Published : 28 Nov 2014 10:52 AM
Last Updated : 28 Nov 2014 10:52 AM

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 10

நவீன கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கிய எங்கெல்ஸ் பிறந்தநாள் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 பிரஷ்யாவில் (தற்போது ஜெர்மனி) பிறந்தவர். அப்பாவின் விருப்பப்படி, வணிகத்தில் ஈடுபட்டார். நீச்சல், கத்திச் சண்டை, குதிரை சவாரி, வேட்டை யிலும் சிறந்து விளங்கினார்.

 மொழிகளைக் கற்பதில் அபாரத் திறன் பெற்றிருந் தார். ‘எனக்கு 24 மொழிகள் தெரியும்’ என்று தன் சகோதரி யிடம் பெருமையடித்துக் கொள்வார். சிறுவனாக இருந்தபோதே மதங்கள், முதலாளித்துவம் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். தடைசெய்யப்பட்ட புத்தகங்களை தேடித் தேடிப் படித்து, புரட்சிகரக் கொள்கைகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

 மான்செஸ்டரில் உள்ள அப்பாவின் நூற்பு ஆலையில் வேலை செய்தபோது முதலாளித்துவத்தின் வரையற்ற அடக்குமுறையை நேரில் கண்டார்.

 சிறிது காலம் ராணுவத்தில் இருந்தார். 1842-ல் ராணுவ வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மோசஸ் ஹெஸ் என்பவரை சந்தித்தார். அவர்தான் இவரை கம்யூனிச ஆதரவாளராக மாற்றியவர். ஜெர்மன்-பிரெஞ்ச் இயர் புக் இதழுக்காக விஞ்ஞான சோஷலிசத்தின் கோட்பாடுகள் குறித்து 2 கட்டுரைகளை 1844-ல் எழுதினார். அதை பாரீஸில் இருந்த கார்ல் மார்க்ஸ் எடிட் செய்தார். பிறகு கார்ல் மார்க்ஸுடன் நட்பு உருவானது.

 எங்கெல்ஸ் மிகப் பெரிய அறிஞர், தத்துவ ஞானி. கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தவர். ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து வந்த இவர், பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்ட கார்ல் மார்க்ஸுக்கு உதவுவதற்காக மீண்டும் தந்தையின் நூற்பு ஆலையில் சேர்ந்தார். வியாபாரத்தைப் பெருக்கினார்.

 அங்கிருந்தபடியே கார்ல் மார்க்ஸ் பெயரில் நியூயார்க் டிரிப்யூன் இதழில் எழுதி வந்தார். பிறகு குடும்ப நூற் பாலையில் தனக்கான பங்கை விற்றார். அதில் கணிசமான பணம் கிடைக்கவே, கார்ல் மார்க்ஸுடன் அதிக நேரம் செல விட்டார். மார்க்ஸின் வீட்டுக்கு அருகிலேயே தங்கினார்.

 மார்க்ஸுடன் அவ்வப்போது உரையாடி பல புதிய கருத்துகளையும் அவருக்கு வழங்கினார்.

 ‘மதவாதம் மக்களின் வாழ்வை குலைக்கிறது. அது முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு சாதகமானது. முதலாளித்துவம் தொழிலாளிகளுக்கு வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி அவர்களை பீதியில் வைத்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் பொருளாதார நலனையே சுற்றி வருகின்றன’ என்பது அவரது கருத்து.

 கார்ல் மார்க்ஸுடன் இணைந்து பொது உடைமை அறிக்கையை தயாரித்தார். மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு ‘மூலதனம்’ (Das Capital) நூலை தொகுத்தார். நவீன கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக எங்கெல்ஸ் கருதப்படுகிறார்.

 மார்க்ஸ் மற்றும் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டார். மார்க்ஸின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த பிரெட்ரிக் எங்கெல்ஸ் 75-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x