Published : 30 Mar 2017 10:11 AM
Last Updated : 30 Mar 2017 10:11 AM

தி.க.சிவசங்கரன் 10

இலக்கியத் திறனாய்வாளர், படைப்பாளி

முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளரும் சிறந்த படைப்பாளியுமான தி.க.சிவசங்கரன் (Thi.Ka.Sivasankaran) பிறந்த தினம் இன்று (மார்ச் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருநெல்வேலியில் பிறந்தவர் (1925). 6 வயதில் தந்தையையும் 7 வயதில் தாயையும் இழந்தார். தாத்தாவிடம் வளர்ந்தார். சிறுவயது முதலே வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். காந்திய நூல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.

* 15 வயதில் தன் வயதுடைய சிறுவர் களுடன் இணைந்து ‘நெல்லை வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக ‘இளந்தமிழன்’ என்ற கையெழுத்துப் பிரதி தொடங்கப் பட்டது. தங்கள் இதழுக்கு எழுதிக்கொடுக்கும்படி வல்லிக்கண்ண னிடம் இந்த இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர். அவரும் இதில் எழுதிவந்தார்.

* அப்போது ஒரு கதையை எழுதி வல்லிக்கண்ணனிடம் இவர் கொடுக்க, அது ‘பிரசண்ட விகட’னில் பிரசுரமாக அவர் ஏற்பாடு செய்தார். அதன்பிறகு கதை, கவிதை என நிறைய எழுத ஆரம்பித்தார். 1945-ல் வங்கி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார்.

* பல்வேறு இலக்கிய அமைப்புகள், இலக்கிய ஆர்வலர்களோடு இணைந்து இலக்கியப் பணிகளை ஆற்றிவந்தார். பாரதியாரைத் தனது ஆதர்ச குருவாக வரித்துக்கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கினார்.

* சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், பிரபல இலக்கியவாதி ஜார்ஜி குலியா எழுதிய நீண்ட நாவலை, ‘வசந்தகாலத்தில்’ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பின்னர் இதழ்களில் விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். தலித்தியம், பெண்ணியம், தமிழியம், சூழலி யல், மார்க்சியம் உள்ளிட்ட முற்போக்குக் கொள்கைகள் சார்ந்தே இவரது இலக்கிய மதிப்பீடுகளும் செயல்பாடுகளும் இருந்தன.

* 1965-ல் தன் வங்கிப் பணியை விட்டுவிட்டு, சோவியத் கலாச்சார மையத்தில் செய்தித் துறையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். சோவியத் செய்திக் கட்டுரைகளை வேகமாகவும் சரளமாகவும் மொழிபெயர்ப்பார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘தாமரை’ இலக்கிய இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

* எழுத்தாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங் கள், பலதரப்பட்ட வாசகர்கள் எனப் பரந்த நட்பு வட்டாரத்தைக் கொண்டிருந்தார். அவர்களால் ‘தி.க.சி.’ என அழைக்கப்பட்டார். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய அமைப்புகள் குறித்து உணர்வுபூர்வமாகவும் உற்சாக மாகவும் பேசுவார்.

* தமிழில் வெளியாகும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகளை வாசித்து, அவற்றை எழுதிய ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு பாராட்டும் வழக்கம் கொண்டிருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுவார். பல புதிய எழுத்தாளர்கள் தோன்றக் காரணமாக இருந்தார்.

* மாதாந்தர, வாராந்தர பத்திரிகைகள், செய்தித்தாள்கள் உட்பட ஏராளமான நூல்களையும் வாசித்தார். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு என இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்தார். மதிப்புரைகள், கட்டுரைகள் ஆகியவை ‘தி.க.சி. கட்டுரைகள்’ என இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இவற்றுக்கு 2000-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

 இவரது வாழ்க்கை, எழுத்துப் பணிகள் குறித்து சென்னையில் இயங்கிவரும் தமிழ்க்கூடம் என்ற கலை - இலக்கிய அமைப்பு 2007-ம் ஆண்டு ஒரு ஆவணப்படம் தயாரித்தது. படைப்பாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய, திரைப்பட விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் 2014-ம் ஆண்டு 89-வது வயதில் மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x