Published : 29 Jan 2017 10:54 AM
Last Updated : 29 Jan 2017 10:54 AM
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் படைப்பாளி ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) பிறந்த தினம் இன்று (ஜனவரி 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸ் நாட்டின் கிளாமசி என்ற இடத்தில் வசதியான விவசாயக் குடும்பத்தில் (1866) பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். தத்துவத்தில் பட்டம் பெற்றார். இசையையும் ஆர்வத்துடன் கற்றார்.
* வரலாற்று நாடகக் கலை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, முனைவர் பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகவும், பின்னர் ஒரு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சர்போன் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இசைத் துறையில் இசை வரலாற்றுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
* எழுத்தாற்றல் மிக்க இவர் 1902-ல் எழுதத் தொடங்கினார். முதலில் ஒருசில நாடகங்கள் எழுதினார். பின்னர் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாவல்களும் எழுதத் தொடங்கினார். 1912-ல் பல்கலைக்கழகப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர எழுத்தாளரானார்.
* டால்ஸ்டாயின் படைப்புகள், பீத்தோவன் இசை, மைக்கலேஞ்சலோவின் ஓவியம் ஆகியவை வெகுவாகக் கவர்ந்ததால், அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவை நல்ல வரவேற்பை பெற்றன.
* ஒருமுறை தாகூரை சந்தித்தபோது, இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற தனது ஆர்வத்தை தெரிவித்தார். ‘விவேகானந்தரைப் படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்’ என்று தாகூர் கூற, ஆங்கிலம் தெரிந்த தன் சகோதரியின் உதவியோடு விவேகானந்தரின் நூல்களைப் படித்தார்.
* இந்திய வேதாந்த தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படைத்தார். பல இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். உலகம் முழுவதும் பிரபலமானார். உடல்நலப் பிரச்சினை, போர், பயணங்கள் என பல தடங்கல்களை எதிர்கொண்டாலும் எழுதுவதை இவர் நிறுத்தியதே இல்லை.
* உலகில் பல நாடுகள் குறுகிய மனப்பான்மையோடு சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு வேதனை அடைந்தார். மனிதநேயத்தை வலியுறுத்தும் ‘அபவ் தி பேட்டில்’ நூலைப் படைத்தார். ‘மானிட இனம் பரஸ்பரம் அன்பால் ஒன்றிணைய முடியாதா’ என்ற கேள்வி இவருக்குள் எழுந்தது. இதையே கருப்பொருளாக்கி ‘ஜீன் கிறிஸ்டோஃபி’ என்ற நாவலை எழுதினார். இது 10 தொகுதிகளாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது.
* இப்படைப்புக்காக 1915-ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. ‘தி வேர்ல்டு ஆஃப் எஸ்டர்டே’ என்ற இவரது சுயசரிதையும் உலகப்புகழ் பெற்றது. ‘தி டைம் வில் கம்’, ‘லி 14 ஜுலியட்’ உள்ளிட்ட இவரது பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
* காந்திஜியை மிகவும் நேசித்தார். வாழ்நாள் இறுதிவரை அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் மனிதராக காந்திஜியை இவர் தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் தன்னை முத்தமிட்டதை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு மகிழ்ந்தார். சிக்மண்ட் பிராய்டுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.
* நாவலாசிரியர், நாடகாசிரியர், வரலாற்று அறிஞரான ரோமைன் ரோலண்ட் 78-வது வயதில் (1944) மறைந்தார். உலகத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுடனான தனது நட்பு குறித்து இவர் எழுதியிருந்த நூல், ‘மெமரீஸ்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT