Published : 16 Sep 2016 11:14 AM
Last Updated : 16 Sep 2016 11:14 AM
தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்
என அன்போடு அழைக்கப்படுபவரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் (1922) பிறந்தவர். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயர். இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். தந்தை விவசாயி.
*ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.
*கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.
*வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.
*பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
* சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
*‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
*பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.
*கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
*வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணன் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் வசிக்கும் இவர், தள்ளாத வயதிலும் சோர்வின்றி எழுதி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT