Published : 14 May 2017 10:19 AM
Last Updated : 14 May 2017 10:19 AM

ராபர்ட் ஓவன் 10

‘பிரிட்டனின் சோஷலிசத் தந்தை’ என போற்றப்படும் சமூக சீர்திருத்தவாதியான ராபர்ட் ஓவன் (Robert Owen) பிறந்த தினம் இன்று (மே 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரிட்டனின் நியூடவுன் நகரில் (1771) பிறந்தவர். குதிரைச் சேணம், இரும்புச் சாமான்கள் தயாரித்து விற்றுவந்தார் தந்தை. 10 வயது வரை மட்டுமே கல்வி பெற்ற ராபர்ட் ஓவன், பிறகு ஒரு ஜவுளி வியாபாரியிடம் 4 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார்.

* அந்த வேலையை விட்டுவிட்டு, மான்செஸ்டர் சென்றவர் சொந்த மாகப் பருத்தி வியாபாரம் செய்தார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், நண்பர்களுடன் சேர்ந்து நியூலானார்க் பருத்தி ஆலையை வாங்கி நடத்தினார்.

* சிறு வயது முதலே ஏழைகள், தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருந்தவர், ஆலை நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். 2 ஆண்டுகளில் இன்னொரு ஆலையை வாங்கி நடத்தினார். மான்செஸ்டர் லிட்ரரி அண்ட் ஃபிலாசஃபிகல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* மாபெரும் சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகளின் கருத்துகள் அங்கு விவாதிக்கப்பட்டன. தொழிலாளர்களின் ஆரோக்கியம், பணியிடச் சூழலுக்கு முக்கியத்துவம் தந்தார். நாடு முழுவதும் தொழிற்சாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இவர் அழைக்கப்பட்டார்.

* மில் உரிமையாளரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதால், அதன் மேலாளர், பங்குதாரராக மாறினார். அந்த மில் தொழி லாளர்கள் படிப்பறிவின்றி, வறுமையில் வாடினர். திருட்டு, குடிப் பழக்கம் ஆகியவை அவர்களிடம் சகஜமாக இருந்தது. சுகாதார நிலையும் மோசமாக இருந்தது. பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தார்.

* ஆலை வெற்றிகரமாக இயங்கியது. தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பற்றுச் சீட்டாகவும், பொருளாகவும் தந்தார். ‘ட்ரக் சிஸ்டம்’ முறையை மேம்படுத்தினார். அதன் மூலம், பொருட்களை மொத்த விலையில் வாங்கி தொழிலாளர்களுக்குத் தரும் கூட்டுறவு முறையை உருவாக்கினார். இதனால் ‘பங்கீட்டுக் கூட்டுறவின் தந்தை’ எனப்பட்டார்.

* இந்தக் கூட்டுறவு முறை பிரிட்டன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. தொழிலாளர்களின் குழந்தைகளைத் தொழிற்சாலையே பராமரிக்கும் முறையை அறிமுகம் செய்தார். பல ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கினார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரப் பணி என்ற முறையைக் கொண்டுவரப் பாடுபட்டார். நகரத் திட்டமிடலுக்கும் அரசுக்கு உதவினார்.

* இவரது தொழிலாளர் நல, சமூகப் பொருளாதார, சமுதாய சிந்தனைகள் ‘ஓவனின் புரட்சிக்கு எதிரான சோஷலிச கோட்பாடுகள்’ (Anti-Revolutionary Socialism) எனக் குறிப்பிடப்பட்டன. ‘பிரிட்டனின் சோஷலிசத் தந்தை’ எனப் போற்றப்பட்டார். மக்களின் நடத்தை அவர்களது சூழலைப் பொறுத்தே அமைகிறது என்றார்.

* நல்ல பேச்சாளருமான இவர், சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களிடையே போதித்தார். மனித இயல்புகள், சமூக வாழ்க்கை போன்றவை குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். அமெரிக்காவுக்கு 1824-ல் சென்றார்.

* தான் சேமித்த பணத்தைக் கொண்டு, இன்டியானா மாநிலத்தில் வாபாஷ் நதி அருகில் 1,000 பேரை உறுப்பினராகக் கொண்ட ஒரு காலனியான நியூ ஹார்மனி என்ற சமூகத் தன்னிறைவு அமைப்பை நிறுவினார். லட்சியவாத சோஷலிசத்தை (Utopian Socialism) தோற்றுவித்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் ராபர்ட் ஓவன் 87-வது வயதில் (1858) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x