Published : 29 Mar 2017 10:07 AM
Last Updated : 29 Mar 2017 10:07 AM

எட்வின் லட்யன்ஸ் 10

பிரிட்டன் கட்டிடக் கலை நிபுணர்

உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் கட்டிடக் கலை நிபுணர் சர் எட்வின் லான்சீர் லட்யன்ஸ் (Sir Edwin Landseer Lutyens) பிறந்த தினம் இன்று (மார்ச் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனில் பெரிய குடும்பத்தில் (1869) பிறந்தவர். தந்தை ராணுவ கேப்டன். ஆரம்பத்தில் வீட்டிலேயே பாடம் கற்றார். பின்னர் சவுத் கிங்ஸ்டன் பள்ளியில் பயின்றார். படம் வரைவதிலும், கலைப்பொருட்களை உருவாக்கிப் பார்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

* ராயல் கலைக் கல்லூரியில் பயின்றவர், படிப்பை முடிக்காமலேயே கட்டிடக் கலைஞர்களுக்கான நிறுவனத்தில் தொழில் கற்கும் மாணவராக வேலை பார்த்தார். பின்னர் தனிப்பட்ட முறையில் தொழிலைத் தொடங்கினார்.

* முதலில், ஒரு சிறிய தனியார் பள்ளியைக் கட்டும் வாய்ப்பு இவ ருக்கு கிடைத்தது. புதுவிதமான இவரது பாணி பலரையும் கவர்ந் தது. தன்னை நாடிவரும் வாடிக்கையாளர்களிடம் கட்டிடத்தின் வடி வமைப்பை உடனுக்குடன் அப்போதே வரைந்து காட்டிவிடுவாராம்.

* பாரம்பரிய முறைகளைத் தனது பாணிக்கேற்ப மாற்றி அதைப் பின்பற்றிவந்தார். பின்னர், பிரபல வடிவமைப்பாளரான கெட்ரூட் ஜேக்கல் எளிமையான, தெளிவான, குறிக்கோள் சார்ந்த அணுகுமுறையை இவருக்குக் கற்பித்தார். இவர்கள் இருவரும் இணைந்து வடிவமைத்த பல கட்டிடங்கள் வரவேற்பை பெற்றன.

* மன்ஸ்டெட் வுட், கொடால்மிங், சர்ரே ஆகிய இடங்களில் இவர் வடிவமைத்த கட்டிடங்கள் இவரது தனித்துவத்தை வெளிப்படுத்தின. பின்னர், மிகப் பெரிய பொதுக் கட்டிடங்கள் கட்டுவதில் கவனம் செலுத்தினார். இந்தியாவின் புதிய தலைநகராக புதுடெல்லியை வடிவமைப்பதற்கான அணியின் ஆலோசகராக 1912-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுடெல்லியை வடிவமைப்பதிலும், கட்டமைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

* ஐரோப்பிய, இந்திய கட்டிடக் கலை பாணியை இணைத்து பல கட்டிடங்களை வடிவமைத்தார். டேவனில் கேஸ்டில் டிராகோ, எண்ணற்ற தேவாலயங்கள், அலுவலகக் கட்டிடங்கள், கல்லறைகள், நினைவு மண்டபங்கள் போன்றவை இவரது வடிவமைப்புக் கலையைப் பறைசாற்றுகின்றன.

* இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டெல்லியின் ஒரு பகுதி ‘லட்யன்ஸ் டெல்லி’ என்று அழைக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்தியா கேட், தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையாக உள்ள வைஸ்ராய் ஹவுஸ் ஆகியவற்றை வடிவமைத்தார். குறிப்பாக இவர் வடிவமைத்த வைஸ்ராய் ஹவுஸ், இங்கிலாந்தின் பாரம்பரிய கட்டிடக் கலை பாணியுடன் இந்திய அலங்கார அம்சங்களையும் கொண்டிருந்தது.

* ஹைதராபாத் ஹவுஸ், பரோடா மன்னருக்காக பரோடா ஹவுஸ், பட்டியாலா ஹவுஸ், ஞான்பத், ராஜ்பத் சாலைகள் வடிவமைப்பையும் திட்டமிட்டார். இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் இவரது புகழ் பரவியது. 1918-ல் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.

* இம்பீரியல் வார் கிரேவாஸ் கமிஷனில் கட்டிடக் கலைஞராகப் பதவி ஏற்றார். பாரம்பரிய மரபுசார் கட்டிடக் கலை பாணியை தழுவி, கற்பனை கலந்து தற்காலத்துக்கு ஏற்ப வடிப்பதில் வல்லவர் எனப் புகழ்பெற்றார். இங்கிலாந்தில் ஏராளமான கிராமிய வீடுகள், போர் நினைவுக் கட்டிடங்கள், பொது கட்டிடங்களை வடிவமைத்தார்.

* கட்டிடக் கலை வரலாற்றிலேயே அதிக அளவிலான கட்டிடங்கள், நினைவு மண்டபங்களைக் கட்டியவர் என்று புகழப்படும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கட்டிடக் கலைஞரான எட்வின் லட்யன்ஸ் 75-வது வயதில் (1944) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x