Published : 03 Nov 2014 10:48 AM
Last Updated : 03 Nov 2014 10:48 AM

அமர்த்திய சென் 10

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் பிறந்தவர். இவருக்குப் பெயர் வைத்தவர் தாகூர். விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியா, இங்கிலாந்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

 பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.

 ‘கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோஷியல் வெல்ஃபர்’ என்ற அவரது முதல் புத்தகம் 1970-ல் வெளிவந்தது. பொருளாதாரம், வாழ்வுரிமை, வாழ்வாதாரம் தொடர்பாக மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

 தனது ஆராய்ச்சி மூலம் அரசு நிர்வாகம், சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளின் தரத்தை மேம்படுத்தினார்.

 சமூகத் தேர்வு (Social Choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும் தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே.

 ‘‘உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு வேண்டும். பஞ்சம், வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் சென்.

 வறுமையை அளவிட இவர் வகுத்துத் தந்த வழிமுறைகள், ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளன. இவரது பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டன.

 மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பதை வலியுறுத்துபவர். பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, 1998-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரதிச்சி என்ற அமைப்பை உருவாக்கி, பரிசுத் தொகை முழுவதையும் பெண் குழந்தைகள் கல்விக்காக வழங்கிவிட்டார்.

 வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படுவதில்லை என்று ஆதங்கப்படுபவர். கல்வி, ஜனநாயகம் மட்டுமே மனிதகுலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுபவர்.

 பொருளாதாரம் தவிர, மனித நேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x