Published : 21 Feb 2017 09:45 AM
Last Updated : 21 Feb 2017 09:45 AM

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் 10

அறிவியல், தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர்

உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளரும் ‘இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (Shanti Swaroop Bhatnagar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பஞ்சாப் மாகாணத்தின் (இன்றைய பாகிஸ்தான்) பேரா என்ற இடத்தில் பிறந்தார் (1894). குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார்.

* சிக்கந்தராபாத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். லாகூர் ஃபோர்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் 1916-ல் இயற்பியில் பி.எஸ்சி. பட்டமும் வேதியியலில் 1919-ல் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார்.

* லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் டி.எஸ்சி. ஆய்வியல் பட்டம் பெற்றார். 1921-ல் நாடு திரும்பிய இவர், காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

* மூன்றாண்டுகளுக்குப் பிறகு லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கூழ்மங்கள் (colloids), பால்மங்கள் (emulsions), தொழிலக வேதியியல் (industrial chemistry), காந்த வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1928-ம் ஆண்டு கே.என்.மாத்தூருடன் இணைந்து காந்தப் பண்புகளை அளவிடும் கருவியைக் கண்டறிந்தார் (magnetic interference balance).

* ‘லாகூரின் தந்தை’ எனப் போற்றப்பட்ட கங்காராம் அகர்வால், தன் கரும்பு ஆலைகளில் வீணாகும் சோகைகளை என்ன செய்வது என்று இவரிடம் ஆலோசனை கேட்டார். இவற்றைக்கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். ஜவுளி ஆலைகள், மாவு அரவை ஆலைகள், எண்ணெய் ஆலைகள், எஃகு ஆலைகளின் பல்வேறு தொழிலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டார்.

* ராவல்பிண்டியில் இயங்கிய ஸ்டீல் பிரதர்ஸ் என்ற பெட்ரோலியத் துரப்பண நிறுவனம், தனது தொழிலகப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இவரை நாடியது. இதற்கும் கூழ்ம வேதியியலின் உதவியால் தீர்வுகண்டார்.

* 1935-ல் சக விஞ்ஞானி கே.என்.மாத்தூருடன் இணைந்து, இவர் எழுதிய ‘ஃபிசிகல் பிரின்சிபல்ஸ்’ மற்றும் ‘அப்ளிகேஷன்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற நூல் இன்றும் அந்தத் துறையின் முதன்மை நூலாக விளங்குகிறது

* இவரது முயற்சியால், பிரிட்டனில் உள்ளது போன்ற அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி வாரியம் 1940-ல் தொடங்கப்பட்டது. இதன் இயக்குநராக இவர் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொழிலக ஆராய்ச்சி பயன்பாட்டுக் குழுவும் (ஐ.ஆர்.யு.சி.) அமைக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் (சி.எஸ்.ஐ.ஆர்) தொடங்கப்பட்டது.

* இதன்மூலம், தேசிய வேதியியல் ஆய்வு மையம், தேசிய இயற்பியல் ஆய்வு மையம், கண்ணாடி, பீங்கான் தொடர்பான ஆய்வு மையம், எரிபொருள் ஆய்வு நிலையம் ஆகியவற்றை இவர் நிறுவினார். இந்தியா விடுதலைப் பெற்றதும் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

* 1955-ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்திய அறிவியல் துறையையும் தொழில்துறையையும் இணைத்து நாட்டு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சாந்தி ஸ்வரூப் பட்நாயக் 1955-ம் ஆண்டு 61-வது வயதில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் துணை புரியும் விஞ்ஞானிகளுக்கு ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x