Published : 07 Jan 2017 08:41 AM
Last Updated : 07 Jan 2017 08:41 AM
நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு சந்திப்புகளில், உங்களது சிறுவயது சம்பவங்கள், திரைப்பட வாழ்க்கை என்று பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறீர்கள். எவ்வளவு சாதனைகள், வேதனைகள். முதன்முதலாக நீங்கள் சென்னைக்கு வந்த கதை இன்னும் நினைவிருக்கிறது.
மெரினா..! அப்போதைய கோலிவுட்டின் கனவு தொழிற்கூடம். அங்குதான் பல படங்களின் கதைகள் வரையப்பட்டன. அருகிலிருந்த திருவல்லிகேணிதான் அப்போதைய நட்சத்திரங்கள், திரையுலகப் பிரபலங்களின் முகவரி. நடிகர் ரஞ்சன், தேவிகா, ஜமுனா, பாலையா, என் தந்தை சித்ராலயா கோபு அனைவரும் அங்கேதான் வசித்தனர்.
நீங்களும், உங்கள் தாயார் சந்தியாவும் மெரினா நீச்சல் குளத்திற்கு வருவீர்கள். நீங்கள் நீச்சல் பயிற்சி பெறும் வேளையில் உங்கள் தாய் மெரினாவில் வாக்கிங் செல்வார். அப்போது சித்ராலயா படக் குழு தங்கள் நிறுவனத்தின் ‘வெண்ணிற ஆடை’ படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்த நேரம்..!
உங்கள் குடும்ப நண்பரும் நடிகருமான கோபி என்கிற வி. கோபாலகிருஷ்ணன் என் தந்தை சித்ராலயா கோபுவிடம் தங்களை பற்றி சொன்னார். துறுதுறுவென்று ஒரு ஐயங்கார் சிறுமி பெங்களூரிலிருந்து வந்திருப்பதாக கூறினார். மனதினுள் சிரித்துக்கொண்டனர் சித்ராலயா நிறுவனத்தினர்!
காரணம், முந்தைய தினம்தான் ஒரு ஐயங்கார் பெண்ணுக்கு சோதனை ஒப்பனை செய்து, அவரது நாசி கோணலாக இருந்ததாக நிராகரித்திருந்தார் இயக்குநர் தர். (அந்த பெண்தான் பிற்காலத்தில் இந்திப் பட உலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஹேமமாலினி!) ஒரு வேளை, தங்களையும் அவர் நிராகரித்திருந்தால், உங்களின் உள்மன விருப்பத்தின்படி சட்டம் படித்து சட்ட மேதையாக மாறியிருக்கக் கூடும் என்று பிறகு சொல்லி இருக்கிறீர்கள்.
மெரினா நீச்சல் குள வளாகத்தில்தான் சித்ராலயா குழுவினர் உங்களிடம் கதையை கூறினார்கள். நீங்களும் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் பாத்திரத்தை ஏற்க தீர்மானித்தீர்கள். உங்கள் தாய்க்கோ தயக்கம். முதல் தமிழ் படத்திலேயே வெண்ணிற ஆடை அணியும் வேடமா?... யோசித்தார்.
“என்ன அம்மு சொல்றே..?” என்று உங்கள் தாய் சந்தியா கேட்டபோது, கலங்கிய கண்களுடன் ‘சரி’ என்று தலையசைத்ததாகச் சொன்னீர்களே..! பின்னாளில் பல்வேறு முடிவுகளை எடுத்ததில் உறுதியை காட்டிய தாங்கள், அன்று அம்மாவுக்காகவே சினிமா வாய்ப்பை ஒப்புக் கொண்டீர்கள். தாய் படும் துயரை களைவதுதான் தலையாய கடமை என்று உங்கள் உள்மன விருப்பத்தை தியாகம் செய்தீர்கள்!
அனைவருக்குமே தாய் அன்பு உண்டு தான். ஆனால், உங்களுக்கு அது தனி ஒரு வெறியாகவே அல்லவா இருந்தது. உங்கள் தாய் சந்தியா திரைப்படம் ஒன்றில் பேபி உமா என்ற குழந்தை நட்சத்திரத்தைக் கட்டி அணைத்து முத்தமிடுவது போன்று காட்சி எடுக்கப்பட... அதைக் கண்டு வெகுண்டு தாயுடன் இரு நாட்கள் பேசாமல் இருந்தீர்களே...!
காரணம் தெரியாமல் உங்கள் தாய் குழம்பி, நடந்ததை அறிந்ததும் நெகிழ்ந்து, உங்களை உச்சி முகர்ந்து, அது சினிமா காட்சிக்காகக் கொடுத்த முத்தம் என்பதை தங்களுக்கு உணர்த்தி, தினமும் உங்களுக்கு முத்தம் ஒன்றை இட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டாரே. அவரது இறுதி நாட்கள்வரை இந்த வழக்கம் தொடர்ந்ததல்லவா...!
ஸ்ரீரங்கத்திலிருந்து குடகு நாட்டிற்கு குடிப்பெயர்ந்தவர் உங்கள் தாய் வழி பாட்டனார், ரங்கசாமி! கோவிலில் வேதம் பாராயணம் செய்த அவர், பணிக்காக பெங்களூரு மாறினார். மைசூர் மன்னரின் மருத்துவர் நரசிம்ம ரெங்காச்சாரிதான் உங்கள் தகப்பன் வழி பாட்டனார். அவரது மகன் ஜெயராமுக்குத்தான் உங்கள் தாய் சந்தியா என்கிற வேதவல்லி கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டார். ஆஸ்திக்கொன்று, ஆசைக்கொன்றாக அண்ணனும், நீங்களும் பிறந்தீர்கள். உங்கள் தந்தைவழி பாட்டியின் பெயரான கோமளவல்லி என்று பெயரிடப் பட்டாலும், ‘ஜெயா, லலிதா’ என்று இரு இல்லங்களில் உங்கள் குடும்பங்கள் வசித்த தால் அந்தப் பெயரே உங்களது நிலைத்த பெயர் ஆயிற்று!
உலகம் புரியாத வயதில் தந்தையை இழந்தீர்கள். சிரமமான வாழ்க்கையை சமாளிக்க சென்னை வந்தார் உங்கள் தாய். இதுபற்றி ஒருமுறை பேச்சு வந்தபோது, ‘‘இங்கேதான் மேடம் ஒரு தவறு நடந்து விட்டது’’ என்றேன். உங்கள் புருவங்கள் உயர...
‘‘உங்கள் தாய் மட்டும் சென்னைக்கு வராமல் பாலிவுட் செல்ல முடிவு எடுத்திருந் தால், நீங்கள் அங்கே நடிகை ஆன கையோடு, இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி... பிரதமர் ஆகியிருக்கலாம்’’ என்றதும், எழுந்த தங்களது சிரிப்பொலி இன்னும் என் காதில் ஒலிக்கின்றது!
‘ வெண்ணிற ஆடை’ படப்பிடிப்பின்போது என் தந்தை படித்துக் காட்டிய வசனங்களை உடனடியாக மனதில் பதிய வைத்து அற்புதமாக நடித்து விடுவீர்கள். ‘ரீடேக்’ என்பது தங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மட்டுமே நிகழும். படம் வெளிவந்தது! ஆனால் தாங்கள் அதை காண தடை விதிக்கப்பட்டது ! உங்களுக்கு அப்போது பிராயங்கள் பதினெட்டு நிறைந்திருக்கவில்லை! ‘ப்ரீவியூ’களும் அப்போது கிடையாது. கல்விக்குத்தான் தடை என்றால் உங்கள் உழைப்பின் பலனைக் காணவும் தடையா..? முதல் படத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தினீர்கள். உங்கள் முதல் தமிழ் படம் தங்களுடையது என்பதில் சித்ராலயா குழுவுக்குப் பெருமை.
அப்போதுதான், ஆயிரத்தில் ஒருவனான எம். ஜி. ஆரின் அழைப்பு தங்களுக்கு வந்தது. நீங்களே கூறியது போல, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பினில், நீங்கள் செய்த ஒரு துணிச்சலான செயல் எம்.ஜி.ஆரையே அதிர வைத்தது என்று சிரித்தபடியே சொன்னீர்களே. அதிரடியாக செயல்படுவதெல்லாம் உங்களுக்கு சாதாரணமாயிற்றே! நீங்கள் அந்த துணிச்சலான செயலை செய்ததால்தான் உங்கள் ஆசான், உங்களை அரசியலில் இழுத்துவிட்டாரோ என்னவோ...!
-வரும் செவ்வாய்க்கிழமை தொடர்வேன், தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT