Published : 06 Jun 2017 09:55 AM
Last Updated : 06 Jun 2017 09:55 AM
நோபல் பெற்ற ஜெர்மன் படைப்பாளி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி படைப்பாளி தாமஸ் மேன் (Thomas Mann) பிறந்த தினம் இன்று (ஜூன் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியின் லூபெக் நகரில் (1875) பிறந்தார். தந்தை லூபெக் நகர ஆட்சிமன்ற உறுப்பினர். தானிய வணிகமும் செய்துவந்தார். லூபெக்கில் ஆரம்பக்கல்வி பயின்றார் தாமஸ் மேன். 1891-ல் தந்தையின் மறைவுக்குப் பிறகு மூனிச்சில் குடியேறினர்.
* மூனிச்சில் உள்ள லுட்விக் மாக்ஸி மில்லியன் பல்கலைக்கழகம், மூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். பத்திரிகையாளராகும் நோக்கில் வரலாறு, பொருளியல், கலை, இலக்கியம் பயின்றார். காப்பீட்டு நிறுவனத்தில் ஓராண்டு காலம் பணியாற்றினார்.
* சிறுவயது முதலே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நகரில் உள்ள பல மேதைகளை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் தாய். 1898 முதல் எழுத ஆரம்பித்தார். ‘தி லிட்டில் ஹெர் ஃப்ரீடெமன்’ என்ற இவரது முதல் சிறுகதை பெரும் வரவேற்பை பெற்றது.
* தொடர்ந்து நாவல், குறு நாவல், கட்டுரை, விமர்சன நூல் என நிறைய எழுதினார். இவரது சிறுகதைத் தொகுப்பான ‘ட்ரிஸ்டன்’ 1903-ல் வெளிவந்தது. விரைவில் ஜெர்மனியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் புகழ்பெற்றார். இவரது படைப்புகள் நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சி, நையாண்டி கலந்திருந்தன.
* இவை ஜெர்மனியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றன. இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக 1929-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நல்ல பேச்சாளருமான இவர், பல இடங்களில் உரையாற்றினார். நாஜிக்களின் கொள்கைகளை மக்கள் எதிர்க்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
* நாஜிக்களின் இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் சொற்பொழிவுகள், கட்டுரைகள் வாயிலாக தொடர்ந்து எதிர்த்தார். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியபோது, அங்கு இருக்க முடியாமல் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றார். இவரது சகோதரரும், தீவிர எழுத்தாளருமான ஹைன்ரிக் மேனின் நூல்களை நாஜி அரசு தீயிட்டுக் கொளுத்தியது.
* இவரை ஜெர்மன் குடிமகன் இல்லை என்று அறிவித்தது. 2-ம் உலகப்போர் மூண்டபோது, அமெரிக்கா சென்றார். ‘ஜெர்மன் லிஸனர்ஸ்’ என்ற தலைப்பில் வானொலியில் உரைகள் நிகழ்த்தினார். உலகப் புகழ்பெற்ற அந்த உரைகள் அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றை பிபிசி ஒலிபரப்பியது.
* அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் கலிபோர்னியா சென்றார். போர் முடிந்த பிறகு, சுவிட்சர்லாந்து திரும்பினார். தன் படைப்புகள் அனைத்தையும் ஜெர்மன் மொழியிலேயே எழுதினார். பைபிளை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய ‘ஜோசப் அண்ட் ஹிஸ் பிரதர்ஸ்’ நூல் 4 பாகங்களாக வெளிவந்தது. இதை எழுதி முடிக்க இவருக்கு 16 ஆண்டுகளாகின.
* இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‘தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்: எ லெஜண்ட் ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன. இவை ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அமெரிக்காவிலும் சுவிட்சர்லாந்திலும் மாறி மாறி வாழ்ந்தார்.
* ஜெர்மனிக்கு அவ்வப்போது சென்று வந்தாலும், அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்பவில்லை. நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சமூக விமர்சகர், கட்டுரையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட தாமஸ் மேன் 80-வது வயதில் (1955) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT