Published : 09 May 2017 10:08 AM
Last Updated : 09 May 2017 10:08 AM
கன்னட எழுத்தாளர், இலக்கியவாதி
கன்னட இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளரான ஏ.என்.கிருஷ்ணராவ் (A.N.Krishna Rao) பிறந்த தினம் இன்று (மே 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலத்தின் கோலார் நகரில் (1908) பிறந்தவர். அரகலகுடு நரசிங்கராவ் கிருஷ்ணராவ் என்பது முழுப்பெயர். பின்னாளில் சுருக்கமாக ‘அ.நா.க்ரு’ (Anakru) என அழைக்கப்பட்டார். புத்தகம் படிப்பதிலும், எழுதுவதிலும் சிறு வயதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்.
* படிப்பை முடித்த பிறகு, எழுத்தாளராக விரும்பினார். ஆரம்பத்தில் கதாமஞ்சரி, விஷ்வவாணி போன்ற இலக்கிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் கன்னட இலக்கியத்தில் கலை, அழகு, குறித்து எழுதப்படும் ‘நவோதயா’ பாணியே நடைமுறையில் இருந்தது.
* துயரம் நிறைந்த மக்களின் வாழ்க்கையை, யதார்த்த நிலையை இந்த வகை எழுத்துகள் பிரதிபலிக்கவில்லை என்று கருதினார். எனவே, இலக்கியத்தில் ‘பிரகதிஷீலா’ என்ற புதிய முறையை உருவாக்கினார். இலக்கியத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கருதினார்.
* இவரது படைப்புகள் மக்களின் வாழ்க்கை நிலை, சமூகத்தின் யதார்த்த நிலை, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை நன்கு பிரதிபலித்தன. இவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்ட படைப்பாளிகள் பலரும் இதே முறையைப் பின்பற்றத் தொடங்கினர். கன்னட வாசகர்களுக்கு சமூக நாவல்களை அறிமுகம் செய்துவைத்தார்.
* தனது மொழித்திறன், படைப்புத்திறன், மொழிப் பற்று, சமூக அக்கறை ஆகியவற்றால் வாசகர்களை வசீகரித்தார். இவரது முதல் நாவல் ‘ஜீவனயாத்ரே’. தொடர்ந்து பல நாவல்கள் எழுதினார். அது மட்டுமின்றி, நாடகங்கள், இலக்கிய விமர்சன நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், சிறுகதைகளும் படைத்து, இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்தார்.
* சாமானிய மக்களிடமும் இலக்கியம் சென்றடைய வேண்டும் என விரும்பினார். நெறிகளுக்கு உட்படாத இவரது அணுகுமுறை பரவலான வரவேற்போடு, எதிர்ப்பையும் பெற்றன. இளைஞர்கள் இவரது எழுத்துகளை ஆர்வத்துடன் படித்தனர். ஆலை ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள், ரிக் ஷா ஓட்டுநர்கள் போன்றவர்களும் இவரது தீவிர வாசகர்களாக மாறினர்.
* தேசிய அளவில் கன்னட இலக்கியத்தை திரும்பிப் பார்க்கச் செய்தார். ‘அமர சேதனா’ என்ற சுயசரிதையை எழுதினார். கன்னட மொழி இலக்கிய உலகில் ‘காதம்பரி சர்வபவுமா’ (நாவல்களின் மன்னர்) எனப் போற்றப்பட்டார். இவரது ‘சந்தியாராகா’ நாவல், கன்னடத்தில் அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது.
* கன்னட சாகித்ய பரிஷத்தின் கன்னட நூடி இதழிலும் ஆசிரியராக செயல்பட்டார். மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் போன்ற முன்னணி படைப்பாளிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்காங்கே வாழ்ந்த கன்னட மக்களை ஒன்றுதிரட்ட பெரிதும் பாடுபட்டார்.
* இவர் நல்ல பேச்சாளரும்கூட. மக்களிடம் மொழி, நாடு, சமூகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தன் சொந்த செலவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று சொற்பொழிவு நிகழ்த்தினார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கர்நாடக சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.
* படைப்புலகில் முடிசூடா மன்னராக ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் திகழ்ந்தார். இறுதிவரை கன்னட இலக்கியத்துக்கும், கன்னட மொழிக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஏ.என்.கிருஷ்ணராவ் 63-வது வயதில் (1971) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT