Published : 18 Feb 2017 10:50 AM
Last Updated : 18 Feb 2017 10:50 AM
நீங்கள் துவங்க இருந்த பத்திரிகைக்கு உங்கள் தாயின் நினைவாக ‘சந்தியா’ என்ற பெயரைக் கூட தேர்வு செய்து விட்டீர்கள். அந்த சமயத்தில் உங்கள் நண்பர் சோ உங்களை பார்க்க வந்தார். பத்திரிகை துவங்க இருக்கும் முடிவை நீங்கள் அவரிடம் கூற, சோ சிரித்தபடி சொன்னார்...
‘‘நான் ஒருத்தன் பத்திரிகை ஆரம்பித்து விட்டு படற பாடு போதாதா? என் தலையை பார்த்துமா உங்களுக்கு இந்த ஆசை? பேசாம.. அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வச்சுட்டு, என்னோட ‘துக்ளக்’ பத்திரிகையில தொடர் ஏதாவது எழுதுங்கள்...’’ என்று உரிமையுடன் சொன்னார். அதோடு பத்திரிகை தொடங்கும் எண்ணத்தை கைவிட்டீர்கள். ‘துக்ளக்’கில் எழுதவும் முடிவு செய்து அந்த கட்டுரைகளுக்கு ‘எண்ணங்கள் சில...’ என்ற தலைப்பையும் நீங்களே கொடுத்தீர்கள். சோவும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்.
உடனே தமிழகம் எங்கும் பரபரப்பு. ‘என்னை பற்றி நான்’ என்ற பரபரப்பான தொடரை ‘குமுதம்’ பத்திரிகையில் எழுதி வந்த நீங்கள், திடீரென்று அதனை நிறுத்தி விட்டீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் ‘துக்ளக்’கில் எழுதப் போவதாக கூறப்பட்டதும், ஊரெங்கும் அதைப்பற்றியே பேச்சு.
‘எண்ணங்கள் சில...’ ஒரு வித்தியாசமான தொடர். இலக்கியம், அரசியல், சினிமா, ஆன்மிகம் என்று பல்வேறு விஷயங்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் எழுதி வந்தீர்கள்.
அந்த சமயத்தில்தான் பத்திரிகைகளுக்கு கதை எழுதத் துவங்கினீர்கள். ‘நெஞ்சிலே ஒரு கனல்’ ‘குமுத’த்தில் நீங்கள் எழுதிய முதல் நாவல் இது. ஏறக்குறைய உங்களது பால்ய நிகழ்வுகளை நினைவூட்டியது இந்தக் கதை. அதன் பின், ‘அவளுக்கு மட்டுமே சொந்தம்’ என்று நாவல் ஒன்றை எழுதி, அது பரபரப்புடன் விற்பனையானது.
கதை என்னவோ கற்பனைதான் என்றாலும் ‘இந்தப் பாத்திரம் யார்? அந்தச் சம்பவம் எப்போது நடந்தது?’ என்றெல்லாம் உங்களிடம் பலர் கேட்டார்கள். ஒரு விஷயம் உங்களுக்குப் புரிந்ததாகக் கூறினீர்கள். ‘ஒரு பெண், நடிகையாக பரிமளித்து விட்டால், பிறகு இலக்கியத்தில் ஈடுபட்டாலும், அரசியலில் ஈடுபட்டாலும், அவர் நடிகையாகத்தான் பார்க்கப்படுவார்’ என்பதை உணர்ந்தீர்கள். அரசியலில் நுழைந்த பின்னர் கூட, ‘சினிமா இமேஜை’த் தாண்டி அரசியல் தலைவராக நீங்கள் ஏற்கப்படுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கவேண்டி இருந்தது.
நீங்கள் எழுதிய ‘எண்ணங்கள் சில...’ கட்டுரைத் தொடருக்கு நல்ல வரவேற்பு. உங்கள் மீது எல்லை கடந்த அன்பு வைத்திருந்த சோவுக்கும் பரம திருப்தி. காரணம், அவசர நிலை பிரகடனத்தின்போது, அவருக்கு ஒரு பெரிய உதவி செய்திருந்தீர் கள். சோ-வை மிசா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளன்று அவரது அரசியல் நாடகம் ஒன்றைப் பார்க்க மத்திய அரசு அதிகாரிகள் ரகசியமாக வரப்போவதாகவும், நாடகம் முடிந்தவுடன், சோ-வை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய அரசில் பணி புரிந்து வந்த உங்களது தூரத்து உறவினர் ஒருவர் மூலம் உங்களுக்கு தகவல் கிடைத்தது. நீங்கள் அபாய அறிவிப்பு கொடுத்தீர்கள்.
சோ உடனே, குடும்ப நகைச்சுவை நாடகம் ஒன்றை எனது தந்தை ‘சித்ராலயா’ கோபுவிடம் எழுதி வாங்கி, இரண்டே நாட்களில் தன்னுடைய ‘விவேக் பைன் ஆர்ட்ஸ்’ குழுவினருடன் பயிற்சி செய்து அரங்கேற்றினார். நாடகத்தை பார்த்த மத்திய அரசு அதிகாரிகள் குழம்பிப் போய், சோ-வை கைது செய்யாமல் சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, உங்கள் மீதான அன்பும் பாசமும் சோ-வுக்கு அதிகரித்தது.
நீங்கள் வெறுமையாக உணர்ந்த நேரத் தில், உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்றே, ‘எண்ணங்கள் சில...’ என்கிற கட்டுரைத் தொடரை எழுதச் சொன் னார். அது வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
உங்களின் சமூக, அரசியல் பார்வைகளை அந்தக் கட்டுரைகள் மூலம் படித்த எம்.ஜி.ஆர்., உங்களுக்கு போன் செய்து அதிமுகவில் இணையும்படி அழைத்தார். அந்த தொலை பேசி அழைப்புதான், உங்கள் வாழ்க் கையை மாற்றிப் போட்டது. கூட்டை உடைத் துக்கொண்டு வெளிவந்த இரும்பு வண்ணத்து பூச்சியாக புதிய அரசியல் வாழ்வை நோக்கி பயணித்தீர்கள். 1982-ல் தங்களது அரசியல் பிரவேசத்திற்கு ஏற்பாடுகளை செய்தார், எம்.ஜி.ஆர்.!
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நடைமுறையின்படி, பழைய உறவுகள், பழைய நண்பர்கள் எல்லாரும் உங்கள் வாழ்வில் காணாமல் போனார்கள். முற்றிலும் புதிய உறவுகள், நண்பர்கள், அரசியல் பரபரப்பில், ‘அம்மு’ என்கிற அந்த நுண்ணிய உணர்வு படைத்த பெண்மணி காணாமல் போய், ‘அம்மா’ என்கிற மிடுக்கான பெண்மணி உதயமானார். அதன் பிறகு கரடு முரடான அரசியல் பாதையில் பயணம் செய்து சிகரம் தொட்டீர்கள்!
தேர்தலில் நிற்பன,
புகழுடன் அமர்வன,
சுற்றும் ஊர்வன,
எல்லை மீறி நடப்பன,
இறுதியில் பர(ற)ப்பன...
என்று உங்களது அரசியல் வாழ்க்கை முடிந்தது. ‘தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்...’ என்று உங்களது அரசியல் ஆசான் பாடினார். நீங்கள் செய்த தர்மம் தக்க சமயத்தில் தங்களது உயிர் நீக்கி அவப்பெயரை நீங்கள் கேட்கும் கொடுமையில் இருந்து உங்களை விடுவித்தது!
இன்று
நீங்கள் ஒரு குற்றவாளி... என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.
நமது பல்வேறு சந்திப்புகளின்போது, ‘‘என் தந்தை இருந்திருந்தால் நான் சினிமா வுக்கு வந்திருக்க மாட்டேன். என் தாய் இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்’’ என்று நீங்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். பாழாய் போன அரசியல் உங்களை எங்கோ எடுத்து சென்று விட்டது.
காவிரி தண்ணீருக்காக போராடியது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த போராடியது, சென்னை மக்களுக்கு வீராணம் குடிநீர் வழங்கியது, அம்மா உணவகம் என்று பல்வேறு சாதனைகளை புரிந்தாலும், பல்வேறு பிரச்சினைகளால் வாழ்வில் நிம்மதி இன்றி தவித்தீர்கள். எனவேதான், கடைசி இரண்டு வருடங்களில், மரணத்தைப் பற்றியே அதிகம் பேசி வந்தீர்கள். இறுதியில், திரைப்படத்துறை, இலக்கியத்துறை மற்றும் அரசியல்துறை ஆகியவை உங்களுக்குத் தந்த நிம்மதியின்மையை போக்கி, மரணம்தான் தங்களுக்கு அமைதியை வழங்கியது.
என்னருமை தோழி...!
இனிமேல், ‘சட்டப்பேரவையில் உங்கள் புகைப்படம் வைக்கப்படாது. தங்களது நினைவிடம் கட்டப்பட மாட்டாது’ என்றெல்லாம் கூறப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், காலத்தின் சூழலில் வரலாறுதான் உங்களை துரத்திக் கொண்டிருந்தது.
1991, 2001, 2011-ம் ஆண்டுகளில் தேர்தலில் வென்று அரசியலில் எழுச்சி.
1996, 2006-ம் ஆண்டுகளில் வீழ்ச்சி. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்த நிலையில், 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் என்னைக் கேட்டீர்கள்...
‘‘வாட் இஸ் இன் ஸ்டோர் ஃபார் மீ?’’ என்று கேட்டீர்கள்.
‘‘உடல்நிலையை கவனித்துக் கொள் ளுங்க...’’ என்றேன்.
‘‘தேர்தலில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் எடுக்காத முடிவை நான் எடுக்கப் போகிறேன். எல்லா தொகுதிகளிலும் தனித்தே எங்கள் கட்சி போட்டியிடும்...’’ என்றீர்கள்.
தனித்து நின்று வெற்றியும் பெற்றீர்கள். ஆறே மாதங்களில் எல்லோரையும் விட்டு தனியாகவும் சென்று விட்டீர்கள்! வாழ்வு உங்களுக்குத் தராத அமைதியை மரணம் உங்களுக்குக் கொடுத்துவிட்டது தோழி... நிம்மதியாக உறங்குங்கள்!
உங்கள் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்படுமா... தெரியாது. அப்படி அமைந்தால், அதில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் என்ன என்பது மட்டும் சாமானியனுக்கும் தெரியும். அது..
‘எதையும் துணிவுடன் எதிர்கொண்ட இதயம் இங்கே உறங்குகிறது...’
விடை பெற்றார்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT