Published : 13 Jun 2017 10:01 AM
Last Updated : 13 Jun 2017 10:01 AM

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் 10

கேரள முன்னாள் முதல்வர்

அனைவராலும் ‘ஈ.எம்.எஸ்’ என அன்போடு அழைக்கப்பட்ட பிரபல பொதுவுடைமைத் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiripad) பிறந்த தினம் இன்று (ஜூன் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏலங்குளம் கிராமத்தில் (1909) பிறந்தார். ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிதிரிபாட் என்பது முழுப்பெயர். சாதி, பழமைவாதங்களுக்கு எதிராக இளம் வயதிலேயே போராடினார். முற்போக்கு இளைஞர்கள் அமைப்பான வள்ளுவநாடு யோகஷேம சபையில் இணைந்து செயல்பட்டார்.

* கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1934-ல் காங்கிரஸ் கட்சியில் ஓர் அங்கமாக சோஷலிச காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர்களில் இவர் முக்கியமானவர். அதன் தேசிய இணை செயலாளராக 6 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டார்.

* அப்போது, சென்னை மாகாண சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் கருத்துகள், சிந்தனைகளை பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி வந்தார். ஏழைத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தினார். பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார்.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் உடைமைகளை விற்று, கட்சிக்காக செலவிட்டார். ‘தொழிலாளர்களின் தத்துப் பிள்ளை’ என அழைக்கப் பட்டார். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த இவர், மீனவர்கள், தொழிலா ளர்கள், தலித்களுடன் இணைந்து அவர்களது முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார்.

* 1950-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரானார். 1957 தேர்தலில் வென்று கேரள முதல்வரானார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமை பெற்றார். உலக வரலாற்றிலேயே பொதுவுடைமைத் தலைவர் ஒருவர், மக்களாட்சித் தேர்தல் மூலம் மாநில முதல்வராகப் பதவி ஏற்றதும் இதுவே முதல் முறை.

* இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1964-ல் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் பிரிவுடன் இணைந்தார். அதன் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரள மாநிலம் உருவானதில் முக்கியப் பங்காற்றினார்.

* இரண்டாவது முறையாக 1967-ல் முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது கடமையை சிறப்பாகச் செய்தார். ‘மக்கள் திட்டம்’ மற்றும் ‘கேரள இலக்கிய இயக்கம்’ ஆகிய அமைப்புகள் மூலமாக அதிகாரத்தைப் பரவலாக்கும் தன் கொள்கையைப் பரப்பினார்.

* இலக்கிய ஆர்வம் கொண்டவர். ஆங்கிலம், மலையாளம் இரண்டிலுமே எழுதும் திறன் பெற்றிருந்தார். நில உரிமை, சமூகம், அரசியல், கேரள மாநிலம், வரலாறு, மார்க்ஸியம், தத்துவம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.

* இவரது படைப்புகள் ‘ஈஎம்எஸ் சஞ்சிகா’ என்ற தொகுப்பாக பின்னர் வெளிவந்தது. 2 நூல்கள் ‘வேதங்களின் நாடு’, ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ என்ற தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இறுதி நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதிலும், கட்டுரைகள் எழுதி அதன்மூலம் கட்சியை வழிநடத்தினார்.

* எளிமையாக வாழ்ந்தவர். ஏறக்குறைய 70 ஆண்டுகாலம் பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘ஈ.எம்.எஸ்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நேர்மையான அரசியல்வாதியாகவும், முன்னுதாரணத் தலைவராகவும் விளங்கிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் 89-வது வயதில் (1998) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x