Published : 22 Aug 2016 10:08 AM
Last Updated : 22 Aug 2016 10:08 AM
இலங்கை எழுத்தாளர், கலை ஆர்வலர்
இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகச் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த முன்னோடியான இலங்கை படைப்பாளி ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி (Ananda Kentish Coomaraswamy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இலங்கை தலைநகர் கொழும்பில் (1877) பிறந்தவர். பிரபல வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளராக விளங்கிய தந்தையை 2 வயதில் இழந்தார். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், கணவர் இறந்ததும் குழந்தையுடன் இங்கிலாந்து சென்றார்.
* லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்ற குமாரசுவாமி, புவிஅமைப்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்களம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 14 மொழிகள் அறிந்தவர். 18 வயதில் இருந்தே ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.
* கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை ஒப்பிட்டு பல நூல்களை எழுதினார். இலங்கைக்கு 1903-ல் திரும்பியவர் மண்ணியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். ‘தோரனைட்’ என்ற தாதுப்பொருளைக் கண்டறிந்ததற்காக, லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
* பணிதொடர்பாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றபோது, பாழடைந்து கிடந்த கோயில்கள், விஹாரங்கள், அங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்தார். சுதேசிக் கலைகளுக்குப் புத்துயிர் அளிக்கவும், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடந்த இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவும் சமூக சீர்திருத்த சங்கத்தை 1905-ல் தொடங்கினார்.
* அதன் சார்பில் ‘சிலோன் நேஷனல் ரெவ்யூ’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது, இந்திய கலைகள் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
* ‘இந்தியா மீது அன்பு கொள்ளாவிட்டால், இலங்கைக்கு வாழ்வில்லை’ என்று கூறியவர். நல்ல பேச்சாளர். இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதையுடன் ஆழ்ந்த நட்பு கொண்டவர். நிவேதிதையுடன் இணைந்து பவுத்த புராணக் கதைகளைத் தொகுத்தளித்தார்.
* சிவநடனத்தை விளக்கி ‘சித்தாந்த தீபிகா’ என்ற இதழில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார். இதன்மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி என போற்றப்படுகிறார். பல கலைகள் குறித்தும் அறிந்ததால், ‘கலாயோகி’ என புகழப்பட்டார்.
* லண்டனில் ‘இந்தியக் கழகம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். 1912-ல் சாந்தி நிகேதனுக்கு வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தென் இந்தியாவிலும் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் இருந்தபோது யோகா கற்றார். ‘பிரபுத்த பாரதா’ என்ற இதழில் தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலை அருங்காட்சியகத்தில் கிழக்கத்திய நாடுகள் பிரிவின் கலைக் காப்பாளராகப் பணிபுரிந்தார். 1933-ல் அங்கு ஆய்வாளராகப் பணியாற்றினார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று கலைப் பொருட்களைச் சேகரித்தார். இந்தியக் கலைகள், திராவிட நாகரிகம் குறித்து பல இடங்களில் உரை நிகழ்த்தினார்.
* பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். புத்தகங்கள், கட்டுரைகள் என 500-க்கு மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், திறனாய்வாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி 70-வது வயதில் (1947) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT