவும் முடியாது. ஆனால், வடையின் ருசியில் எத்தனை தோய்ந்திருந்தால் அதை மேலும் ருசிகரமாக்க நெய்யில் பொரித்தால் என்ன என்று ஒருவருக்குத் தோன்றும்!
நானும் வடை ரசிகனாக இருந்தவன்தான். ஆனால், எனக்கு மெதுவடை பிடிக்காது. கரகரப்பாக இருந்தால் அதன் தோலை மட்டும் பிய்த்துத் தின்பேனே தவிர, பூப்பந்து போலிருக்கும் அதன் உட்புறத்தையல்ல. எனக்கு மசால்வடை ரொம்பப் பிடிக்கும். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்குத் தட்டப்பட்டு, ஒரே வாயில் உள்ளே போட்டு மெல்லத்தக்க விதத்தில் சுடப்படுகிற தள்ளுவண்டி மசால்வடைகள். சமூகமானது இந்த அற்புதமான சிற்றுண்டியை சாராயக் கடை சைட் டிஷ்ஷாக்கி அவமானப்படுத்திவிட்டது. அப்படி என்னத்துக்காவது ஒன்றுக்கு இதைத் தொட்டுக்கொண்டுதான் தின்று தீர்க்கவேண்டுமென்றால் அதற்குச் சில வழிகள் சொல்லுகிறேன்.
முதலாவது ராகி மால்ட்.
ராகி மால்ட்டில் ஊறிய மசால்வடைக்கு ஓர் அபாரமான ருசியுண்டு. டீயில் தோய்த்து உண்டாலும் நன்றாகவே இருக்கும் என்றாலும் நான் ருசி பார்த்த வரையில் வடைக்குச் சரியான காம்பினேஷன் ராகி மால்ட்தான்.
கல்லூரி நாட்களில் தனஞ்செயன் என்றொரு நண்பன் எனக்கிருந்தான். தள்ளுவண்டி மசால் வடைகளைப் பொட்டலமாக வாங்கிக்கொண்டு நேரே ஆவின் பூத்துக்குப் போய்விடுவான். அங்கே சிறிய பால்கோவா பாக்கெட் ஒன்று, குளிரூட்டப்பட்ட ஃப்ளேவர்ட் மில்க் ஒன்று வாங்குவான். இரண்டு வடைகளைப் பால்கோவாவுடன் சேர்த்துத் தின்றுவிட்டு, இன்னும் இரண்டு வடைகளை ஃப்ளேவர்ட் மில்க்கில் தோய்த்துச் சாப்பிடுவான்.
முதலில் எனக்கு இது விநோதமாக இருந்தது. ஆனால், ஒருமுறை ருசித்துப் பார்த்ததும் கிறுகிறுத்துப் போய்விட்டேன். குறிப்பாக மசால்வடையைப் பால்கோவாவுடன் சேர்த்து மெல்வது ஒரு நூதன அனுபவம். இரண்டுமே நல்ல தரத்து சரக்குகளாக இருக்கும்பட்சத்தில் பத்து இருபது வடைகளையும் கால் கிலோ பால்கோவாவையும் ஏழெட்டு நிமிடங்களில் கபளீகரம் பண்ணிவிட முடியும்.
இம்மாதிரி முயற்சிகளை நமது உணவகங்கள் ஏன் செய்து பார்ப்பதில்லை என்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப ஒரே சாம்பார் வடை, ஒரே ரச வடை, ஒரே தயிர் வடை. கடுப்பில் ஒரு நாள் ஸ்டிராபெரி ஐஸ் க்ரீமுக்கு மெதுவடை தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பார்த்தேன். டிரை குலோப் ஜாமூன் தொட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் காட்டிலும் அது ருசியாகவே இருந்தது.
அந்த ஃபேஸ்புக் போட்டோ விவகாரத்துக்கு வருகிறேன். அநேகமாக அதுதான் நான் சாப்பிட்ட கடைசி வடையாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த ஒரு வருடகாலமாக வடையற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். இந்த எண்ணம் தோன்றியதுமே ஒரு சுய பச்சாதாபம் பொங்கிவிட்டது. உடம்பைக் கெடுக்காத, சொய்யாவென்று ஓரிரு கிலோ ஏற்றித் தொலைக்காத ஒரு உத்தம வடையை நாமே கண்டுபிடித்தாலென்ன என்று தோன்றியது.
தேவை, ஒரு பிடி பாதாம் பருப்பு, கொஞ்சம் முட்டைக் கோஸ், வெங்காயம், பூண்டு, பாதாமை அரைத்துக்கொள்ள வேண்டியது. கோஸ், வெங்காயங்களை நறுக்கிக்கொள்ள வேண்டியது. சம்பிரதாய உப்பு, மிளகு விவகாரங்களைச் சேர்த்து வடை போல் தட்டிக்கொள்ள வேண்டியது. இதை மைக்ரோவேவில் அல்லது தோசைக் கல்லில் சுட்டு எடுத்து, சுடச்சுட உருக்கிய நெய்யில் இரண்டு நிமிடம் போட்டுப் புரட்டி ஊறவைத்துவிட வேண்டியது.
வடையாகிவிடாதா? பொரித்தால்தான் வடை, இதெல்லாம் வேறு ஜாதி என்பீரானால் உங்களிஷ்டம். இப்படி ஒரு பாதாம் வடை செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறேன். ருசிக்காக மட்டும்தான். இதைச் சத்துணவு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனெனில், என்னதான் பாதாம் அதி சத்து உணவுப் பொருள் என்றாலும் அதனோடு வேறெதையும் சேர்த்துச் சாப்பிடுவது சரியல்ல. என்ன சேர்த்தாலும் அதன் பலத்தை அழித்துவிடுகிற வாலி வகையறா அது.
ஆனால் எண்ணெயில் பொரிக்கிற வடையைவிட ஒன்றும் இது மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் பரிசோதனை செய்து பார்த்துவிடுவேன். நெய்வடை கோரிய எலியொன்று கைவசம் இருக்கிறது.
- ருசிக்கலாம்...
எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT