Published : 06 Aug 2016 10:02 AM
Last Updated : 06 Aug 2016 10:02 AM

அதிசய உணவுகள் 6 - ஒரு துளி ரத்தம்!

’பொருளாதார ஆதாயத்துக்காக மழைக் காடுகளை அழிப்பது என்பது ஒரு உணவை சமைப்பதற்காக, ரினைசான்ஸ் ஓவியத்தை எரிப்பதற்கு சமமானது!’ - இ.ஓ.வில்சன்

‘காடுகளை அழிக்காதீர்கள்!’ என்று விஞ்ஞானிகள் கோஷமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார் கள். ஆனால், மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கல்ல. எங்கள் குடிலைவிட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். அமேசான் நதியை எங்கள் விடுதியோடு இணைத் துக் கொண்டிருந்த மரப் பாலத்தின் மீது நின்றோம். எங்களோடு ஆஸ்திரேலி யாவில் இருந்து தங்கள் இரண்டு பிள்ளைகளோடு வந்திருந்த தம்பதியும் சேர்ந்துக் கொண்டனர். எங்களை சுமந்து செல்ல சுமார் ஏழு அடி நீளமும், நான்கு அடி அகலமும் கொண்ட படகுகள் வந்தன.

‘இவ்வளவு பெரிய அமேசான் நதியில் இந்தச் சிறிய படகிலா பயணிக்க போகிறோம்?’ என்று யோசித்தேன்.

“ஊம், வாருங்கள் வரிசையாக வந்து படகில் ஏறுங்கள்’’ என்றார் எங்கள் வழிகாட்டி. பிறகு அவரே, ‘‘கால் தவறி நதியில் வீழ்ந்தால் பிரானா மீன்களுக்கும், அமேசான் முதலைகளுக்கும் பலியாவீர் கள்!’’ என்றார். இதைக் கேட்டு எங்களுக் குள் சிறு பயம். நானும் என் கணவரும், மகனும் ஒரு படகில் இருந்தோம்.

‘‘சும்மா, விளையாட்டுக்காக இதை நான் சொல்லவில்லை. இந்த பிரானா மீன்கள் அமேசானின் பயங்கரவாதிகள் ஆகும். 12 அங்குலம் வரை வளரும். உருவத்தில் அமேசான் நதியில் வாழும் பல மீன்களைவிட சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த மீன்களின் பற்கள் கூரான கத்தியைப் போன்றது. சுறா மீன்களின் பற்களில் உள்ள எனாமல் பூச்சுக்கு ஒப்பான பூச்சைக் கொண்டுள்ளதால் வாயில் கிட்டும் சதையை ஒரு நொடியில் பிய்த்து எடுத்துவிடும் உறுதியும் ஆற்றலும் கொண்டவை.

‘கடவுளே! ஏன் இந்த வேண்டாத வேலை. இவ்வளவு ஆபத்தான மீன் களைப் பிடித்து சமைக்கத்தான் வேண் டுமா? இவ்வளவு பெரிய நதியில் வேற மீன்களே இல்லையா?’ என வியந் தேன். என் சந்தேகத்தை வழிகாட்டியிடம் கேட்டு, அவரது பதிலை எதிர் பார்த்தபடி பட படக்கும் நெஞ் சோடு அமர்ந் திருந்தேன்.

‘‘எல்லாம் ஒரு த்ரில்லுக் காகத்தான் மேடம்!’’ என்றார் கூலாக.

மீன் பிடிக்கும் தூண்டிலில் கோழிக் கறியின் துண்டுகளை மாட்டி, எங்கள் கைகளில் தனித் தனியாகத் திணித்தார்கள்.

தூண்டிலை தண்ணீரில் எறிந்தோம். மூங்கிலை பிடித்திருந்த என் கை இறுகியது.

ஒரு துளி ரத்தம், 200 லிட்டர் தண்ணீரில் விழுந்தால்கூட போதும். பிரானா மீன்கள் அதை மோப்பம் பிடித்து பெரிய கூட்டமாக வந்துவிடும். அடிபட்ட மிருகங்கள், நதியின் கரையில் தண்ணீர் குடிக்க வரும்போது இந்த மீன்களால் தாக்கப்படும். கால்களில் காயத்தோடு மனிதர்கள் நதியில் குளித் தால் அவர்களின் கதி அதோகதிதான்! பலர் இப்படி கட்டை விரல்களை இழந்தும் இருக்கிறார்கள் என்றார். வழிகாட்டியின் இந்த வர்ணனைகள் பேய் படத்தில் வரும் திகில் காட்சிகளைப் போல உடம்பை ஜில்லிட வைத்தது.

அப்போது திடீரென்று ‘களக்’ என்று ஒரு சத்தம். என் கணவரின் கையில் இருந்த தூண்டிலை எதோ ஒன்று வேகமாக இழுப்பது தெரிந்தது. ‘‘மீன் ஒன்று மாட்டிக் கொண்டது, வேகமாக தூண்டிலை மேல் நோக்கி இழுங்கள்’’ என்றார் வழிகாட்டி.

உள்ளங்கை அகலத்தைவிட கொஞ்சம் பெரிய அளவில் இருந்த பிரானா மீன் ஒன்று துள்ளிக் கொண்டு வெளியே வந்தது.

‘‘ஹை…’’ என்று நாங்கள் போட்ட சத்தத்தில் அமேசான் காடே அதிர்ந்தது. பிறகு, சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு என் மகன் தூண்டிலில் ஒன்று சிக்கியது. ஏனோ எனக்கு மட்டும் பிரானா பிடிபடாமல் போக்குக் காட்டி யது.

சின்னச் சின்ன முதலை குட்டிகள் நீந் தியபடி வந்தன. வழிகாட்டி சடக் என்று நீரில் கையை விட்டு, ஒரு முதலை குட்டியை எடுத்து என் உள்ளங்கையில் வைத்தார்.

‘‘அம்மாடி!’’ நான் போட்ட சத்தத்தில் அமேசான் முதலை குட்டியே அதிர்ந்துபோனது.

’’பயப்படாதீங்க மேடம் அது ஒன்றும் செய்யாது’’ என்றார் வழிகாட்டி. பயம் தெளிந்து முதலை குட்டியைத் தாங்கிய கையோடு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தேன்.

அரைமணி நேரத்தில் ஆறேழு பிரானா மீன்களைப் பிடித்தோம். அந்தி சாயத் தொடங்கியது. விடுதியை நோக்கி படகு திரும்பியது.

‘‘ஏழு மணிக்கெல்லாம் சாப்பாட்டு மேஜைக்கு வந்துவிடுங்கள். பிரானா சூப்பும், தீயில் வாட்டிய பிரானா மீனும் உங்களுக்காக காத்திருக்கும்’’ என்றார் வழிகாட்டி.

‘பிளந்த வாயுடனும், மிகக் கூரிய பற்களுடனும் இருந்த பிரானா மீன்களை எப்படி சமைக்கப் போகிறார்கள்? அது எப்படி சுவைக்கும்? இவற்றின் கூரிய பற்கள் சாப்பிடும்போது நமது தொண்டையில் சிக்கிடுமோ..?’ என்ற பல எண்ணங்கள் படையெடுத்து, என் மூளைக்குள் வலம் வந்தன.

சரியாக 7 மணிக்கு, சாப்பாட்டு மேஜைக்குச் சென்று நாற்காலிகளில் அமர்ந்தோம். குவாரானா அண்டார்டிகா (guarana Antarctica) என்ற பானம் அடங்கிய டப்பாக்களை எங்கள் முன்னால் கொண்டுவந்து வைத்தனர்.

‘‘இது என்ன பானம்? நாங்கள் இதுவரையில் குடித்ததே இல்லையே…’’ என்ற கேள்விக்குப் பின் வருபவை பதிலா னது: ‘குவரானா’ என்பவை மேப்பிள் இனத்தைச் சேர்ந்த, மேல்நோக்கி படரும் கொடியில் இருந்து கிடைக்கிற கொட்டைகள் ஆகும். காப்பி கொட்டைகளை விட இரண்டு மடங்கு காஃபின் (caffeine) இதில் உள்ளதால் மூலிகை டீயையும், பலவிதமான குளிர் பானங்களையும் இந்த குவரானாவைக் கொண்டு தயாரிக்கிறார்கள்.

பிரேசில், அமேசான் காடுகளில் கிடைக்கிற ‘குவரானா’ கொட்டைகள் பார்ப்பதற்கு, வெள்ளை நிறமும் முனை யில் கருப்பும் கொண்டு, மனிதனு டைய விழிபோல இருக்கும் எதனால் இப்படிப்பட்ட உருவத்தை அந்தக் கொட்டைகள் பெற்றன என்பதற்கும் கதை உண்டு. ஒரு கெட்ட தேவதை சேடர் மாவ் (satere Mawe) பழங்குடி இனத்த வரின் குழந்தையைக் கொன்றுவிட்டது. அந்தக் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஆறுதலை தர, நல்ல தேவதை அந்த குழந்தையின் இடது கண்ணைப் பிடுங்கி காட்டில் நட்டுவிட்டது. அங்கே வளர்ந்தது தான் காட்டு ‘குவரானா’ செடிகள்.

எது எப்படியோ? ‘குவரானா அண்டார்டிகா’ பானம் சிறிது புளிப்புச் சுவையோடு, நன்றாகவே இருந்தது. சாப்பாட்டு மேஜைக்கு வந்த ‘பிரானா’ சூப்பை ஆவலுடன் பார்த்தேன். சூப்பும் சுவைத்தது... மீனும் ருசித்தது!

- பயணிப்போம்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x