Published : 10 Apr 2017 10:10 AM
Last Updated : 10 Apr 2017 10:10 AM

சாமுவேல் ஹானிமன் 10

ஹோமியோபதியைக் கண்டறிந்தவர்

ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜெர்மனி மருத்துவர் கிறிஸ்டியன் சாமுவேல் ஹானிமன் (Christian Samuel Hahnemann) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1755) பிறந்தவர். தந்தை பீங்கான் பொருள் வடிவமைப்பாளர், வண்ணம் பூசும் தொழிலாளி. அவர் தன் மகனிடம் நேர்மை, மனிதநேயம், கடின உழைப்பு போன்ற பண்புகளை விதைத்தார்.

* சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார் ஹானிமன். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, கிரேக்கம், லத்தீன், அரபிக், சிரியாக் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றார். மொழி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளராக வேலைசெய்துகொண்டே, லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

* வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணியாற்றினார். சிறந்த மருத்துவர் என பெயர் பெற்றபோதிலும், இது தவறான மருத்துவ முறையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

* குணம் பெற்றுச் சென்ற நோயாளிகள் மீண்டும் மீண்டும் மருத்துவரை நாடிச் செல்வது இவரை வருத்தப்படச் செய்தது. மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் இவரை சங்கடப்படுத்தியது. அந்தத் தவறை இனி செய்யக் கூடாது என்ற எண்ணத்துடன் மருத்துவம் பார்ப்பதையே நிறுத்திவிட்டு, மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

 வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். இதையடுத்து, அலோபதி மருத்துவ முறையின் பிரச்சினை என்ன? எது சரியான மருத்துவம்? என்ற கேள்வியுடன் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

* அப்போது, மலேரியா காய்ச்சலுக்கு அலோபதியில் சின்கோனா மருந்து வழங்கப்பட்டது. அதன் பட்டையைச் சாறு பிழிந்து அருந்தி காய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டு, தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனமாகக் குறிப்பெடுத்தார். அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டையின் சாற்றை உட்கொண்டு, நோயை குணப்படுத்திக்கொண்டார். இதை மற்றவர்களுக்கும் கொடுத்து குணமாக்கினார்.

* தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு, புதிய மருத்துவ முறையைக் கண்டறிந்தார். நோய் எதனால் தோன்றுகிறதோ, அதன்மூலமே நோயைக் குணப்படுத்த முடியும் என்றார். இவரது இந்தக் கண்டுபிடிப்பு உலகையே புரட்டிப் போட்டது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர், மருந்து குறித்த புதிய கோட்பாட்டை விளக்கும் கட்டுரையை 1796-ல் வெளியிட்டார்.

* தான் கண்டறிந்த மருந்துகளால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தினார். 1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இவற்றை தான் சாப்பிட்டும், நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தும் சோதித்துப் பார்த்தார்.

* இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. ஹோமியோபதி பள்ளி, கல்லூரி, கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஹோமியோபதிக்கான தத்துவத்தையும் உருவாக்கினர்.

* இவரது நூல்கள்தான் ஹோமியோபதி மருத்துவத்துக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. தனி மனிதனாக சுமார் 53 ஆண்டுகாலம் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x