Published : 21 Jan 2017 10:33 AM
Last Updated : 21 Jan 2017 10:33 AM
பிரபல மலையாள இயக்குநர்
பிரபல மலையாள இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், இசையமைப்பாளரான ஜி.அரவிந்தன் (G.Aravindan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கேரளாவின் கோட்டயம் நகரில் (1935) பிறந்தவர். தந்தை பிரபல வழக்கறிஞர், சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அரவிந்தன், பள்ளிப்படிப்பு முடித்த பிறகு, தாவரவியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றார்.
* சிறந்த ஓவியர். இசையிலும், புத்தகங்கள் படிப்பதிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். கோழிக்கோட்டில் சரத்சந்திர ராய் என்பவரிடம் சிறிது காலம் இந்துஸ்தானி இசை பயின்றார். சினிமாவுக்கு வரும் முன்பு, கேரள அரசின் ரப்பர் துறையில் பணியாற்றி வந்தார்.
* ‘மாத்ருபூமி’ இதழில் கார்ட்டூனிஸ்ட்டாக தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். சுமார் 18 ஆண்டுகாலம் பிரபல கார்ட்டூனிஸ்ட்டாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். மற்ற பத்திரிகைகளுக்கும் கார்ட்டூன் வரைந்தார். அரசியல், சமூகம் குறித்த நையாண்டி கலந்த ‘செரிய மனுஷ்யரும் வலிய லோகவும்’ என்ற இவரது கார்ட்டூன் தொடர் மிகவும் பிரபலம்.
* தொடர்ந்து ‘ராமுவின்டே சாஹசிகா யாத்ரகள்’, ‘குருஜி’ என்ற 2 சித்திரக் கதைகளைப் படைத்தார். பிறகு நாடகம், இசையிலும் கவனம் செலுத்தினார். ‘நவரங்கம்’ என்ற நாடக அரங்கம், ‘சொப்பனம்’ என்ற இசைச் சங்கம் தொடங்கியதில் முக்கியப் பங்காற்றினார்.
* நாடகத் துறை பிரபலங்களுடன் இணைந்து சில நாடகங்களில் பணியாற்றினார். பிரபல ஓவியர்கள், நாடக ஆசிரியர்கள், எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றினார். சினிமாவுக்காக பிரத்யேகமாக எந்தவிதமான பயிற்சி, கல்வி இல்லாமலேயே தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக்கொண்டார்.
* ‘உத்தராயணம்’ என்ற திரைப்படம் மூலம் 1974-ல் இயக்குநராக அறிமுகமானார். 3 ஆண்டுகள் கழித்து ‘காஞ்சன சீதா’ திரைப்படம் வெளிவந்தது. புதுமையான இவரது இயக்கும் பாணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
* ‘இண்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கிங்’ என்ற புதிய முறையை அறிமுகம் செய்தவர் என்று போற்றப்பட்டார். குறைந்த படங்களே இயக்கினாலும், திரையுலகில் மரியாதைக்குரிய பிரபலமாகப் புகழ்பெற்றார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே உன்னதப் படைப்புகளாகவும் மலையாளத் திரை உலகின் பொக்கிஷங்களாகவும் கருதப்படுகின்றன.
* 1985-ல் வந்த ‘சிதம்பரம்’ திரைப்படத்தால் நாடு முழுவதும் புகழ்பெற்றார். நிறைய ஆவணப்படங்கள், குறும்படங்களும் தயாரித்தார். சிறந்த கலைப் படங்களை இயக்கிய இவர், மலையாளத் திரையுலகின் ஜாம்பவான் என்று போற்றப்பட்டார். ‘ஒரே தூவல் பட்சிகள்’ உள்ளிட்ட தனது சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
* மலையாள சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டுசென்றதில் முக்கியப் பங்காற்றினார். வழக்கமான கதைசொல்லும் பாணியில் இருந்து மாறுபட்டு படங்களை இயக்கினார். இவரது பல திரைப் படங்கள் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டன. 1990-ல் பத்ம விருது பெற்றார். திரைப்படங்களுக்கான வெவ்வேறு பிரிவுகளில் 7 முறை தேசிய விருதுகளையும், 18 முறை மாநில அரசு விருதுகளையும் பெற்றவர்.
* இவரது கடைசி திரைப்படமான ‘வாஸ்துஹாரா’, தேசிய விருதை வென்றது. இவரது மறைவுக்குப் பிறகே இத்திரைப்படம் வெளி வந்தது. மலையாளத் திரையுலகுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி யவரும் குறைந்த காலகட்டத்தில் சிறந்த சாதனைகளைப் புரிந்தவரு மான ஜி.அரவிந்தன் 56-வது வயதில் (1991) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT