Last Updated : 16 Feb, 2017 10:07 AM

 

Published : 16 Feb 2017 10:07 AM
Last Updated : 16 Feb 2017 10:07 AM

என்னருமை தோழி...!- 34: புத்தகப் புழு!

‘இனிது.. இனிது ஏகாந்தம் இனிது’... என்ற அவ்வையாரின் கூற்றுப்படி, உங்களுக்கு நீங்களே விதித்துக் கொண்ட வனவாசத்தின்போது, வெளியுலகத் தொடர்பினை அடியோடு துண்டித்துக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்தக் காலம் உங்களுக்கு மிக இனிமையாகக் கழிந்தி ருக்கும். பின்னர், பொதுவாழ்வில் ஈடுபட்டு தமிழகத்தின் முதல்வராகி ஓயாமல் மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்தத் தனிமை உங்களுக்குத் தேவைப்பட்டதோ என்னவோ!

வேதா நிலையத்தைச் சுற்றி இரும்புத்திரை ஒன்றை அமைத்துக்கொண்டு, தங்கள் இல்ல நூலகத்தில் ஒரு கூட்டுப் புழுவாக அரிய நூல்களை படித்துக் கொண்டிருந்தீர்கள். துயரங்களை மறக்க, புத்தகங்களின் நடுவே உங்களைப் புதைத்துக் கொண்டதாக பின்னர் கூறினீர்கள். காலையில் ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினால், நண்பகலில் அதை முடித்துவிடுவீர்கள்.

பிறகு, அடுத்த புத்தகத்தை தொடங்கி இரவுக்குள் அதனை முடித்துவிடுவீர்கள். சமையல்கார பெண்மணி ஒருவர் மயிலை பகுதியிலிருந்து அன்றாடம் வந்து சமைத்து வைத்துவிட்டுப் போவார். பள்ளி நாட்களில் இருந்து தங்களுக்காக காரோட்டும் மாதவன் என்கிற ஓட்டுநர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருடன் மட்டுமே உங்களது பேச்சு இருந்தது. தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் நீங்கள் அதனை தவிர்த்துவிடுவீர்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பணியாளர்கள்தான் செல்வது வழக்கம். நீங்கள் வெளியே செல்ல நேரிட்டாலும், அது இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இருக்கும். உங்களுக்குப் பிரியமான, நீங்கள் வளர்த்து வந்த அரை டஜன் நாய்களுக்கு உணவு வாங்குவதற்கும் புத்தகங்கள் வாங்க ஹிக்கின் பாதம்ஸ் போவதற்கு மட்டுமே வெளியே செல்வீர்கள்.

பிரபலமான நீங்கள் வெளியே சென்றால் மக்கள் கூட்டம் கூடி அன்புத் தொல்லை கொடுக்கும் என்பதால் நீங்களும் உங்கள் தோழி ஷீலாவும் சினிமாவுக்கும் ஷாப்பிங் செல்லும்போதும் பர்தா அணிந்து செல்வது வழக்கம். ‘ரிக் ஷாக்காரன்’ உட்பட பல படங்களை பர்தா அணிந்து சென்று இரு வரும் திரையரங்கில் பார்த்திருக்கிறீர்கள். அதேபோலவே, நீங்கள் தனிமையாக இருந்தபோது ஷாப்பிங் செல்லும் நேரங்களில் பர்தா அணிந்தே செல்வீர்கள். அவசியம் இருந்தால் மட்டுமே முகத்திரையை உயர்த்தி கடை ஊழியர்களிடம் பேசுவீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்து, ‘நாம் காண்பது கனவா’ என்று அவர்கள் நம்ப முடியாமல் பிரமித்து போய் நிற்பார்கள்.

நீங்களாக விதித்துக்கொண்ட இந்த வனவாச காலத்தில்தான் நீங்கள் உலகத்தை கற்றுணர்ந்ததாக என்னிடம் கூறினீர்கள். படங்களில் நடிப்பதையும் பெருமளவில் குறைத்துவிட்டீர்கள். அந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாடகை மூலம் கிடைத்த மாத வருமானம் 40 ஆயிரம் ருபாய். அதில் 12 ஆயிரம் ரூபாயை உங்கள் செல்லப் பிராணிகளின் உணவுக்காக செலவு செய்து விட்டு, 4 ஆயிரம் ரூபாய்க்கு புதிய புத்தகங்களை வாங்கு வீர்கள். மீதி பணத்தை மட்டுமே வீட்டு செலவுகளுக்கு எடுத்துக் கொள்வீர்கள்.

உங்களது வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டி ருந்தது. புத்தகங்களை படிப்ப தோடு நிறுத்திவிட மாட்டீர்கள். பாலையும் நீரையும் சேர்த்து பருகும் அன்னப் பறவை, பாலை விழுங்கிவிட்டு நீரை உமிழ்வது போல, நீங்களும் நல்ல விஷயங் களை கிரகித்துக் கொண்டு, தேவையற்ற விவரங்களை நிராக ரித்துவிடுவீர்கள். அறிவியல், அரசியல், வரலாறு, சமூகம், தத்துவம், ஆன்மிகம், பொருளா தாரம் என்று பல துறைகளில் உங்கள் வாசிப்பு ஆழமானது.

என்னருமை தோழி...!

கல்லூரிப் படிப்பு படிக்க வில்லையே என்ற ஏக்கம் உங் களுக்கு உண்டு. அதனாலோ என்னவோ கல்லூரிப் படிப்பைவிட ஆழமாக, பரந்துபட்ட பல துறைகளின் நூல்களை விரும்பிப் படித்து உங்கள் உலக அறிவை விசாலப்படுத்திக் கொண்டீர்கள். இந்த வாசிப்புதான் பிற்காலத்தில் அரசியலில் எந்த ஒரு துறை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் உடனடியாக புரிந்துகொள்ளவும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் உங்களுக்கு உதவியது.

ஜேன் ஆஸ்டென்னின் 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்', 'எம்மா,' ரெய்னோல்ட்ஸ்ஸின் ‘கோர்ட் ஆஃப் லண்டன்', சோமர்செட் மாமின் ‘லிஜா ஆஃப் லம்பேத்’, ‘தி ரேசர்ஸ் எட்ஜ்’, ஆயின் ரெண்ட்டின் ‘அட்லாஸ் ஷ்ரக்ட்’, சாணக்ய நீதி, பகவத் கீதை போன்ற புத்தகங்களை மிகவும் ரசித்து படித்தீர்கள். எப்போது சுற்றுப் பயணம் செய்தாலும், எரிக் வோன் டானிக்கெனின் ‘சாரியாட் ஆஃப் தி காட்ஸ்’ என்கிற புத்தகத்தை எடுத்து வைக்குமாறு உதவியாளர்களிடம் சொல்வீர்கள். ‘யூ எப் ஓ’ என்கிற விண்வெளியில் பறக்கும் தட்டு களைப் பற்றி படிப்பதில் உங்களுக்கு மிகவும் ஆர்வம். இதை ஒரு பேட்டியிலும் தெரிவித்திருந்தீர்கள்.

மேரி எம் லூக்கின் ‘எ கிரவுன் ஃபார் எலிசபெத்’, ஜார்ஜ் ஆர்வெலின் ‘அனிமல் பார்ம்’ ஆகிய நாவல்கள் உங்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத் திய புத்தகங்கள் என்பதை என்னிடம் ஒருமுறை கூறினீர்கள். ஓய்வுக்காக கோட நாடுக்கு செல்லும் போது பெட்டி நிறையபுத்தகங்கள் உங்களுடன் வரும். நான் எழுதிய நாவலான ‘ரங்கராட்டின’த்தைப் படித்ததும், உங்களுக்கு ஒரு யோசனை தோன்றியதாகக் கூறினீர்கள். இதுகுறித்து அரசியல் சம்பந்தப்பட்ட ‘யுத்த காண்ட’த்தில் பின்னர் கூறுகிறேன்.

‘புத்தகங்களின் மீது இவ்வளவு காதல் கொண்டுள்ள ஜெயலலிதா ஏன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எதிர்த்தார்..?’ என்று நிறைய வாசகர்கள், ‘என்னருமை தோழி’ தொடர் ஆரம்பித்த உடனேயே, என்னை மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கேட்டனர்.

எனக்கும் இதுபற்றி மனதில் சந்தேகம் இருந்து வந்தது. துணிச்சலுடன் அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசியவன், என் மனதைக் குடைந்து கொண்டிருந்த இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பேனா? அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி மட்டும் அல்ல; காலில் விழும் கலாச்சாரம், திமுக-அதிமுக தலைவர்களிடையே நிலவி வந்த தனிப்பட்ட விரோதம் போன்றவற்றைப் பற்றி அவரிடம் துணிவுடன் கேட்டு பதிலையும் பெற்றிருக்கிறேன்.

அவர் என் மீது வைத்திருந்த தனிப்பட்ட ஆன்மிக நட்பையும், நம்பிக்கையையும் பிரயோகித்து, ‘லைன் ஆஃப் கண்ட்ரோலை’ பலமுறை தாண்டியிருக்கிறேன். அவர் சிறிதும் எரிச்சலடையாமல் எனக்கு பதில் தந்திருக்கிறார்.

புத்தகப் புழுவான அவரிடம் வியப்புடன் கேட்டேன்… ‘‘சுமார் 40 ஆயிரம் புத்தகங்களை உங்கள் நூலகத்தில் வைத்திருக்கிறீர்கள். புதிது புதிதாக புத்தகங்களை வாங்கித் தள்ளு கிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், எப்படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய விஷயத்தில் விமர்சனங்களுக்கு உள்ளா னீர்கள்..?’’

அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து உங்களது மனதில் உள்ளதை நீங்கள் கொட்டியபோது நான் அசந்துதான் போனேன்!

- தொடர்வேன்… | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x