Published : 08 Nov 2014 10:11 AM
Last Updated : 08 Nov 2014 10:11 AM

வீரமாமுனிவர் 10

மகத்தானதமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x