Published : 04 Oct 2014 10:44 AM
Last Updated : 04 Oct 2014 10:44 AM
“வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர்லேர்ந்து வர்றோம்” என்று வையவன் தன் பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் என் பெயரைச் சொன்னேன். இதற்கு முந்தின வாரம்தான் ஆனந்த விகடனில் நான் ‘அறுபத்திரண்டு வருஷங்கள்’ என்று ஒரு கதை எழுதியிருந்தேன்.
“நீங்க போன வாரம் ஆனந்த விகடன்ல ‘அறுபத்திரண்டு வருஷங்கள்’னு ஒரு கதை எழுதியிருந்தீங்க இல்ல?” என்று கேட்டார் ஜெயகாந்தன்.
நான் பவ்யமாகத் தலையாட்டினேன்.
“நல்லாயில்ல” என்றார். அதற்கும் பேசாமல் நான் தலையாட்டிக் கொண்டேன்.
வையவனைப் பார்த்து, “நீங்க எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீங்க இல்லே?” என்று கேட்டார். வையவன் ‘ஆமாம்’ என்று தலையாட்டினார்.
“கொஞ்சம் இருங்க... வர்றேன்!” என்று ஜெயகாந்தன் எழுந்து உள்ளே போனார்.
என்ன நடக்கப் போகிறதோ என்கிற திகைப்பில் உதட்டைப் பிதுக்கிய ஒரு குறுஞ்சிரிப்போடு வையவனும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இங்கே ரஸமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
நண்பர் வையவன் புதிய நடைகளை விரும்புபவர். அது, அவர் எழுதுகிற கடிதங்களிலும் புலப்படும். இதற்கு முன் அவர் ஜெயகாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘துர்க்கை’ என்கிற கதையைப் பற்றித் தனது விமர்சனத்தை அதில் எழுதியிருந்தார். என்ன எழுதியிருந்தார் என்பது இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், அந்தக் கடிதத்தை எல்லாரும் போல் அவர் சாதாரணமாக ஆரம்பிக்கவில்லை. ‘தமிழ்நாட்டின் சிறுகதை மன்னனே தான்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தோழர் ஜெயகாந்தன்’ என்கிற அந்தக் கடிதத்தின் விளிப்பு வரி மட்டும் இன்றளவும் எனக்கு மறவாமல் இருக்கிறது.
அந்தக் கடிதத்தை எடுத்துவரத்தான் ஜெயகாந்தன் எழுந்து அந்தத் திரையை விலக்கிக்கொண்டு உள்ளே போயிருந்தார்.
ஏற்கெனவே, நேற்று சென்னைப் பட்டினத்தில் பார்த்தவர்கள் பெரும்பாலோர் ‘ஜெயகாந்தன் ஒரு முரடன்’ என்று சொல்லி பயமுறுத்தியிருந்த காரணத்தால், ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகைப் புரிந்துகொண்டோம். இருந்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் திக்திக் என்றுதான் இருந்தது.
ஜெயகாந்தன் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு வந்து அமைதியாக எங்கள் எதிரில் உட்கார்ந்தார். அந்தக் கடிதத்தை அவரே படித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.
“தமிழ்நாட்டின் சிறுகதை மன்னனே தான்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தோழர் ஜெயகாந்தன்’’ என்று படித்துவிட்டு கொஞ்சம் நிறுத்தினார். அப்புறம் எங்களை நிமிர்ந்து பார்த்துச் சொன்னார்: “நான் என்னை எப்போதும் சிறுகதை மன்னன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. அதுமட்டுமல்ல; அவ்வாறு கோஷம் போடுபவர்கள் மீது கோபித்துக்கொண்டும் இருக்கிறேன்!”
பொறுமையாக இதை அவர் சொன்னவிதம், அவரைப் பற்றி எங்களிடம் சொல்லப்பட்ட மாறுபட்ட விமர்சனங்களை எல்லாம் ஒரு நொடியில் ஒரேயடியாக அடித்துப் புறந்தள்ளிவிட்டது. எங்களிடம் ஓர் ஆசுவாசமான புன்னகை மலர்ந்தது.
பிறகு, அந்தக் கடிதத்தின் உள்விவரங்களுக்குள் புகுந்து, நண்பர் வையவனின் விமர்சனங்களுக்கு எல்லாம் தர்க்கபூர்வமாக விளக்கம் அளித்தார் ஜெயகாந்தன். இவ்வளவுதான் எனக்கு ஞாபகம். அவர் சொன்னது எங்களுக்கு ஒப்புக்கொள்வதாக இருந்தது.
அப்புறம் வேறு விஷயங்களுக்கு மாறி, நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது பற்றிக் கூறினோம். எங்கள் ஊர் பாரதிவிழாவில் பேசுவதற்கு அவரை அழைத்தோம். அவர் தயங்காமல் ஒப்புக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இடையிடையே கொஞ்சம் இலக்கிய விசாரம் நடத்தினோம் என்பதும் நினைவுக்கு வருகிறது.
அப்புறம் ஜெயகாந்தன் எழுந்துபோய்க் குளித்தார். குளித்து முடித்துவிட்டு வந்து, எங்கள் இருவரையும் அவரோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அழைத்தார். சந்தித்த முதல் சந்திப்பிலேயே அவர் வீட்டில் அவரது தாயார் பரிமாற, நாங்கள் உண்ட அந்தக் காலை உணவு என்றென்றும் மறக்க முடியாததாகும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது எங்களின் மீது அவர்கொண்ட அன்பின் குறியீடாகவே அது எப்பொழுதும் தோன்றுகிறது.
பிறகு அவர் உடையணிந்துகொண்டு வர, நாங்கள் வெளியே புறப்பட்டோம். ஜெயகாந்தன் பேன்ட் அணிந்து வந்தார். 17 வயதுப் பையனான நான் அவருடைய ‘சரஸ்வதி’ கதைகளைப் படித்துவிட்டு, ‘பேன்ட் அணிகிற நவநாகரிக நபர்களை எல்லாம் தயவுதாட்சண்யம் இல்லாமல் கிழிகிழி என்று கிழிப்பவர்’ என்று அவரைக் கருதிக்கொண்டிருந்தேன்.
அவர் பேன்ட் அணிந்து வந்தது எனக்கு ஆச்சர்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. நாங்கள் என்னவோ வேட்டிதான் கட்டியிருந்தோம். ‘சரஸ்வதி’ அலுவலகம் சென்று விஜயபாஸ்கரன் அவர்களைச் சந்தித்தோம்.
அடுத்து, ‘தமிழ்ப் புத்தகாலயம்’ சென்று கண.முத்தையா அவர்களையும் பார்த்தோம். அங்கே எங்களுக்கு இன்னுமோர் ஆச்சர்யம் உண்டாயிற்று. பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பெண் குழந்தை, கற்பூரம் எரிந்துகொண்டிருக்கிற ஒரு பூஜைத் தட்டுடன் வீட்டின் உள்ளிருந்து வந்தது. அதை எங்களுக்கெல்லாம் நீட்டியது. அந்தத் தட்டிலிருந்த விபூதியை ஒரு விரலால் கொஞ்சமாகத் தொட்டு ஜெயகாந்தன் தன் நெற்றியில் இட்டுக்கொண்டார். அது பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்லாமல்; அவரை கம்யூனிஸ்ட் ஆக பார்த்த எங்களுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. ‘அடடே, நீட்டுகிற பூஜைத் தட்டைத் தொட்டு வணங்குவதும், கொஞ்சம் நீறு இட்டுக்கொள்வதும் தப்பில்லை’ என்கிற தடையற்றதோர் சுதந்திரவெளிக்கு அது என்னை இட்டுச் சென்றது.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் இருந்த பஸ்ஸ்டாப்பில் நாங்கள் நின்றிருந்தபோது, ஒரு பிச்சைக்காரன் வந்து கையேந்தினான். சில்லறையேதும் இல்லாததால் நாங்கள் அவனைப் போகச் சொன்னோம். ஆனால், அவன் போகாமல் அங்கேயே நின்று நச்சரிக்க ஆரம்பித்தான்.
ஜெயகாந்தன் சற்றுக் கடுமை காட்டிய குரலில், “இல்லேன்னு சொல்றோமில்லே?” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதுவும் எனக்கு ஓர் ஆச்சரியம். பிச்சைக்காரர்களுக்கு ஈயாதவர்களை அவர் காராக்கிரஹத்தில் அடைத்துவிடுவார் என்பது போல் எனக்கு ஏனோ ஒரு நினைப்பு இருந்தது. இவ்விதம், அவரை சந்தித்த முதல் நாளில், நாங்கள் கருதிக்கொண்டிருந்த உண்மைக்கு மாறான இறுக்கமான கட்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்தன.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
pisakuppusamy1943@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT