Published : 15 Apr 2017 07:58 AM
Last Updated : 15 Apr 2017 07:58 AM
‘உலகம் எவ்வளவு வேகமா மாறிக்கிட்டு இருக்குது... இன்னமும், எதுக்கு ‘தமிழ்' ‘தமிழ்'னு புலம்பிக் கிட்டே இருக்கீங்க...? தமிழ்தான் வந்து சோறு போடப் போவுதா..?' பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் பரவலாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி இது.
அறியாமை அத்தனை எளிதில் நம்மை விட்டு அகன்று விடுமா என்ன..? தமிழ் வழிக் கல்வியில் படிப்பதால் யாருக்கும் பணி வாய்ப்பு நழுவிப் போனதாய் சான்று இல்லை. மாறாக தமிழே தகராறு என்பவர்களின் பாடு தான் திண்டாட்டம் ஆகி இருக்கிறது.
உண்மையில் தமிழ் வழிக் கற்றலால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்கின்றன. 30/09/2010 அன்று, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, ஓர் அவசர ஆணை பிறப்பித்து இருக்கிறது (ஆ எண் 145).
இதன் தொடர்ச்சியாக, 30/04/2014 அன்று, அரசாணை எண் 40 வெளியிடப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பானவை இவை.
இதன்படி, தமிழ்நாடு பணித் தேர்வு - பிரிவு 8 (1) தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து காலி இடங்களில் இருபது சதவீத இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
மிகச் சமீபத்தில், 15/03/2017 அன்று, அறிவிக்கை எண் 09/2017 மூலம்
தொழில் மற்றும் வணிகம் (தொழில்துறை கூட்டுறவு அமைப்புகள்) உதவி இயக்குநர் பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது. பட்டப் படிப்பை தமிழில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று, தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இங்குதான் சற்றே இடிக்கிறது. தேர்வுக்கான கல்வித் தகுதி, தமிழில் பெற்று இருக்க வேண்டும். அநேகமாக பட்டப் படிப்புதான் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக வைக்கப்படுகிறது. ஆகவே, பள்ளிப் படிப்பை ஆங்கிலத்தில் படித்து முடித்தவர்கள்கூட, அஞ்சல் வழியில் தமிழ் வழியே பட்டப் படிப்பு பெற்று இச்சலுகையை அனுபவிக்க முடிகிறது. என்ன காரணம்...?
போதுமான எண்ணிக்கையில் தமிழ் வழிக் கற்றவர்கள் இல்லை; அல்லது, அத்தகையோர் விண்ணப்பிப்பது இல்லை. அரசுப் பணிகளில் மட்டும் அல்ல. பிற வழிகளிலும் தமிழ் வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
‘சிறந்த நூல்களை வெளியிடும் நூலாசிரியர்களுக்கு நிதியுதவித் திட்டம்'. ‘அரசு அச்சக மதிப்பீட்டின்படி நூலின் அச்சுச் செலவின் 60% தொகை அல்லது ரூ. 25,000/- எது குறைவோ அத்தொகை நூலாசிரியருக்கு நிதியுதவியாக இரு தவணைகளில் வழங்கப்படுகிறது'.
பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாண வர்கள், கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலை வளர்க்கவும் படைப் பாற்றலை வெளிப்படுத்தவும் கவிதை/ கட்டுரை/ பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் அறநிலையத்துறை (தவ 1-1) அரசாணை நிலை எண் 274 நாள் 2.12.2002இன் படி, 2002-2003 நிதியாண்டு முதல், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் வென்றவர்கள் மாநில அளவில் போட்டியிட்டும் பரிசுகள் பெறலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் முதலான மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில், தமிழ் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதானத் தேர்வில் உள்ள மொத்தம் 9 தாள்களில், 8 தமிழில் எழுதலாம்.
ஆங்கில மொழிப் பாடத் தாளை மட்டுமே தமிழில் எழுத இயலாது. நேர்முகத் தேர்வை முழுவதும் தமிழிலேயே எதிர்கொள்ளலாம். ஓர் ஆண்டுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 150 பேர் குடிமைப் பணிகளுக்குத் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்களில் குறைந்தது 10 பேரேனும் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறவர்கள்தாம்.
அரசுப் பணியை விடுங்கள். தனியார் துறையில்தானே பணியிடங்கள் அதிகம் உள்ளன...? அங்கே என்ன நிலைமை...? ஆங்கிலம் தெரியாமல் ‘குப்பை கொட்ட முடியுமா..?' மீண்டும் ஒரு தவறான புரிதல் ஆழமாகப் பதிந்து உள்ளது.
ஒருவரின் தகுதி, திறன் ஆகியனவற்றைப் பார்த்தே பணி வழங்கப்படுகிறதே அன்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார் என்பதற்காக எந்தப் பணியும் யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அதிலும் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்பைப் பொறுத்த மட்டில், எந்த அளவுக்குப் பணியில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது மட்டுமே தேர்வுக்கான ஒரே தகுதியாகப் பார்க்கப் படுகிறது.
தாய்மொழியில் ஆழ்ந்த புலமை இருந்தால் மட்டுமே ஆங்கிலம் உள்ளிட பிற மொழியில் மிளிர முடியும். பாடங்களை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள தாய்மொழியே சிறந்தது.
ஜெர்மானியர், ரஷ்யர், ஜப்பானியர், சீனர் எல்லாரும் தத்தம் தாய்மொழியில் பயின்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
இன்றைய இளைஞர்களின் முன் இருக்கும் சவால்களில் முதன்மை யானது - மொழியறிவு. தமிழில் பிழை யின்றி எழுதுகிற பேசுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கைப்பேசி வந்த பிறகு தப்பும் தவறுமாய் எழுதுவதே இயல்பாகி விட்டது.
தமிழக இளைஞர்களும், பெற்றோரும் நன்கு மனதில் கொள்ள வேண்டியது இது: தமிழ் மொழியில் ஆர்வம், ஆழம், புலமை... எல்லாம், எதிர்காலத்தை ஒளிமயமாக்க வல்லது. தமிழால் உயர்ந்தவர்கள்தாம் உண்டு; இழந்தவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு தாய்மொழிக்கும் உள்ள சிறப்புதான் இது. தமிழுக்கு சற்றே கூடுதல் சிறப்பு. தமிழால் உயர்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT