Published : 24 Jun 2014 10:14 AM
Last Updated : 24 Jun 2014 10:14 AM
# வாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் வரை இருந்தால் ரூ.10 ஆயிரமும், நான்கு லட்சத்துக்கும் மேல் வாகன மதிப்பு இருந்தால் ரூ.16 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மொத்தமுள்ள 98 பேன்ஸி எண்களில் ஆங்கில அகர வரிசைப்படி ஏ, பி, சி, டி என்ற வரிசையில் எண்கள் ஒதுக்கினால் ரூ. 40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அடுத்து வரும் சீரியல்களில் எண்கள் ஒதுக்க ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த 98 எண்களையும் யாரும் கேட்கவில்லை எனில், அடுத்துவரும் ஆங்கில அகர வரிசை சீரியலில் ஒதுக்கப்படும் எண்களோடு சேர்த்து வாகனங்களுக்கு வழங்கப்படும்.
# வாடகைக்கு இயக்கும் வாகனங்கள், சொந்த வாகனங்களை எவ்வாறு கண்டறியலாம்?
வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். சொந்த வாகனம் என்றால் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். எண்கள் எழுதும் பிளேட்டில் எண்களை தவிர, பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்கக்கூடாது. அதேபோல் புரியாத மொழியிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கு இருக்கும் எண்களையும் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது. அப்படி எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
# வாகனங்களில் எவ்வாறு எண்கள் எழுதலாம்? அதற்கு ஏதேனும் அளவுகள் உள்ளதா?
இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அதிக திறன் கொண்ட வாகனங்கள் என ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவுகளில் எண்கள் எழுத வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் விதி உள்ளது. அந்த அளவுகளைக் காட்டிலும் வேறு வடிவங்களில் எண்கள் எழுத கூடாது. அவ்வாறு எழுதினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோதனையின்போது அபராதம் விதிக்கப்படும்.
# வாகன எண்களை வைத்து சம்பந்தப்பட்டவரின் முழு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற முடியுமா?
கட்டாயம் பெற முடியும். வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி ஆகியவற்றை அறிய முடியும். அதற்காகத்தான் வாகனங்களில், மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி எண்களை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT