Published : 11 May 2017 10:07 AM
Last Updated : 11 May 2017 10:07 AM
“கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர்.
“போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு.
“பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல்றீங்க?”
“காருக்கு பெட்ரோல் போடுற செலவு இருக்குல்ல. அதை அங்கே ஆட்டோவுக்குக் குடுக்கலாம்!”
“அதுக்கு இல்லப்பா. உங்களுக்கும் சிரமம். பசங்களுக்கும் சிரமம். கார் இருக்குறப்ப எதுக்காக இவ்வளவு சிரமப்படணும்னுதான் கேட்கிறேன்.”
“கொஞ்சம் சிரமம்தான். ஆனா பஸ்ல போறதுலேயும் எவ்வளவோ நல்லதுஇருக்கத்தான் செய்யுது.”
“என்ன நல்லது? இந்த வேகாத வெயில்ல, கூட்டத்துல சிரமத்தோட போயிட்டு வரணுமா?” ஆச்சரியமாக கேட்டான் பிரபாகர்.
“வெயில் எல்லாருக்கும்தான் இருக்குது. கார்ல போனா வீட்டுல பார்க்குற அதே முகங்களைத்தானே பார்த்துட்டு போகணும். வீட்டுல என்ன பேசிக்கிறோமோ அதைத்தான் பேசிட்டுப் போகணும். பஸ் மாதிரி பொதுவாகனத்துல போனா எத்தனை மனிதர்களைச் சந்திக்கலாம். வழியில எத்தனை அனுபவங்கள் கிடைக்கும். தினமும் உன் பிள்ளைங்க வேன்ல வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் போயிட்டு வர்றாங்க. ஏழை ஜனங்க எப்படியெல்லாம் வாழ்றாங்கன்னு குழந்தைகளுக்குத் தெரியுமா?
இந்த மாதிரி பொதுவாகனத்துல போனா யாரோ ஒருத்தருக்கு நம்ம இருக்கையைப் பகிர்ந்து கொடுக்கணும்னு கத்துக்குவாங்க. எத்தனை மக்கள் கூட்டத்துல பயணம் செய்யுறாங்கன்னு தெரிஞ்சுக்குவாங்க. பொது இடத்துல எப்படி பேசணும்னு கத்துக்குவாங்க…” - ராகவன் சொல்ல,
“மாமா சொல்றதும் சரிதானே! மாமா ஆரோக்கியமா இருக்கிறவரைக் கும் பஸ்லயே போகலாம். குழந்தைகளுக்கும் இது ஒரு அனுபவமா இருக்கும். வாழ்க்கையில சிரமம்னா என்னன்னும் குழந்தைங்க கத்துக்க வேண்டியதுதானே!” - பிரபாகரின் மனைவி ஆனந்தி சொல்ல,
“சரிப்பா. பஸ்லயே போகலாம்” - முழுமனதாகச் சொன்னான் பிரபாகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT