Published : 09 Mar 2017 10:12 AM
Last Updated : 09 Mar 2017 10:12 AM

ஹரி கிருஷ்ண தேவ்ஸரே 10

குழந்தைகள் இலக்கியவாதி

இந்தி இலக்கிய உலகின் புகழ்ப்பெற்ற படைப்பாளியும் குழந்தை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவருமான ஹரி கிருஷ்ண தேவ்ஸரே (Hari Krishna Devsare) பிறந்த தினம் இன்று (மார்ச் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மத்திய பிரதேசத்தில் நாகோத் என்ற இடத்தில் பிறந்தார் (1938). தந்தையும் ஒரு படைப்பாளி. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, இளங்கலைப் பட்டமும் பின்னர் சாகர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.

* நிறைய நூல்களைப் படித்தார். 7-ம் வகுப்புப் படிக்கும்போது முதன் முதலாக கவிதை எழுதினார். இது ‘பால் சகா’ என்ற இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள், கதைகளை எழுதினார்.

* கவிதைகள் எழுதுவதைவிட பெரும்பாலும் கதைகளையே எழுதி வந்தார். தனது குருவும் நாடகாசிரியருமான ஷங்கர் சேஷ் தந்த ஊக்கத்தால் ‘இந்தி பால் சாஹித்ய ஏக் அத்யயன்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி, ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

* இதன்மூலம் குழந்தை இலக்கிய விமர்சன களத்துக்கு வித்திட்ட தோடு, இதில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையும் பெற்றார். அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளராகத் தன் தொழில் வாழ்க்கையை 1960-ல் தொடங்கினார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, விருப்ப ஓய்வு பெற்றார்.

* டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புகழ்பெற்ற ‘பராக்’ என்ற குழந்தைகளுக்கான இதழில் 1984-ல் ஆசிரியராகச் சேர்ந் தார். குழந்தைகளுக்கான நாவல்கள், கதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதினார். பதிப்பாசிரியராகவும் செயல்பட்டார்.

* ஒரு கொள்ளைக்காரனின் மகன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘டாகூ கா பேடா’ என்ற நாவல், இவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. ‘ஆல்ஹா-ஊதல்’, ‘ஷோஹ்ராப்-ருஸ்தம்’, ‘மகாத்மா காந்தி’, ‘பகத்சிங்’, ‘மீல் கே பெஹலே பத்தர்’, ‘தூஸ்ரே கிரஹோங் கே குப்தசர்’, ‘மங்கள் கிரஹ மே ராஜு’ உள்ளிட்டவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

* மேலும் ‘பால் சாஹித்ய ரசனா அவுர் சமீக்ஷா’, ‘பால் சாஹித்ய மேரா சிந்தன்’, 4 பாகங்களாக வெளியிடப்பட்ட ‘பாரதீய பால் சாஹித்ய’ உள்ளிட்ட இவரது வெளியீடுகளும் குறிப்பிடத்தக்கவை. மன அழுத்தம் தரும் கல்வி முறை, வரலாற்று நாவல்கள், விஞ்ஞான அடிப்படையிலான படைப்புகள் என 300-க்கும் அதிகமான நூல்களைப் படைத்துள்ளார்.

* ‘பராக்’, ‘பால் சாஹித்ய ரசனா அவுர் சமீக்ஷா’ ஆகிய இரண்டு இதழ்களை நடத்தி வந்தார். ‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகர்’ என்று சக படைப்பாளிகளால் போற்றப்பட்டார்.

* தொலைக்காட்சித் தொடர்கள், டெலிஃபிலிம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கதைகளை எழுதி வந்தார். குழந்தைகள் இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை சாகித்ய அகாடமி இவருக்கு 2011-ல் வழங்கியது. மேலும் பால் சாகித்ய பாரதி, க்ருதி சம்மான், உத்திரப் பிரதேச இந்தி அமைப்பின் குழந்தை இலக்கிய விருது பெற்றார்.

* கீர்த்தி சம்மான், 2004.ல் இந்தி அகாடமியின் சிறந்த இலக்கியவாதி விருது, வாத்சல்ய புரஸ்கார் உள்ளிட்டப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இலக்கியத்துக்கு, குறிப்பாக குழந்தை இலக்கியத்துக்கு மகத்தானப் பங்களிப்பை வழங்கிய ஹரி கிருஷ்ண தேவ்ஸரே, 2013-ம் ஆண்டு 75-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x