Published : 15 Feb 2017 04:55 PM
Last Updated : 15 Feb 2017 04:55 PM

யூடியூப் பகிர்வு: சதையை மீறி வலியைப் பேசும் பாடல் வீடியோ

எங்கும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், மூன்றாம் பாலினத்தவரின் நிலை மட்டும் மாறாமலேயே இருக்கிறது.

திருநங்கைகள் குறித்த மற்றுமொரு விழிப்புணர்வுப் படமா என்று பார்த்தால்,

''நியாயக் கூண்டிலே நம்மைக் காலம் தள்ளும் விதிப்படி

இவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி''

என்ற வரிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

திருநங்கைகளின் வலியும், தனிமையும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லோரின் எதிர்பார்ப்பான திருமண வாழ்வின் மீதான அவர்களின் ஏக்கத்தையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். வழியில்லாமல், விருப்பமே இல்லாமல் அவர்களின் மீதான தொழிலாகத் திணிக்கப்பட்ட இரவு நேரக் காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன.

திருநங்கைகளோடு, ஆணாய் மாறும் திருநம்பிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமும் அழகாய்ப் படைக்கப்பட்டிருக்கிறது.

தன் இயல்புப்படி வாழ நினைக்கும் திருநங்கையர்களின் நிலை என்னவானது என்பதை வலி தந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. சந்தோஷ் நாராயணனின் இசை, குறும்படத்தின் உண்மைத்தன்மையை கூட்டுகிறது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் இதயம் சுடுகின்றன.

''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல

சர்க்கரை மட்டும் கலப்போம்

நாம் மனிதரே!''

உண்மைதானே?

காணொலியைக் காணுங்கள், கொஞ்சம் மனம் திறங்கள்: